டயலொக் சம்பியன்ஸ் லீக் சுப்பர் 8 சுற்றின் இரண்டாம் வாரப் போட்டிகள் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் இம்மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
இச்சுற்றின் முதல் வாரத்திற்கான போட்டிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் நடத்தப்பட்டன. பின்னர் ஒற்றுமைக் கிண்ணத் தொடரில் இலங்கை தேசிய கால்பந்து அணி பங்குகொள்ளவிருந்ததால், இரண்டாம் வாரப் போட்டிகள் நவம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இலங்கை குழாமில் உள்ளடக்கப்பட்டிருந்த வீரர்களில் பலர் சுப்பர் 8 சுற்றிற்கு தகுதி பெற்ற கழகங்களின் முக்கிய வீரர்களாக இருந்தமையினால், அக்கழகங்களின் வேண்டுகோளுக்கமைய இலங்கை கால்பந்து சங்கம் இம்முடிவை எடுத்திருந்தது.
எனினும் நவம்பர் மாதத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக போட்டிகளை நடாத்த இயலாத ஒரு நிலைமை இருந்தது. இதனால், இலங்கை கால்பந்து சம்மேளனம் சுப்பர் 8 சுற்றின் இரண்டாம் வாரத்திற்கான போட்டிகளை இவ்வருடம் ஜனவரி மாதம் வரை ஒத்திவைத்தது.
முதல் வாரப் போட்டிகளின் முடிவுகள்
முதல் வாரத்தில் பலரினதும் கவனத்தை ஈர்த்த அணியாக சொலிட் விளையாட்டுக் கழக அணி காணப்பட்டது. கடற்படை அணியை துவம்சம் செய்த அவ்வணி இலகு வெற்றியை சுவீகரித்துக்கொண்டது.
FA கிண்ண நடப்பு சம்பியனான இராணுவ அணி தமது இறுதி நேர கோலின் காரணமாக விமானப்படை அணியுடனான போட்டியை வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவு செய்து கொண்டது.
இச்சுற்றுப்போட்டியின் நடப்பு சம்பியனான கொழும்பு கால்பந்து கழகத்தை சிறப்பாக எதிர்கொண்ட நிவ் யங்ஸ் கால்பந்து கழகமும் போட்டியை சமநிலையில் நிறைவு செய்து புள்ளிகளை பெற்றுக்கொண்டது.
முதல் வாரத்தின் வியக்கத்தக்க போட்டி முடிவாக, பிரபல ரினௌன் விளையாட்டுக் கழகத்திற்கு அதிர்ச்சியளித்த ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம், E.B. ஷன்னவின் அபாரமான ஆட்டத்தின் உதவியுடன் வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.
இரண்டாம் வாரத்திற்கான போட்டிகளும் விறுவிறுப்பான போட்டிகளாக அமையவுள்ள நிலையில், சொலிட் விளையாட்டுக் கழகம் மற்றும் ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழக அணிகள் தங்களது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தும் வெளிக்காட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம்.