அனித்தாவின் சாதனையை முறியடித்த சாவகச்சேரி இந்து மாணவி டக்சிதா

277

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்ற 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளின் இரண்டாம் நாளான இன்று (31) காலை நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் போட்டியிட்ட யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி என். டக்சிதா புதிய போட்டிச் சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். 

புதிய போட்டிச் சாதனையுடன் தங்கம் வென்றார் புவிதரன்; அப்துல்லாஹ், சயிபுக்கு வெற்றி

கல்வி அமைச்சின் பூரண மேற்பார்வையின்…..

அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற தேசிய கனிஷ்ட சம்பியனான டக்சிதா, இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில் முதல்தடவையாக 20 வயதுக்குட்பட்ட வயதுப் பிரிவில் களமிறங்கியிருந்தார்

ஆரம்பத்தில் 2.90 மீற்றர், 3.00 மீற்றர், 3.10 மீற்றர் உயரங்களை அடுத்தடுத்து தாவிய அவர், குறித்த வயதுப் பிரிவின் போட்டி சாதனையான 3.25 மீற்றர் உயரத்தை 3ஆவது முயற்சியிலும், 3.35 மீற்றர் உயரத்தை 2ஆவது முயற்சியிலும் தாவி புதிய போட்டி சாதனையை நிலைநாட்டினார்.

முன்னதாக 2014ஆம் ஆண்டு தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவி அனித்தா ஜெகதீஸ்வரன் 3.32 மீற்றர் உயரத்தைத் தாவி நிலைநாட்டிய சாதனையை சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு இவர் முறியடித்தார்.

இதனைத் தொடர்ந்து, 3.45 மீற்றர் உயரத்தைத் தாவ டக்சிதா எடுத்த மூன்று முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தது. இறுதியில் 3.35 மீற்றர் உயரத்தைத் தாவி அவர் தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.  

கடந்த வருடம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடர் மற்றும் அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் 18 வயதுக்குட்பட்ட வயதுப் பிரிவில் வெள்ளிப் பதக்கங்களை வென்ற டக்சிதா, கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 3.40 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அதன்பிறகு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரிலும் பங்குகொண்ட அவர், 3.20 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

இப்போட்டியில் டக்சிதாவின் சக பாடசாலை மாணவியான வி. விசோபிகா 3.10 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்

இவர் இறுதியாக கடந்த செப்டம்பர் மாதம் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குகொண்டு நான்காவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்

இதுஇவ்வாறிருக்க, இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளின் முதலாம் நாளான நேற்று யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவனான . புவிதரன் (4.82 மீற்றர்) புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<