மதீஷ பதிரணவின் அற்புதமான பந்துவீச்சு பிரகாசிப்புடன் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சுபர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகு வெற்றியை பெற்றுக்கொண்டது.
IPL தொடரின் 49வது போட்டியில் இரண்டு அணிகளும் மோதியதுடன், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சுபர் கிங்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொடுத்தது.
சுழல் வீரர்களுடன் இலகு வெற்றியினைப் பதிவு செய்த குஜராத் டைடன்ஸ்
முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பெற்றுக்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி பவர்-பிளே ஓவர்களில் தடுமாற தொடங்கியது. அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களான கிரிஸ் கிரீன், ரோஹித் சர்மா மற்றும் இசான் கிஷன் ஆகியோரின் விக்கெட்டுகள் 14 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன.
இவர்களின் ஆட்டமிழப்பின் பின்னரும் சூர்யகுமார் யாதவ் 26 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க அணி மேலும் பின்னடைவை சந்தித்தது. எனினும் இளம் வீரர் நெஹால் வெதேரா அபாரமாக ஆடி அரைச்சதம் ஒன்றை பதிவுசெய்ய (64 ஓட்டங்கள்) 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து மும்பை இந்தியன்ஸ் அணி 138 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பந்துவீச்சை பொருத்தவரை கடைசி ஓவர்களில் சென்னை அணிக்காக அபாரமாக பந்துவீசிவரும் மதீஷ பதிரண 4 ஓவர்களில் வெறும் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை சாய்த்தார். தன்னுடைய யோர்க்கர் பந்துகளால் எதிரணியை மதீஷ பதிரண தடுமாற வைத்ததுடன், தீபக் சஹார் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
துடுப்பாட்டத்துக்கு சற்று சவாலான ஆடுகளமாக இருந்தாலும், மும்பை அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை அடைய ருதுராஜ் கைக்வாட் வேகமான ஆரம்பத்தை தந்தார். இவர் 16 பந்துகளில் 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் டெவோன் கொன்வே 44 ஓட்டங்களையும், அஜின்கியா ரஹானே 21 ஓட்டங்களையும் பெற்றனர்.
மறுபக்கம் வேகமாக துடுப்பெடுத்தாடி 18 பந்துகளில் சிவம் டுபே 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, அம்பத்தி ராயுடு மற்றும் டோனி ஆகியோர் சிறிய பங்களிப்புகளுடன் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர்.
சென்னை சுபர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் வெற்றியிலக்கை கடந்ததுடன், பந்துவீச்சில் பியூஸ் சௌவ்லா 2 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினார். எனவே இந்த வெற்றியுடன் தங்களுடைய 6வது வெற்றியை பதிவுசெய்த சென்னை சுபர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் 13 புள்ளிகளை பெற்று 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், மும்பை இந்தியன்ஸ் அணி 10 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 6வது இடத்தை பிடித்துள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<