பங்களாதேஷ் மண்ணில் கலக்கும் சதுரங்க டி சில்வா

1149
Chathuranga De Silva
(AP Photo/A.M. Ahad)

26 வயதான இலங்கை அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் சதுரங்க டி சில்வா பங்களாதேசில் நடைபெற்றுவரும் டாக்கா பிரீமியர் கிரிக்கட் லீக் 2016 போட்டித் தொடரில் விளையாடி வருகிறார்.

விக்டோரியா ஸ்போர்டிங் கழகத்திற்கு விளையாடி வரும் சதுரங்க டி சில்வா பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் ஆகிய இரண்டு துறைகளிலும் பிரகாசித்துள்ளார். இதுவரை டாக்கா பிரீமியர் கிரிக்கட் லீக் 2016 போட்டித் தொடரின் 5 போட்டிகளில் பங்குபற்றியுள்ள சதுரங்க டி சில்வா 14.28 என்ற பந்துவீச்சு சராசரியில் 14 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். நேற்று பதுல்லாஹ் மைதானத்தில் டொல்ஸ்வர் ஸ்போர்டிங் கழக அணிக்கு எதிரான போட்டியில் விக்டோரியா ஸ்போர்டிங் கழகம் 59 ஓட்டங்களால் வெற்றிபெற்று இருந்தது. இப்போட்டியில் சதுரங்க டி சில்வா மிகச் சிறப்பாகப் பந்துவீசி 36 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இங்கிலாந்து மண்ணில் இலங்கை வெற்றி பெறுவதற்கான வழி

கடந்த வாரம் இடம்பெற்ற இன்னுமொரு போட்டியில் அப்ஹானி லிமிடட் அணியுடனான போட்டியில் சதுரங்க டி சில்வா பந்துவீச்சில் 35 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளைக் கைப்பற்றிய அதே வேளை துடுப்பாட்டத்தில் பெறுமதியான 25 ஓட்டங்களைப் பெற்று இருந்தார். ஆனாலும் அப்போட்டியில் விக்டோரியா ஸ்போர்டிங் கழக அணி தோல்வியுற்றிருந்தது.

டாக்கா பிரீமியர் கிரிக்கட் லீக் 2016 போட்டித் தொடரில் பந்துவீச்சில் 14 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ள சதுரங்க டி சில்வா துடுப்பாட்டத்தில் 34.00 என்ற சராசரியோடு 136 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

ஏற்கனவே இலங்கை அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ரங்கன ஹேரத் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்றதை அடுத்து அவருக்குப் பதிலாக சதுரங்க டி சில்வா இலங்கை அணியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இலங்கை அணியைச் சேர்ந்த உபுல் தரங்க, செஹான் ஜயசூரிய, ஜீவன் மெண்டிஸ் மற்றும் தில்ஷான் முனவீர போன்ற வீரர்களும் டாக்கா பிரீமியர் கிரிக்கட் லீக் 2016 போட்டித் தொடரில் பிரகாசித்து வருகிறார்கள். நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் இந்தத் தொடரில் தனது முதல் போட்டியில் விளையாடும் செஹான் ஜயசூரிய 63 ஓட்டங்களைப் பெற்று இருந்தார். அத்தோடு பந்துவீச்சிலும் 2 விக்கட்டுகளைக் கைப்பற்றி இருந்தமை ஒரு முக்கிய அம்சமாகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்