எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தென்னாபிரிக்காவுடனான தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக, ஷரித் சேனானாயகவுக்குப் பதிலாக ரஞ்சித் பெர்ணான்டோ செயற்படவுள்ளார்.
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ரஞ்சித் பெர்ணான்டோ, அணியின் முகாமையாளராக செயற்படவுள்ள இந்த தகவலை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (டிசம்பர் 8ஆம் திகதி) தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் முகாமையாளர் அனுர தென்னகோனிடமிருந்து 2008ஆம் ஆண்டு குறித்த பதவியை முதல் முறையாக சேனானாயக பெற்றுக்கொண்டார். எனினும், கடந்த 2013ஆம் ஆண்டு அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக இவ்வருட ஏப்ரல் மாதத்தில் இலங்கை அணியின் முகாமையாளராக மீண்டும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமைத்துவத்தில் ஒரு சுழற்சி முறைமை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினாலேயே தற்பொழுது அணியின் முகாமையாளர் பதவியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று இலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்தார்.
ரஞ்சித் பெர்ணான்டோ, தனது கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் நிர்வாகக் குழுவில் தொடர்ந்து 12 வருடங்கள் பணியாற்றி வந்தமை முக்கிய அம்சமாகும்.
எனினும் சேனானாயகவிடம், அவரது பதவிக்காலம் எப்பொழுது வரை இருக்கின்றது என்று ஊடகவியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ”ஒப்பந்தத்தின்படி, எனது பதவிக்காலம் அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் வரையில் உள்ளது” என்றார்.
எனினும் அவருக்கு இலங்கை கிரிக்கெட்டில் அடுத்து என்ன பதவி வழங்கப்படும் என்று இதுவரையில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.