பந்து சேதப்படுத்தல் விவகாரத்தில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றாச்சாட்டுக்கு எதிராக இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் (ஐ.சி.சி.) மேன்முறையீடு செய்திருந்தார். இந்த மேன்முறையீட்டை சர்வதேச கிரிக்கெட் வாரியம் நீதியாணையாளர் மைக்கல் பெலோபின் தலைமையின் கீழ் விசாரணைக்கு எடுத்திருந்தது.
இதன்படி நேற்று வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்ற மேன்முறையீடு விசாரணையில் சந்திமாலின் மேன்முறையீட்டில் நியாயங்கள் எதுவும் இல்லை எனக் கூறப்பட்டு அது மைக்கல் பெலோபினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
சந்திமாலின் மேன்முறையீட்டை விசாரிக்க ஐ.சி.சி.யினால் நீதியாணையாளர் நியமனம்
மேன்முறையீடு தற்போது நிராகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இன்று (23) சனிக்கிழமை (இலங்கை நேரப்படி ஞாயிற்றுக்கிழமை) பகலிரவுப் போட்டியாக பார்படோஸில் ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட்டில் சந்திமாலுக்கு விளையாட முடியாத நிலை உருவாகியிருக்கின்றது.
இலங்கை டெஸ்ட் அணியின் தலைவரான தினேஷ் சந்திமால், மேற்கிந்திய தீவுகளுக்கும் இலங்கை அணிக்கும் இடையில் சென். லூசியாவில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் பந்தின் தன்மையை மாற்றி சேதப்படுத்தல் வேலைகளில் ஈடுபட்டார் என முன்னர் குற்றம் சுமத்தப்பட்டிருந்ததுடன், இந்த குற்றச் செயலுக்காக போட்டி மத்தியஸ்தரான ஜவகால் ஸ்ரீநாத், சந்திமாலுக்கு அதிகபட்ச தண்டனையாக நான்கு நன்னடத்தை விதிமீறல் புள்ளிகளை வழங்கி போட்டிக் கட்டணத்தில் 100 சதவீத்தை அபராதமாக செலுத்தும்படி பணித்திருந்தார்.
சந்திமாலுக்கு கொடுக்கப்பட்ட நான்கு நன்னடத்தை விதிமீறல் புள்ளிகள் இரண்டு இடைநிறுத்தல் (Suspension) புள்ளிகளாக கருதப்பட்ட காரணத்தினால், பர்படோஸில் நடைபெறும் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சந்திமால் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்படியாக தனக்கு போட்டித்தடை விதிக்கப்பட்டதை எதிர்த்தே சந்திமால் ஐ.சி.சி. இடம் மேன்முறையீடு செய்திருந்தார்.
சந்திமாலின் மேன்முறையீடு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், ஐ.சி.சி. சார்பிலான சட்ட ஆலோசகர்களும், சந்திமால் சார்பிலான சட்ட ஆலோசகர்களும் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருக்கும் முன்னிலையில் வைத்தே பெலோபினால் சந்திமாலின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை, சந்திமால் மீது போட்டி நடுவர்களான இயன் கூல்ட் மற்றும் அலீம் தார் ஆகியோரினால் முதல் தடவையாக பந்து சேதப்படுத்தல் குற்றம் வெளிப்படுத்தப்பட்ட போது இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தை இலங்கை அணியினர் இரண்டு மணி நேரம் தாமதமாக ஆரம்பம் செய்திருந்தனர். இது ஐ.சி.சி. இன் கிரிக்கெட் விதிமுறைகளுக்கான சரத்து 2.3.1 இனை மீறி கிரிக்கெட்டின் மகத்துவத்தை அவமதிக்கும் செயல் என ஐ.சி.சி. இன் நிறைவேற்று அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால், இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க மற்றும் இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்திமால், சந்திக்க, அசங்க
இந்தக் குற்றத்தை தற்போது மூவரும் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளும் சந்திப்பு ஒன்று ஜூலை மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவிருக்கின்றது. குறித்த சந்திப்பின் போது இலங்கை அணி போட்டியை தாமதித்தது ஐ.சி.சி. இன் மூன்றாம் தரக் (Level 3) குற்றமாக கருதப்பட்டு மூவருக்கும் நான்கு தொடக்கம் எட்டு வரையிலான இடைநிறுத்தல் புள்ளிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பான மேலதிக விசாரணைகள் அடுத்த மாதமே இடம்பெறவுள்ள காரணத்தினால் மேற்கிந்திய தீவுகள் உடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்காக தத்தமது பணிகளை செய்வதற்கு சந்திக்க ஹதுருசிங்க மற்றும் அசங்க குருசிங்க ஆகியோருக்கு எந்தவித தடைகளும் விதிக்கப்படவில்லை.
இதுதவிர மேற்கிந்திய தீவுகள் உடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சந்திமால் இல்லாத இலங்கை அணியை வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் தலைமை தாங்குவார் என கூறப்பட்டுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (இரண்டு நிறைவடைந்துள்ள நிலையில்) மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<