சுருக்கமடைந்துவரும் கிரிக்கெட் உலகில் முதல் முறையாக இடம்பெறவுள்ள T-10 தொடரில் பங்குகொள்ளவுள்ள இலங்கை அணிக்கு தற்போதைய டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் தலைமை தாங்கவுள்ளார். குறித்த போட்டிகள் அடுத்த மாதம் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜாவில் நடைபெறவுள்ளன.
முதலாவது T-10 தொடர் குறித்த முழுமையான பார்வை
உலகின் அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன…
10 ஓவர்கள், 6 அணிகள், 90 நிமிடங்கள் என மிகக் குறுகிய எல்லைக்குள் 4 நாட்கள் நடைபெறவுள்ள இத்தொடரில், கிரிக்கெட் உலகின் அதிரடி நட்சத்திரங்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிலையில், T-10 லீக் போட்டித் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த நவம்பர் மாதம் 5ஆம் திகதி டுபாயில் இடம்பெற்றது. ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த 27 வீரர்களும், 300இற்கும் அதிகமான சர்வதேச வீரர்களும் இந்த ஏலத்தில் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன், வசீம் அக்ரம், இயென் மோர்கன், சஹீட் அப்ரிடி மற்றும் சர்பராஸ் அஹமட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
பஞ்சாபி லெஜன்ட்ஸ், பக்தூன்ஸ், மராத்தா அராபியன்ஸ், பெங்கால் டைகர்ஸ், லங்கா லயன்ஸ்(இலங்கை அணி) மற்றும் கேரளா கிங்ஸ் என ஆறு அணிகளின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ள இத்தொடரில் களமிறங்கவுள்ள இலங்கை அணி இன்று(11) அறிவிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்த மாகாணங்களுக்கிடையிலான உள்ளூர் T-20 தொடரில் சம்பியன் பட்டம் வென்ற கொழும்பு அணி, லங்கா லயன்ஸ் என்ற பெயருடன் இத்தொடரில் களமிறங்கவுள்ளது. அவ்வணியின் தலைவராகச் செயற்பட்ட, இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் இத்தொடரிலும் அணித் தலைவராக செயற்படவுள்ளார்.
இலங்கையின் சூரன் சுரங்க லக்மால்
தரம்சாலாவில் நடைபெற்ற போட்டியினை நீங்கள் பார்க்க தவறியிருப்பினும், இப்போட்டிக்கான…
இதன்படி, அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட குழாமில், தேசிய அணியில் இடம்பெற்றுள்ள ஒருசில முக்கிய வீரர்களும் களமிறங்கவுள்ளனர். எனினும், குறித்த அணியில் விளையாடிய திஸர பெரேரா, லஹிரு திரிமான்ன, துஷ்மன்த சமீர, ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் தற்போது இடம்பெற்று வருகின்ற இந்திய அணியுடனான ஒரு நாள் மற்றும் நடைபெறவுள்ள T-20 தொடர்களில் பங்கேற்கவுள்ளதால், இத்தொடரில் உள்ளடக்கப்படவில்லை.
அத்துடன், இலங்கை ஏ அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரான அவிஷ்க குணவர்தன, இவ்வணியின் பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார்.
லங்கா லயன்ஸ் அணி
தினேஷ் சந்திமால், டில்ஷான் முனவீர, ரமித் ரம்புக்வெல்ல, அஞ்செலோ பெரேரா, திக்ஷில டி சில்வா, விஷ்வ பெர்ணாந்து, சச்சித்ர சேனநாயக்க, வனிந்து ஹசரங்க டி சில்வா, கசுன் மதுஷங்க, லஹிரு மதுஷங்க, கசுன் மதுஷங்க, கித்துருவன் விதானகே, பானுக ராஜபக்ஷ, அலங்கார அசங்க மற்றும் ஷெஹான் ஜயசூரிய
சங்கா விலகல், ஹேரத் களமிறங்கல்
இந்தப் போட்டித் தொடரில் இந்தியாவின் விரேந்திர சேவாக் தலைமையிலான மராத்தா அராபியன்ஸ் அணியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர ஜாம்பவானுமான குமார் சங்கக்கார இடம்பெற்றிருந்தார். எனினும், தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் குறித்த தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதனையடுத்து மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை ஆட்டக்காரரான டுவைன் பிராவோவை அவ்வணியுடன் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்கு போராடும் சந்திமாலின் எதிர்பார்ப்பு
இதில் இலங்கை அணி சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரராக அணித்தலைவர் தினேஷ் சந்திமால்…
இதேவேளை இலங்கை டெஸ்ட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக ஜொலித்துக்கொண்டிருக்கின்ற 39 வயதான ரங்கன ஹேரத்தும் இப்போட்டித் தொடரில் பாகிஸ்தானின் சொஹைப் மலிக் தலைமையிலான பஞ்சாபி லெஜன்ட்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற T-20 உலகக் கிண்ணப் போட்டிகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஹேரத், முதற்தடவையாக வெளிநாட்டு தொடரொன்றில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அங்குரார்ப்பண T-10 லீக் போட்டித் தொடருக்கான போட்டி அட்டவணை கடந்த மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதில் கலந்துகொள்ளவுள்ள 6 அணிகளும் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ குழுவில் பெங்கால் டைகர்ஸ், பஞ்சாபி லெஜன்ட்ஸ், கேரளா கிங்ஸ் ஆகிய அணிகளும், பி குழுவில் மராத்தா அராபியன்ஸ், பக்தூன்ஸ் மற்றும் இலங்கை அணி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணிகளும் ஏனைய அணிகளுடன் முதல் சுற்றான லீக் ஆட்டங்களில் போட்டியிடவுள்ளன. அதில் கடைசி இரு இடங்களையும் பெற்றுக்கொள்கின்ற அணிகள் 5 மற்றும் 6ஆவது இடங்களுக்கு போட்டியிடும். அதேநேரம், இரு குழுக்களிலும் முதலிரண்டு இடங்களைப் பெற்றுக்கொள்ளும் அணிகள் அரையிறுதியில் போட்டியிடும்.