அடுத்துவரும் சர்வதேச கால்பந்து போட்டிகளுக்காக பயிற்சிகளைப் பெற்றுவரும் இலங்கை தேசிய கால்பந்து அணியில் இரண்டு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
உலகக் கிண்ணத் தொடருக்கான ஆசியப் பிராந்திய அணிகளை தெரிவு செய்யும் பூர்வாங்க தகுதிகாண் சுற்றுத்தொடர் மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளின் எஞ்சிய இரண்டு போட்டிகளில் இலங்கை அணி அடுத்த மாதம் பங்குகொள்ளவுள்ளது.
>> தென் கொரியா, லெபனானுடன் Defensive முறையில் ஆடவுள்ள இலங்கை அணி
இதன் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி ஜுன் மாதம் 5ஆம் திகதி லெபனான் அணியையும் 9ஆம் திகதி தென் கொரிய அணியையும் சந்திக்கவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் தென் கொரியாவின் கொயங் அரங்கில் இடம்பெறவுள்ளன.
எனவே, குறித்த போட்டிகளில் பங்குகொள்ளும் இறுதிக் குழாம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. குறித்த குழாம், இலங்கை தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் அமிர் அலஜிக்கின் வழிகாட்டலில் இறுதிக் கட்ட பயிற்சிகளை முகாமிட்டு மேற்கொண்டு வருகின்றது. இலங்கை அணி இம்மாத இறுதியில் இலங்கையில் இருந்து தென் கொரியா நோக்கி புறப்படுவதற்கும் உத்தேசித்துள்ளது.
இவ்வாறான ஒரு நிலையில், ஏற்கனவே குழாத்தில் இருந்த ரீப் பீரிஸ் குழாத்தில் இருந்து விலகியதையடுத்து அவரது இடத்திற்காக, டிபெண்டர்ஸ் கால்பந்து கழக வீரர் ரிப்கான் மொஹமட் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். ரிப்கான் மொஹமட் ஏற்கனவே தேசிய குழாத்தில் இடம்பெற்றிருந்தாலும் இறுதியாக வெளியிடப்பட்ட குழாத்தில் இருந்து நீக்கப்பட்டு, காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் பெயரிடப்பட்டிருந்தார்.
>> மாற்றங்களுடன் மீண்டும் பயிற்சிகளை ஆரம்பித்த இலங்கை கால்பந்து அணி
இதேவேளை, கொழும்பு கால்பந்து கழக வீரர் சர்வான் ஜோஹர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக தேசிய குழாத்தில் இருந்து விலகியுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஊடகப் பிரிவினூடாக எமக்கு அறியக்கிடைத்துள்ளது. சர்வான், தான் சொந்த காரணங்களுக்காக தேசிய குழாமில் இருந்து விலக வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஏற்றுக்கொண்டு அவரை விடுவித்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
சர்வான் ஜோஹரின் இடத்திற்கான மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும், காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் உள்ள ஜாவா லேன் வீரர் ரிஸ்கான் பைசர் தேசிய குழாத்திற்கு அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<