முதல் முறையாக சம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் டொட்டன்ஹெம்

208

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட தொடரின் காலிறுதிச் சுற்றில் மென்செஸ்டர் சிட்டி கழகத்தின் தரமான ஆட்ட சவாலை முறியடித்த டொட்டன்ஹெம் ஹொஸ்பர் கழகம் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

இதேவேளை மற்றுமொரு காலிறுதிச் சுற்றின் இரண்டாவது லெக் ஆட்டத்தில் போட்டோ (Porto) அணியை தோற்கடித்து லிவர்பூல் கழகமும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

சம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் பார்சிலோனா, ஏஜெக்ஸ் அணிகள்

ஐரோப்பாவின் மிகப் பெரிய கால்பந்து தொடரான சம்பியன்ஸ் லீக் கால்பந்து…

டொட்டன்ஹெம் எதிர் மென்செஸ்டர் சிட்டி

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட தொடரின் காலிறுதிச் சுற்றின் இரண்டாவது லெக் ஆட்டத்தில் டொட்டன்ஹெம் ஹொஸ்பர் கழகத்தை தனது சொந்த மைதானத்தில் மென்செஸ்டர் சிட்டி  கழகம் எதிர்கொண்டது.

போட்டி ஆரம்பித்து நான்காவது நிமிடத்தில் ரஹீம் ஸ்ரேலிங் கோலொன்றைப் போட, மென்செஸ்டர் சிட்டி கழகம் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. சுதாகரித்து விளையாடிய டொட்டன்ஹெம் ஹொஸ்பர் கழகம் சார்பில்  தென்கொரிய வீரர் சுனுங் மின், 7 ஆவது மற்றும் 10 ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களைப் போட்டு, மென்செஸ்டர் சிட்டி கழகத்திற்கு அதிர்ச்சியளித்தார்.

எனினும்  11 ஆவது நிமிடத்தில் பெர்னாடோ சில்வா மற்றுமொரு கோலைப் போட்டார். மீண்டும் 21 ஆவது நிமிடத்தில் ரஹீம் ஸ்ரேலிங் கோலொன்றைப் போட, மென்செஸ்டர் சிட்டி கழகம் போட்டியின் முதல் பாதியில் 3 – 2 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி கழகம் சார்பில் 59 ஆவது நிமிடத்தில் சேர்ஜியோ அகேரோ மற்றுமொரு கோலைப் போட 4 – 2 என்ற கோல்கள் கணக்கில் அந்த கழகம் முன்னிலை வகித்தது.

எனினும் 73 ஆவது நிமிடத்தில் பெர்ணாண்டோ லொரெண்டெ கோலொன்றைப் போட டொட்டன்ஹெம் ஹொஸ்பர் கழகம், கோல் வித்தியாசத்தை ஒன்றாக குறைத்தது.

போட்டி நிறைவடைவதற்கு சில நிமிடங்கள் இருக்கும் போது ரஹீம் ஸ்ரேலிங் மூன்றாவது கோலையும் போட மென்செஸ்டர் சிட்டி கழகம் வெற்றிக்களிப்பில் மூழ்கியது. பெறப்பட்ட கோல் விதிமுறைக்கு உட்பட்டதா என்பதை உறுதிப்படுத்துமாறு போட்டி நடுவர்  வீடியோ உதவி நடுவரை கோரினார். இந்த கோல் விதிமுறைக்கு புறம்பானது என தீர்மானிக்கப்பட்ட நிலையில், மென்செஸ்டர் சிட்டி கழகத்தின் கனவு இறுதி நிமிடத்தில் கலைந்தது.

போட்டியின் இறுதிவரை இரு அணிகளாலும் மேலதிக கோல் எதனையும் போட முடியாமல் போக 4 – 3 என்ற கோல்கள் கணக்கில் மென்செஸ்டர் சிட்டி கழகம் வெற்றிபெற்றது.

