ஆர்ஜன்டீன மத்திய கள வீரரான பென்பிகா கழக அணியின் என்சோ பெர்னாண்டஸை செல்சி கழகம் இங்கிலாந்தின் சாதனை தொகையான 121 மில்லியன் யூரோவுக்கு (107 பௌண்ட்) வாங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தம் 2021இல் ஜக் கிரீலிஷை 100 மில்லியன் பௌண்டுக்கு மன்செஸ்டர் சிட்டி வாங்கிய சாதனையை முறியடிப்பதாக உள்ளது.
பெர்னான்டஸ் கடந்த ஓகஸ்ட் மாதமே 10 மில்லியன் பௌண்டுக்கு பென்பிகா அணியில் இணைந்திருந்தார். அவர் கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் ஆர்ஜன்டீன சம்பியனான நிலையில் சிறந்த இளம் வீரர் விருதை வென்றார்.
- FIFAவின் இலங்கை மீதான தடையை நீக்க என்ன செய்ய வேண்டும்?
- பிரான்ஸ் அணித்தலைவர் லொரிஸ் ஓய்வு
- புதிய சாதனையுடன் சவூதி கழகத்தில் இணைந்த ரொனால்டோ
பெர்னாண்டஸை வாங்கியதன் மூலம் செல்சி ஜனவரி மாதத்தில் செலவிட்ட தொகை 289 மில்லியன் பௌண்ட் உச்சத்தை தொட்டது. இது புதிய சாதனையாகவும் அமைந்தது.
அவர் செல்சி அணிக்காக எட்டரை ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் மூலம் அதிக விலைக்கு ஒப்பந்தமான வீரர்கள் வரிசையில் பெர்னாண்டஸ் ஆறாவது இடத்தை பிடித்திருப்பதோடு 2019இல் பிரான்ஸ் முன்கள வீரர் அன்டோனியோ கிரீஸ்மனை வாங்க பார்சிலோனா செலவிட்ட 120 மில்லியன் யூரோவுக்கு நிகரான தொகையாக இது உள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு 200 மில்லியன் பௌண்ட் தொகைக்கு பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் ஒப்பந்தமானதே இதில் சாதனை தொகையாக உள்ளது.
போர்த்துக்கலின் பென்பிகா அணிக்காக பெர்னாண்டஸ் 29 போட்டிகளில் ஆடி நான்கு கோல்களை பெற்றுள்ளார். இந்நிலையில் இந்த பரிவர்த்தனை மூலம் 25 வீத கட்டணமாக 30 மில்லியன் யூரோக்களை பெற்றதாக பென்பிகா அணி கடந்த செவ்வாய் இரவு உறுதி செய்தது.
பிஃபா உலகக் கிண்ணத்தில் பெர்னாண்டஸ் ஒரு கோலை பெற்றிருந்தார். மெக்சிகோவுக்கு எதிரான குழுநிலை போட்டியில் அவரது கோல் மூலம்
ஆர்ஜன்டீன அணி 2–0 என வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<