சுதந்திர கிண்ணத் தொடரில் போட்டித் தடையைப் பெறும் சந்திமால்

2209

இலங்கை அணித்தலைவரான தினேஷ் சந்திமால், மந்த கதியில் ஓவர்களை வீசிய குற்றச்சாட்டுக்காக தற்போது நடைபெற்றுவரும் சுதந்திர கிண்ண (முக்கோண) T20 தொடரில் (இலங்கை பங்கேற்கவுள்ள) அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாடத் தடைவிதிக்கப்பட்டுள்ளார்.

[rev_slider LOLC]

நேற்று (10) பங்களாதேஷ் அணியுடன் ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றிருந்த சுதந்திரக் கிண்ணத் தொடரின் T20 போட்டியில், தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கைத் தரப்பு மொத்த ஓவர்கள் வீச வழங்கப்பட்டிருந்த நேர அவகாசத்திற்குள் நான்கு ஓவர்கள் குறைவாக வீசியிருந்தது. இது போட்டியை தாமதப்படுத்தும் ஒரு செயல் என நேற்றைய போட்டிக்கான ஐ.சி.சி இன் மத்தியஸ்தர் கிரிஸ் ப்ரோட் குற்றம் சாட்டியிருக்கின்றார். இதன் காரணமாகவே, சந்திமாலுக்கு இரண்டு T20 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது.

சாதனை வெற்றியுடன் இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ்

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த இலங்கை அணி பங்களாதேஷுக்கு வெற்றி இலக்காக சவால் மிக்க 215 ஓட்டங்களை நிர்ணயித்திருந்தது. இந்த இலக்கினை பங்களாதேஷ் அணி அவர்களது விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் முஷ்பிகுர் ரஹீம் 35 பந்துகளுக்கு பெற்றுக் கொண்ட 72 ஓட்டங்களின் துணையுடன் 5 விக்கெட்டுக்கள் மீதமிருக்க அடைந்து சாதனை வெற்றியைப் பதிவு செய்தது.

நேற்றைய ஆட்டத்தின் விறுவிறுப்பான தருணங்களில் இலங்கை வீரர்கள் அடிக்கடி மைதானத்திற்கு நடுவே குழுமி கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். இதுவே ஆட்டத்தை தாமதப்படுத்த முக்கிய காரணியாக மாறியிருந்தது.

ஐ.சி.சி இன் வீரர்கள் ஒழுங்குமுறைக் கோவைகளின் அடிப்படையில், அணியொன்று போட்டிக்காக வழங்கப்பட்ட நேரத்திற்குள் இரண்டு ஓவர்கள் குறைவாக வீசியிருந்தால், குற்றம் இழைக்கும் அணி வீரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஓவருக்காக போட்டிக் கட்டணத்தில் 10% அபராதமாக செலுத்த வேண்டும். இதேவேளை, இந்த நேரத்திற்குள் இரண்டு ஓவர்களுக்கு மேலதிகமாக வீசப்படும் ஏனைய ஒவ்வொரு ஓவருக்கும் 20% போட்டிக் கட்டணத்தில் அபராதமாக செலுத்த வேண்டும். அத்தோடு, தாமதமாக ஓவர்கள் வீசும் அணியின் தலைவர் இரண்டு போட்டித்தடை புள்ளிகளையும் பெற்றுக் கொள்வார்.

இரண்டு போட்டித் தடை புள்ளிகளைப் பெறும் வீரர் ஒருவருக்கு அடுத்து முதலாவதாக வருகின்ற டெஸ்ட் போட்டியொன்றிலோ அல்லது இரண்டு ஒரு நாள் போட்டிகளிலோ அல்லது இரண்டு T20 போட்டிகளிலோ விளையாட முடியாது போகும்.

அந்தவகையில், நேற்றைய போட்டிக்கான இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் அடுத்ததாக (சுதந்திர கிண்ணத்தில்) வரும் இரண்டு T20 போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பத்தை இழப்பதுடன், இலங்கை அணியின் வீரர்கள் ஒவ்வொருவரும் போட்டிக் கட்டணத்தில் மொத்தமாக 60% அபராதமாக செலுத்துகின்றனர்.

சந்திமாலின் குற்றம், இன்று ஞாயிற்றுக்கிழமை (11) நண்பகல் இடம் பெற்ற அமர்வொன்றில் ஐ.சி.சி இன் மத்தியஸ்தர் ப்ரோட்டினால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் போட்டி உத்தியோகஸ்தர்கள் இலங்கை கிரிக்கெட் சபை முகாமைத்துவக் குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

எங்களது பந்துவீச்சு எதிர்பார்த்ததை விட மோசமாக அமைந்திருந்தது – சந்திமால்

சந்திமால் தலைமையிலான இலங்கை T20 அணி எதிர்வரும் 12 மாதகால அவகாசத்திற்குள் இப்படியானதொரு தவறு ஒன்றை மீண்டும் மேற்கொள்ளும் எனில், அது சந்திமாலின் இரண்டாம் குற்றமாக கணிக்கப்பட்டு அவருக்கு இரண்டு தொடக்கம் எட்டு வரையிலான போட்டித் தடைப்புள்ளிகள் கிடைக்கக் கூடிய அபாயம் இருக்கின்றது.

இதேவேளை, சுதந்திரக் கிண்ணத் தொடருக்காக இலங்கை அணியின் உபதலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் தொடரில் இதுவரை எந்தவொரு போட்டிகளிலும் விளையாடாது இருக்கின்றார். அத்தோடு சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான உபுல் தரங்க 2017 ஆம் ஆண்டு குறுகிய காலத்திற்குள் இலங்கை அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டு ஏற்கனவே போட்டித் தடைப்புள்ளிகளை பெற்றவராகவும் இருக்கின்றார். எனவே, நாளை (12) இந்திய அணியுடன் நடைபெறவிருக்கும் போட்டியில் இலங்கை அணியின் தலைவராக அதிரடி சகலதுறை வீரர் திசர பெரேரா செயற்பட சந்தர்ப்பம் அதிகமாகவுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான இலங்கை அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் காயத்துக்கு உள்ளாகியதை அடுத்து இந்த T20 தொடருக்காக தற்காலிக தலைரவாக இலங்கை அணியின் டெஸ்ட் தலைவர் தினேஷ் சந்திமால் பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இலங்கை அணியின் தலைவர் பதவிக்கு பொருத்தமான வீரர் யார்? உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்.