ஹத்துருசிங்க விலகியதை அடுத்து பங்களாதேஷ் அணிக்கு புதிய தலைவர்

1228

கிரிக்கெட் அரங்கில் அண்மைக்காலமாக பல முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து வெற்றிகளைப் பதிவுசெய்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு தென்னாபிரிக்க அணியுடனான தொடரையடுத்து பல அதிர்ச்சியான முடிவுகளை சந்திக்க நேரிட்டது. இதில் அவ்வணியின் வெற்றிக்காக அரும் பணியாற்றிவந்த தலைமைப் பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்கவின் திடீர் பதவி விலகலானது அவ்வணியை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியது.

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்க இம்மாதம் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப்…

எனினும், ஹத்துருசிங்கவை தொடர்ந்து தக்கவைப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை மேற்கொண்ட முயற்சிகள் இறுதிவரை வீணாகிப் போனது. இதனையடுத்து ஹத்துருசிங்கவை விடுவிக்க தீர்மானித்த அந்நாட்டு கிரிக்கெட் சபை, அடுத்த மாதம் முற்பகுதியில் இலங்கை அணியுடனான தொடருக்கு முன் இடைக்காலப் பயிற்சியாளரையும், தென்னாபிரிக்க தொடரில் பெற்றுக்கொண்ட மோசமான முடிவுகளைக் கருத்திக் கொண்டு புதிய டெஸ்ட் அணித் தலைவரையும் நியமிக்க நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன்படி, பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் அணித் தலைவராக சகலதுறை வீரர் சகிப் அல் ஹசனை மீண்டும் நியமிப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.  

இதுதொடர்பான அறிவித்தலை பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் நஜுமுல் ஹசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்நாட்டு கிரிக்கெட் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

எனினும் சகிப் அல் ஹசனின் பதவிக்காலம் தொடர்பில் இதுவரையில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லையென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பங்களாதேஷ் அணியின் உபதலைவர் பதவியிலிருந்த தமீம் இக்பால் நீக்கப்பட்டு, அவரின் இடத்துக்கு மஹமதுல்லா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

அணித் தலைவர் மாற்றத்துக்கு சரியான காரணமொன்றை முன்வைக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தாலும், அணித் தலைவராக இதுவரையில் செயற்பட்ட முஷ்பிகுர் ரஹீமின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்துவதற்காக இந்த மாற்றம் செய்யப்படுவதாக நஜுமுல் ஹசன் குறிப்பிட்டார்.

சாதனைகள் மூலம் இந்தியாவுடனான கடனைத் தீர்த்த இலங்கை அணி

செப்டெம்பர் 6 புதன்கிழமை இலங்கைத் தீவுக்கு சுற்றுலா..

இதன்படி, சகிப் அல் ஹசன் இலங்கை அணிக்கெதிரான அடுத்த மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் போது அணித் தலைமையை மீண்டும் ஏற்கவுள்ளார். இதன்படி பங்களாதேஷ் அணியின் 9ஆவது தலைவராக சகீப் அல் ஹசன் செயற்படவுள்ளார்.

முன்னதாக, இவ்வருட முற்பகுதியில் இலங்கை அணிக்கெதிரான சுற்றுப் பயணத்தின் போது பங்களாதேஷ் T-20 அணியின் தவைராகச் செயற்பட்ட மஷ்ரபி முர்தசா, T-20 அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து சகீப் அல் ஹசனை T-20 அணித் தலைவராக நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சகலதுறை வீரர்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் வகிக்கின்ற 30 வயதான சகீப் அல் ஹசன், இதுவரை 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,594 ஓட்டங்களையும், 188 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 2009 முதல் 2011 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பங்களாதேஷ் அணியின் தலைவராகக் கடமையாற்றிய சகிப் அல் ஹசன், குறித்த காலப்பகுதியில் 9 போட்டிகளுக்கு மாத்திரம் தலைமைதாங்கினார். அதில் அவர், மேற்கிந்திய தீவுகளுடனான போட்டித் தொடரை மாத்திரம் வெற்றிகொண்டார். எனினும், 2011இல் ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பெற்றுக்கொண்ட தோல்வியினை அடுத்து அப்பதவியிலிருந்து சகீப் நீக்கப்பட்டார்.

