45ஆவது கோபா அமெரிக்காக் கிண்ண கால்பந்துப் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த கிண்ணத்தின் மற்றுமொரு போட்டியில் இன்று அதிகாலை சிலி- பனாமா அணிகள் மோதின.
இதில் வெல்லும் அணி கால்இறுதி வாய்ப்பைப் பெறும் என்ற நிலையில் இரு அணிகளும் களம் இறங்கின. இதனால் இரு அணி வீரர்களும் அக்ரோஷத்தைக் காட்டினர்.
5ஆவது நிமிடத்தில் பனாமா வீரர் கமார்கோ கோல் அடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிலி வீரர்கள் வேகத்தைக் கூட்டினர். சிலி அணி வீரர் வர்காஸ் 15ஆவது நிமிடத்திலும், 43ஆவது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினார். முதல் பாதியில் சிலி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
2ஆவது பாதியில் சிலி வீரர் சான்சீஸ் 50ஆவது நிமிடத்தில் தனது அணிக்கு 3ஆவது கோலை அடித்தார். 75ஆவது நிமிடத்தில் பனாமா வீரர் அர்ரோயோ 2ஆவது கோலை அடித்தார்.
3-2 என்ற கோல் கணக்கில் இருந்ததால் பனாமா வீரர்கள் மற்றொரு கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் 89ஆவது நிமிடத்தில் சிலி வீரர் சான்சீஸ் 4ஆவது கோலை அடித்தார். ஆட்ட முடிவில் சிலி அணி 4-2 என்ற கோல் கணக்கில் பனாமாவைத் தோற்கடித்தது.
வர்காஸ், கான்சீஸ் தலா 2 கோல்கள் அடித்தனர். இந்த வெற்றி மூலம் சிலி அணி கால்இறுதிக்குத் தகுதி பெற்றது. அந்த அணி கால்இறுதியில் மெக்சிகோவுடன் 18ஆம் திகதி மோதுகிறது.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஆர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை தோற்கடித்தது. லமெலா (13ஆவது நிமிடம்), லெவிஸ்சி (15ஆவது நிமிடம்), குயிஸ்டா (32ஆவது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர்.
இன்றுடன் ‘லீக்’ஆட்டங்கள் முடிந்தது. நாளை முதல் கால்இறுதிப் போட்டி நடக்கிறது. இதில் அமெரிக்கா– ஈக்வேடார் அணிகள் மோதுகின்றன. 17ஆம் திகதி நடக்கும் 2ஆவது கால்இறுதியில் கொலம்பியா– பேரு அணிகளும், 18ஆம் திகதி நடக்கும் ஆட்டங்களில் அர்ஜென்டினா– வெனிசூலா, மெக்சிகோ–சிலி அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்