பந்தை சேதப்படுத்திய விடயத்தில் தினேஷ் சந்திமால் மீது குற்றத்தை நிரூபித்துள்ள ஐ.சி.சி.

1233

மேற்கிந்திய தீவுகளுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்தின் தன்மையை மாற்றி சேதப்படுத்தல் வேலைகளில் ஈடுபட காரணமாக இருந்தார் என இலங்கை அணியின் தலைவரான தினேஷ் சந்திமாலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.)  குற்றவாளியாக இனம் கண்டுள்ளது.

தினேஷ் சந்திமால் மீது பந்து சேதப்படுத்தல் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதை ஐ.சி.சி. இன்று (17) அவர்களது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் உறுதிப்படுத்தியிருப்பதோடு, இந்த குற்றச்செயல் தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளிவரும் எனவும் தெரிவித்திருக்கின்றது.

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் போட்டியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சை

பந்தை சேதப்படுத்திய சந்தேகத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்…

மேற்கிந்திய தீவுகள் உடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது ஐ.சி.சி. இன் சட்ட யாப்பு 2.2.9 இணை மீறி “பொருத்தமற்ற (Unfair)” விதத்தில் பந்தின் தன்மையை மாற்ற தனது தரப்பினை வழிநடத்தினார் என்பதே சந்திமால் மீது குற்றமாக குறிப்பிடப்படுகின்றது.

சந்திமால் தலைமையிலான இலங்கை அணியின் வீரர்கள் குற்றத்தினை மேற்கொண்டதாக கூறி, இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளின் ஆரம்பத்தில் நடுவர்கள் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஐந்து ஓட்டங்களை மேலதிகமாக (Penalty) வழங்கியிருந்தனர்.

எனினும், இந்த குற்றச்சாட்டை மறுத்த இலங்கை அணித்தரப்பு போட்டியின் மூன்றாம் நாளில் மைதானத்திற்குள் வரமறுத்திருந்ததுடன், நீண்ட  பேச்சுவார்த்தைகளை அடுத்து இரண்டு மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த குற்றச்சாட்டை நிராகரித்த வண்ணமே போட்டியை தொடர வந்திருந்தது.

மூன்றாம் நாளின் ஆட்ட வேளையின் போது இந்த விடயம் தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபையானது (SLC) “அணி முகாமைத்துவம் எங்களுக்கு சொல்லியபடி, எங்களது வீரர்கள் எவரும் தவறான செயல்கள் எதிலும் ஈடுபடவில்லை“ எனக் கூறி தங்களது வீரர்கள் பந்தின் தன்மையை மாற்றி பந்தினை சேதப்படுத்தும் எந்தவித குற்றச் செயல்களையும் மேற்கொள்ளவில்லை என்பதை குறிப்பிட்டிருந்தது.

அத்துடன், இலங்கை கிரிக்கெட் சபை இலங்கை வீரர்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க தங்களால் செய்ய முடிந்த அனைத்து செயல்களையும் செய்வோம் எனவும் கூறியிருந்தது.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு கருத்து தெரிவித்திருந்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார, “அவர்கள்  (இலங்கை வீரர்கள்)  நீதியான முறையில் நடாத்தப்படவில்லை என உணருவதாக நான் நினைக்கின்றேன்“

விஷேடமாக தென்னாபிரிக்காவில் நடந்த சம்பவத்திற்கு பின்னர், எல்லோரும் மிகவும் அவதானமாக இருக்கின்றனர் என நினைக்கின்றேன். இதன்படி, (போட்டி நடுவரான) கூட் அதிக அவதானத்தோடு இருந்து இருக்கலாம்“ எனப் பேசி இலங்கை அணியின் பக்கம் நியாயம் உள்ளதற்கான வாய்ப்புக்களை சுட்டிக் காட்டியிருந்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சரின் கோரிக்கையை சங்கா, அரவிந்த நிராகரிப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஆலோசகராக இணையுமாறு விளையாட்டுத்துறை…

கடந்த மார்ச் மாதம் அவுஸ்திரேலிய அணி தென்னாபிரிக்க அணியுடன் கேப்டவுனில் இடம்பெற்றிருந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது பந்தினை சேதப்படுத்தியது ஊர்ஜிதமான நிலையில் குறிப்பிட்ட குற்றச் செயலில் ஈடுபட்ட வீரர்களுக்கு தண்டனைகளும் வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி குறித்த போட்டியில், அவுஸ்திரேலிய அணியின் தலைவராக செயற்பட்ட ஸ்டீவ் ஸ்மித்திற்கும், உப தலைவராக செயற்பட்ட டேவிட் வோர்னருக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஒரு வருட கால போட்டித்தடை விதிக்கப்பட்டிருந்தது.

இவர்களோடு குறித்த போட்டியில் மணல் காகிதம் (Sand Paper) ஒன்றை வைத்து பந்தினை சேதப்படுத்திய அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கெமரோன் பேன்கிரோப்டுக்கும் சர்வதேச போட்டிகளில் விளையாட ஒன்பது மாதங்கள் போட்டித்தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க