சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு

Champions Trophy 2025

71

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் அணியில் இருந்து நட்சத்திர வீர்ர்களான சகிப் அல் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். 

எட்டு அணிகள் பங்கேற்கும் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரானது பெப்ரவரி 19ஆம் திகதி முதல் மார்ச் 9ஆம் திகதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது 

இதில் குழு A பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று பங்களாதேஷ் அணிகளும், B பிரிவில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. மேலும், இத்தொடருக்கான அணிகளை அறிவிக்க ஜனவரி 12ஆம் திகதி கடைசி நாள் என ஐசிசி கெடுவித்திருந்தது. எவ்வாறாயினும், அண்மையில் நிறைவடைந்த போர்டர்கவாஸ்கர் கிண்ண டெஸ்ட் தொடரைக் காரணம் காட்டி பிசிசிஐ இத்தொடருக்கான இந்திய அணியை அறிவிப்பதற்கு கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளது 

இதுதவிர்த்து தற்போது வரை ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் அறிவிக்காப்பட்டுள்ளது. இந்த நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் பங்களாதேஷ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை நேற்று (12) அறிவித்துள்ளது. 

இத்தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் அணியின் தலைவராக நஜ்முல் ஹொசைன் சாண்டோ பெயரிடப்பட்டுள்ளார். முன்னதாக பங்களாதேஷ் டெஸ்ட் மற்றும் T20I அணிகளின் தலைவர் பதவியில் இருந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ விலகிய நிலையில், சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான பங்களாதேஷ் அணியின் தலைவராக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, பங்களாதேஷ் அணியில் நட்சத்திர சகலதுறை வீரர் சகிப் அல் ஹசனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை 

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பந்துவீச்சுப் பரிசோதனையில் சகிப் அல் ஹசன் தோல்வியடைந்ததை அடுத்து, இத்தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுதவிர்த்து அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான லிட்டன் தாஸுக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான T20I தொடரில் பங்களாதேஷ் அணியின் தலைவராக செயல்பட்ட அவர், அதில் பிரகாசிக்கத் தவறியதன் காரணமாக சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான பங்களாதேஷ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் 

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வை அறிவித்த தமிம் இக்பாலும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான பங்களாதேஷ் அணியில் இடம்பெறவில்லை.   

பங்களாதேஷ் அணி: விபரம்: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (தலைவர்), சௌமியா சர்க்கார், தன்ஸித் ஹசன், தாவ்ஹித் ஹ்ரிடோய், முஸ்பிக்குர் ரஹீம், மஹ்மூதுள்ளா, ஜக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அஹ்மட், முஸ்தபிசூர் ரஹ்மான், பர்வேஸ் ஹொசைன் எமன், நசும் அஹ்மத், தன்சிம் ஹசன் சகிப், நஹித் ராணா. 

பங்களாதேஷ் அணி அட்டவணை 

  • பெப்ரவரி 20 – பங்களாதேஷ் vs இந்தியா, துபாய் 
  • பெப்ரவரி 24 – பங்களாதேஷ் vs நியூசிலாந்து, ராவல்பிண்டி 
  • பெப்ரவரி 27 – பாகிஸ்தான் vs பங்களாதேஷ், ராவல்பிண்டி 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<