இங்கிலாந்துடன் மோதும் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் குழாம் வெளியீடு

1795

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இலங்கை அணியுடன் விளையாடவுள்ளது.  

இந்த ஒரு நாள் தொடரிற்கு முன்னதாக இங்கிலாந்து அணி கொழும்பு P. சரவணமுத்து மைதானத்தில் நாளை ஆரம்பமாகவுள்ள இரண்டு பயிற்சிப் போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடன் மோதவுள்ளதுடன், இந்த பயிற்சிப் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்களுடன் விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக் குழாம் இன்று (4) வெளியிடப்பட்டுள்ளது.

இதில் முதல் பயிற்சிப் போட்டியில் இலங்கை ஒரு நாள் அணியின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்ட தினேஷ் சந்திமால் இலங்கை கிரிக்கெட் சபையின் பதினொருவர் அணியை வழிநடாத்துவதோடு, இரண்டாவது பயிற்சிப் போட்டியில் திமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியை பொறுப்பேற்கின்றார்.

உலகின் முன்னணி ஒருநாள் அணியுடன் மோதத் தயாராகியுள்ள இலங்கை

மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் போட்டியை தாமதித்த குற்றச்சாட்டில், தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் போட்டிகளில் விளையாடாது போயிருந்த சந்திமால் அதன் பின்னர், கையில் ஏற்பட்ட உபாதையினால் ஆசியக் கிண்ணத் தொடரிலும் விளையாடாது போயிருந்தார். இவ்வாறான காரணங்களினால் இலங்கை அணியின் புதிய தலைவரான தினேஷ் சந்திமாலுக்கு, இங்கிலாந்து அணியுடனான பயிற்சி மோதல்களில் பங்கேற்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது.

தினேஷ் சந்திமால் இங்கிலாந்துடனான பயிற்சிப் போட்டிகளில் ஒன்றில் மட்டும் விளையாட, இங்கிலாந்து அணிக்கெதிரான ஒரு நாள் தொடருக்கான இலங்கை குழாமில் பெயரிடப்பட்டிருக்கும் இளம் துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம, வேகப்பந்து வீச்சாளர் கசுன் ராஜித ஆகியோர் இங்கிலாந்து அணியுடனான இரண்டு பயிற்சி போட்டிகளிலும் விளையாடுகின்றனர்.

இதேநேரம், கசுன் ராஜிதவோடு சேர்த்து இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்கு ஷெஹான் மதுஷங்க, அசித்த பெர்னாந்து மற்றும் இசுரு உதான ஆகியோர் மேலதிக வேகப்பந்து வீச்சாளர்களாக பலம் சேர்ப்பதோடு நிஷான் பீரிஸ், ஜெப்ரி வன்டர்செய் போன்றோர் சுழல் வீரர்களாக வலுச் சேர்க்கின்றனர்.

முதல் பயிற்சிப் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் குழாம் – திமுத் கருணாரத்ன, லஹிரு திரிமான்ன, தினேஷ் சந்திமால் (அணித் தலைவர்), குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஷெஹான் மதுஷங்க, ஜெப்ரி வன்டர்செய், கசுன் ராஜித, அசித்த பெர்னாந்து, நிஷான் பீரிஸ்

இரண்டாவது பயிற்சிப் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் குழாம் – திமுத் கருணாரத்ன (அணித் தலைவர்), அவிஷ்க பெர்னாந்து, சரித் அசலங்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, அசேல குணரத்ன, ஷெஹான் மதுஷங்க, ஜெப்ரி வன்டர்செய், கசுன் ராஜித, இசுரு உதான, நிஷான் பீரிஸ்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க