கொழும்பு கால்பந்துக் கழகத்தில் இணையும் ஷரித்த

528

குருநாகல் பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவரான ஷரித்த ரத்நாயக்க, 2018ஆம் ஆண்டுக்கான பருவகாலத்தில் டயலொக் சம்பியன்ஸ் லீக் (DCL) தொடரின் நடப்புச் சம்பியன்களாகத் திகழும் கொழும்பு கால்பந்துக் கழகத்திற்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.

ஈகிள்ல் கால்பந்து கழகத்தின் தலைவராக சுஜான் பெரேரா

மாலைத்தீவுகளில் உள்ள முன்னணி கால்பந்து…

டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் கடந்த மூன்று பருவகாலங்களிலும் வெற்றி பெற்று ஹட்ரிக் சம்பியன்களாக உள்ள கொழும்பு கால்பந்துக் கழகத்துடன் ஷரித்த ஒப்பந்தம் செய்யப்பட்ட தகவல் மாத்திரமே தற்போது வெளியாகியிருக்கின்றது. எனினும், இந்த ஒப்பந்தம் தொடர்பான மேலதிக விடயங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

கம்பளை கிறிஸ்டல் பெலஸ் அணிக்காக இரண்டு வருடங்கள் விளையாடி வந்த ஷரித்த கடந்த வருடம் கொழும்பு கால்பந்து அணியில் இணைவார் என செய்திகள் வந்திருந்தன. இதேவேளை  2016ஆம் ஆண்டு அவரது சொந்த ஊரினை பிரதிநிதித்துவம் செய்த பெலிகன்ஸ் கழகம் டிவிஷன் -I அணியாக இருந்து டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடருக்கு தரமுயர்த்தப்பட்டும் இருந்தது. இதனால், கொழும்பு கால்பந்துக் கழகத்திற்குப் பதிலாக அவர் பெலிகன்ஸ் அணியில் இணைந்தார்.  

ரத்நாயக்க சம்பியன்ஸ் லீக்கில் பெலிகன்ஸ் கழகத்திற்கு விளையாடிய முதல் பருவகாலத்திலேயே, அவ்வணியின் தலைவராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சம்பியன்ஸ் லீக் தொடரின் கடந்த பருவகாலத்தின் இறுதி வாரங்கள் வரை வெற்றியாளருக்கான போட்டியில் பெலிகன்ஸ் அணி இருந்த போதிலும், தொடர் முடிவடைந்த பின்னர் 5ஆம் இடத்தினையே அவ்வணி பெற்றுக் கொண்டது. குறித்த பருவகாலத்தில் பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகம், 8 போட்டிகளை வெற்றியோடும் 5 போட்டிகளை சமநிலையோடும் முடித்து மொத்தமாக 29 புள்ளிகளை பெற்றிருந்தது.  

கொழும்பை சம்பியனாக்கிய ரினெளன் முன்னாள் வீரர் பசால்

இலங்கையில் இடம்பெறும் மிகப் பெரிய கால்பந்து..

ஷரித்த பின் களத்தின் வலது புறத்தை தனது வழமையான நிலையாகக் கொண்டிருந்தாலும், கடந்த காலங்களில் தான் ஆடிய கழகங்களில் பின்களத்தின் மத்தியைப் பலப்படுத்தும் வீரராகவே ஆடியிருந்தார்.

குருநாகல் மலியதேவ கல்லூரியின் பழைய மாணவரான ஷரித்த ரத்நாயக்க, 2005 ஆம் ஆண்டில் 13 வயதின் கீழ்ப்பட்ட இலங்கை இளையோர் கால்பந்து அணியில் விளையாடிய வீரர் என்பதோடு, 2014ஆம் ஆண்டில் சிரேஷ்ட அணிக்காகவும் தனது பிரதிநிதித்துவத்தை வழங்கியிருந்தார்.

கொழும்பு கால்பந்துக் கழகத்தின் பயிற்றுவிப்பாளரான மொஹமட் ரூமி கடந்த காலங்களில் தனது தரப்பின் பின்களத்தினை பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து அதிக தடவைகள் கதைத்திருந்தார். இதுவே, ரத்நாயக்கவை கொழும்பு கால்பந்துக் கழகம் உள்வாங்க முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.   

இரண்டு சுற்றுக்களாக இடம்பெற்ற 2017ஆம் ஆண்டுக்கான AFC கிண்ண தகுதிகாண் போட்டிகளில் இந்தியாவின் மோஹன் பகான் கழகத்துக்கு (Mogun Bagan AC) எதிராக கொழும்பு கால்பந்து அணி சார்பாக  ஷரித்த ரத்நாயக்க விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த இரண்டு போட்டிகளிலும் மோஹன் பகன் அணி கொழும்பு கால்பந்து கழகத்தினை தலா 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.