ஹத்துருசிங்கவை அன்புடன் வரவேற்கிறோம் : அமைச்சர் தயாசிறி

474
Chandika Hathurusinghe

இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் வீரரும், பங்களாதேஷ் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளருமான சந்திக்க ஹத்துருசிங்கவை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்க ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும், அதற்கான அழைப்பை அவர் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளதால் அவரை நாட்டுக்கு மீண்டும் அன்புடனும், கௌரவத்துடனும் வரவேற்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.  

சந்திக்க ஹதுருசிங்க பங்களாதேஷை விட்டு இலங்கை அணிக்கு வருவாரா?

பங்களாதேஷ் தலைமைப் பயிற்சியாளர் சந்திக்க..

சந்திக்க ஹத்துருசிங்க பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகி இலங்கை அணிக்கு வருவது தொடர்பில் அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

”பிரச்சினைகளை ஏற்படுத்தாது தயவுசெய்து அவரை இந்நாட்டின் கிரிக்கெட்டை கட்டியெழுப்புவதற்கு உதவ முன்வாருங்கள். நாங்கள் ஒரு சிறந்த பணியை இதற்காக மேற்கொள்கின்றோம். எனினும், தற்போது அவர் இராஜினாமா கடிதத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபைக்கு கையளித்துள்ளார். எனினும், அவர் எம்முடன் இணைந்து கொண்டால் அவரது பயிற்றுவிப்பின் கீழ் நாம் சந்திக்கவுள்ள முதல் அணியாக பங்களாதேஷ் திகழும். அத்துடன் ஹத்துருசிங்கவுடன் சில காலம் பணிபுரிந்த திலான் சமரவீர தற்போது எமது அணியுடன் இணைந்துகொண்டார். எனவே அடுத்த நடவடிக்கையாக ஹத்துருசிங்கவும் எம்முடன் இணைவார்” எனத் தெரிவித்தார்.

பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளராக வருடமொன்றுக்கு 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களை (61 இலட்சம் ரூபா) வேதனமாகப் பெற்றுக்கொண்டிருக்கின்ற ஹத்துருசிங்க, அவ்வளவு பெரிய வேதனத்தை உதரித் தள்ளிவிட்டு நாட்டுக்காகவும், எமது வீரர்களுக்காகவும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டமை குறித்து நாம் அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என அமைச்சர் அங்கு தெரிவித்தார்.

அப்படியென்றால் ஹத்துருசிங்கவுக்கு இப்பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ”ஆம் நாம் அவருக்கு அழைப்பு விடுத்தோம். நாங்கள் மிகவும் நல்ல காரியமொன்றை செய்யவுள்ளோம். அதுமட்டுமல்லாமல், இப்பதவியை அவர் ஏற்றுக்கொண்ட பிறகு, இலங்கை அணியின் அடுத்த சுற்றுப்பயணம் பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ளது. இதனால் அவருக்கு இன்னும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும். எனினும் எமது முயற்சி வெற்றியளிக்கும். அவர் 2019 வரை பங்களாதேஷ் அணியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். எனினும் அந்நாட்டு கிரிக்கெட் சபையுடன் நிலவிய கருத்து முரண்பாடுகளினால் அப்பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். எனவே அவர் அந்நாட்டு கிரிக்கெட் சபையுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்ளவுள்ளார். அதன்பிறகு அவரது நியமனம் பற்றி உறுதியாக அறிவிக்க முடியும். அதனால் தற்போது அவருடைய வருகை பற்றி சொல்வது பொருத்தமில்லை.

வீரரொருவரின் உணவினால் 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி

வீரர்களின் ஓய்வறையிலிருந்து தீயணைப்பு சமிக்ஞைகள்..

ஆனால், இவ்வாறு அனைத்தையும் கூறுவதற்கு இது சரியான நேரம் என நான் கருதவில்லை. எனினும், திலானும் தற்போது எம்முடன் உள்ளார். அவரும் இலங்கை அணியின் முன்னாள் வீரர்தான். எனினும், ஹத்துருசிங்கவை இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து வெளியேற்றியது கிரிக்கெட் பற்றி அதிகம் பேசுகின்ற கிரிக்கெட்டை ஆட்சி செய்தவர்களின் காலப்பகுதியில் தான் என்பது பற்றி நாம் நன்கு அறிவோம்.