இந்நிலையில், பங்களாதேஷ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகிப் அல் ஹசன் அந்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில், இலங்கை அணி, முன்னாள் பயிற்றுவிப்பாளரான ஹத்துருசிங்கவை தன்னகப்படுத்தியுள்ளமையால் எமக்கு எந்தப் பின்னடைவும் ஏற்படப்போவதில்லை. பொதுவாக நாம் வெளிநாட்டு மண்ணில் தடுமாறுவது வழக்கம். உண்மையில் இந்த தொடர் எமது மண்ணில் நடைபெறுவதால் எமக்கு அனைத்துவிதத்திலும் சாதகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். அத்துடன் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் தற்போது சிறந்த முறையில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் அணியை வழிநடாத்துவது இலகுவாகும்” என்றார்.  

இலங்கையின் சூரன் சுரங்க லக்மால்

தரம்சாலாவில் நடைபெற்ற போட்டியினை நீங்கள் பார்க்க..

இதேவேளை, பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக விக்கெட் காப்பாளரும், அவ்வணியின் அனுபவமிக்க வீரருமான முஷ்பிகுர் ரஹீம் செயற்பட்டு வந்தார். முன்னாள் பயிற்றுனரான சந்திக ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பு மற்றும் ரஹீமின் தலைமையில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி கடந்த 2 வருடங்களாக வரலாற்று வெற்றிகளை பதிவு செய்தது. இதில் இங்கிலாந்து, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுடான டெஸ்ட் வெற்றிகளை முக்கியமாகக் குறிப்பிடலாம்.  

இந்நிலையில், சமீபத்தில் பங்களாதேஷ் அணி தென்னாபிரிக்காவுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்தது. ஒரு நாள் மற்றும் T-20 தொடர்களை இழந்த அவ்வணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் படுதோல்வியடைந்தது.

இதன்போது அவ்வணியின் முன்னாள் பயிற்றுனரான சந்திக ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பு குறித்து எதிர்மறையான கருத்துக்களை முதற்தடவையாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த முஷ்பிகுர் ரஹீம் துடுப்பாட்டத்திலும் சொதப்பியிருந்தார். அத்துடன், முஷ்பிகுர் ரஹீமின் தலைமையின் கீழ் பங்களாதேஷ் அணி 34 போட்டிகளில் பங்கேற்று 7 வெற்றிகளையும், 18 தோல்விகளையும் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஹத்துருசிங்க பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ததையடுத்து அந்நாட்டு கிரிக்கெட் சபை, எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடரை கருத்திற்கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன் ஒன்றுகூடி, ஒருசில முக்கிய தீர்மானங்களை எடுத்திருந்தது.

இதன்படியே, உதவித் தலைவராகச் செயற்பட்டு வந்த தமீம் இக்பாலை நீக்கிவிட்டு, அவருடைய இடத்துக்கு மஹமதுல்லாவை நியமிக்கவும் அந்நாட்டு கிரிக்கெட் சபை தீர்மானம் எடுத்துள்ளது.

அத்துடன் ஹத்துருசிங்கவின் பதவி விலகலுக்கு பின்னர் வெற்றிடமாகவுள்ள பயிற்றுவிப்பாளர் பதவிக்கு அவ்வணியின் முன்னாள் பயிற்றுனரான இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் பைபஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த பில் சிம்மெண்ட்ஸ் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்.

எனினும், இலங்கை தொடருக்காக பயிற்சியாளரை ஒருவரை நியமிப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுக்காவிட்டாலும், இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக அவ்வணியின் முகாமையாளரும், முன்னாள் தெரிவுக் குழு உறுப்பினருமான காலித் மஹ்மூத் சுஜோமை நியமிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.