ஐ.பி.எல். தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிவரும், மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் க்ரிஸ் கெயில் T20 போட்டிகளில் 1000 சிக்ஸர்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். தொடரின் 50 ஆவது போட்டி அபுதாபியில் இன்று (30) நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணியின், க்ரிஸ் கெயில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
IPL இல் அதிக விலைக்கு எடுக்கப்பட்டு சொதப்பிய வீரர்கள்
க்ரிஸ் கெயில் T20 போட்டிகளில் 993 சிக்ஸர்களுடன் இன்றைய போட்டியில் களமிறங்கியிருந்தார். எனினும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்ட கெயில் 8 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 99 ஓட்டங்களை பெற்று, துரதிஷ்டவசமாக சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.
சதத்தை தவறவிட்ட போதும், T20 போட்டிகளில் 1000 சிக்ஸர்கள் என்ற புத்தம் புதிய சாதனையை க்ரிஸ் கெயில் பதிவுசெய்துள்ளார். 2005 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுவரை க்ரிஸ் கெயில் 410 T20 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளார்.
க்ரிஸ் கெயில் மொத்தமாக 1001 சிக்ஸர்களுடன், T20 போட்டிகளில் அதிகூடிய சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை தன்னகத்தே வைத்துள்ளதுடன், இந்தப் பட்டியலின் இரண்டாவது இடத்தை மேற்கிந்திய தீவுகள் அணியின் மற்றுமொரு அதிரடி துடுப்பாட்ட வீரரான கீரன் பொல்லார்ட் பிடித்துள்ளார்.
பொல்லார்ட் ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருவதுடன், அவர் மொத்தமாக 524 T20 போட்டிகளில் விளையாடி 690 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்தப் பட்டியலின் மூன்றாவது இடத்தினை நியூசிலாந்து அணியின் பிரெண்டன் மெக்கலம் பிடித்துள்ளார். இவர் 370 T20 போட்டிகளில் விளையாடி 485 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
Video – முன்னணி வீரர்களின் வெளியேறல் LPL ரசிகர்களுக்கு ஏமாற்றமா?
அதேநேரம், ஐ.பி.எல். தொடரில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் பட்டியலிலும், க்ரிஸ் கெயில் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். இவர் 131 போட்டிகளில் விளையாடி 349 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்தப் பட்டியலில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஏபி டி வில்லியர்ஸ் 232 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தையும், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா 216 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இதேவேளை, இன்று நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை தக்கவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<