ஒரு சிறந்த பயிற்சியாளராக அவரை வெளியேற்றியது உண்மையில் கவலையளிக்கிறது. எனினும், பங்களாதேஷ் அணியை ஒரு முன்னணி அணியாக கொண்டு வந்த பெருமை ஹத்துருசிங்கவை சாரும். எனவே 2019 வரை இலங்கை அணியின் பயிற்சியாளராக பணியாற்றும்படி நாம் அவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர், பணத்துக்காக அல்லாமல் நாட்டுக்காக சேவையாற்ற விரும்புவதாகவும் தெரிவித்ததாக அமைச்சர் இதன்போது தெளிவுபடுத்தினார்.  

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சந்திக்க ஹத்துருசிங்கவை நியமிக்க ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம். அதற்கான அழைப்பை அவர் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளதால் அவரை நாட்டுக்கு மீண்டும் அன்புடனும், கௌரவத்துடனும் வரவேற்கின்றோம். அவருக்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.  

இந்நிலையில், ஹத்துருசிங்க பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக அறிவித்ததனைத் தொடர்ந்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மற்றும் அந்நாட்டு வீரர்கள் மிகப் பெரிய நெருக்கடிகளுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.  

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச ஹபீசுக்குத் தடை

முறையற்ற பாணியில் பந்து வீசியது ஊர்ஜிதம்…

எனினும், எதிர்வரும் 2019ஆம் ஆண்டு வரை ஹத்துருசிங்கவின் ஒப்பந்தக்காலம் உள்ள நிலையில், ஹத்துருசிங்கவுடன் இதுதொடர்பில் பேச்சுவார்த்தையொன்றை நடத்தவும், அதன்மூலம் அவரை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ளவும் அந்நாட்டு கிரிக்கெட் சபை அதிகாரிகள் இரவு பகலாக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில், இவ்வாரத்துக்குள் ஹத்துருசிங்கவை சந்திக்கவுள்ள அந்நாட்டு கிரிக்கெட் சபை அதிகாரிகள், அவரது பணியை தொடருமாறு வினவவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து சந்திக்க ஹத்துருசிங்க இராஜினாமா செய்யவுள்ளதாக கடந்த 9ஆம் திகதி ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், அவரது இராஜினாமாவை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அவரது இராஜினாமாவுக்கான காரணத்தை அறிவிக்கவில்லை எனவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது. எனினும், குறித்த செய்தி வெளியான மறுதினம், ஹத்துருசிங்கவின் பதவி விலகலை அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹசன் உறுதிப்படுத்தினார்.

அவர் இதற்கு முன்னர் ஒரு தடவை தனது இராஜினாமா கடிதத்தை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் சமர்ப்பித்த போதிலும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அதனை ஏற்க மறுத்துவிட்டது. குறித்த இராஜினாமா கடிதத்தில் தனக்கு தொடர்ந்தும் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியை தொடர விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆயினும், பதவி விலகுவதற்கான எந்தவொரு முறையான காரணத்தையும் அவர் தெரிவிக்கவில்லை என அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் ஊடாக வெளியான செய்திகளின்படி, இந்திய தொடரையடுத்து சந்திக்க ஹத்துருசிங்க இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 7 வருடங்களில் 10 பேர் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுள்ளதுடன், ஹத்துருசிங்கவும் இணைந்துகொண்டால் அவர் குறித்த காலத்தில் இணையும் இலங்கை அணியின் 11ஆவது பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளிலும், 35 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள 49 வயதான ஹத்துருசிங்க, 2010ஆம் ஆண்டு இலங்கை அணியின் உதவி பயிற்றுவிப்பாளராகவும், அதனைத்தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றினார். அதன்பிறகு 2014ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணியின் பிரதான பயிற்சியாளராக பொறுப்பேற்ற அவர், அவ்வணியை 2015 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் கால் இறுதி வரையும், 2017 சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் அரை இறுதி வரையும் கொண்டு சென்றார்.

அத்துடன், பங்களாதேஷ் தனது சொந்த மண்ணில் நடைபெற்ற இருதரப்பு சர்வதேச ஒருநாள் தொடர்களில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளை வெற்றிகொண்டது.

அது மட்டுமல்லாமல் டெஸ்ட் அரங்கில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய அணிகளை தனது சொந்த மண்ணில் வெற்றி கொண்டு வரலாறு படைத்த பங்களாதேஷ், அந்நிய மண்ணில் இலங்கையை வெற்றி கொண்ட பெருமையையும் பெற்றுக்கொண்டது. எவ்வாறாயினும் தென்னாபிரிக்காவுக்கான அண்மைய கிரிக்கெட் விஜயத்தில் மூவகைத் தொடர்களிலும் பங்களாதேஷுக்கு தோல்விகளே மிஞ்சின. இதன் பின்னணியில் ஹத்துருசிங்க இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.