முதல் லெக் (First leg) ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் டொட்டன்ஹெம் ஹொஸ்பர் கழகம் வெற்றிபெற்ற நிலையில், இரண்டு லெக் ஆட்டங்களின் பிரகாரம் போட்டியில் இரண்டு அணிகளும் தலா 4 கோல்களைப் போட்டு சமநிலை பெற்றிருந்தன. எனினும் எதிரணியின் மைதானத்தில் அதிக கோல்களைப் போட்டதன் அடிப்படையில் வெற்றியை தனதாக்கிய டொட்டன்ஹெம் ஹொஸ்பர் கழகம் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

>>உலகக் கிண்ண தகுதிகாண் முதல் சுற்றில் மகாவு – இலங்கை மோதல்

இதன் பிரகாரம் எதிர்வரும் 30ஆம் திகதி ஏஜெக்ஸ் (Ajax) கழகத்தை தனது அரையிறுதிச் சுற்றின் முதல் லெக் ஆட்டத்தில் டொட்டன்ஹேம் ஹொஸ்பர் கழகம் எதிர்கொள்ளவுள்ளது.

இந்தப் போட்டி குறித்து கருத்து வெளியிட்ட மென்செஸ்டர் சிட்டி கழக முகாமையாளர் பெப் குவாதியோலோ, இந்தப் போட்டி முக்கியமானது எனவும் முடிவு எதுவானாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

கழக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் குறித்து பெருமை அடைவதாக குறிப்பிட்ட அவர், ரசிகர்கள் வழங்கிய பாரிய ஆதரவு கரகோஷத்தை மற்றுமொரு தடவை கேட்டதாகவும் கால்பந்தாட்டம் என்பது கணிக்க முடியாத ஒன்றெனவும் பெப் குவாதியோலோ குறிப்பிட்டுள்ளார்.

துரதிஷ்டவசமாக மோசமான முடிவு எமக்கு கிட்டிய போதிலும் அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பை பெற்ற டொட்டன்ஹெம் கழகத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வெற்றி குறித்து கருத்து வெளியிட்ட டொட்டன்ஹெம் கழக முகாமையாளர் மொரன்சியோ போச்சரீனோ, நம்பமுடியாத வகையில் வீரர்கள் போட்டியை நிறைவுசெய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

போட்டியில் வெற்றியீட்டமை குறித்து பெருமைப்படுவதாக குறிப்பிட்ட அவர், கழக வீரர்கள் வெற்றி வீரர்கள் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

போட்டியின் இறுதியில் கோல் பெறப்பட்ட முறைமை அதிருப்தி அளித்த போதிலும் அந்த முடிவு மாற்றப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லிவர்பூல் எதிர் போட்டோ

இதேவேளை மற்றுமொரு காலிறுதிச் சுற்றின் இரண்டாவது லெக் ஆட்டத்தில் போட்டோ கழகத்தை வெற்றிகொண்ட லிவர்பூல் கழகம் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற முதல் லெக் ஆட்டத்தில் 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில், போட்டோ கழகத்தை லிவர்பூல் கழகம் எதிர்கொண்டிருந்தது.

போட்டியின் முதல் பாதியின் 26 ஆவது நிமிடத்தில் சாடியோ மனே (Sadio Mané) கோல் ஒன்றைப் போட, 1-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் கழகம் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் கழகம் மேலும் மூன்று கோல்களைப் போட்டது.

மொஹமட் சலாஹ், ரொபேர்டோ ப்ர்மினோ, வேர்ஜில் வான் டிஜக் (Van Dijk) ஆகியோர் இந்தக் கோல்களைப் போட்டிருந்தனர்.

போட்டோ கழகம் 68 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை மாத்திரம் போட்ட நிலையில், 4 – 1 என்ற கோல்கள் கணக்கில் லிவர்பூல் கழகம் போட்டியில் வெற்றியை தனதாக்கியது.

ஏற்கனவே முதல் லெக் ஆட்டத்தில் 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றிருந்த லிவர்பூல் கழகம், இரண்டு லெக் ஆட்டங்களின் பிரகாரம் 6 – 1 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இதன் அடிப்படையில் அரையிறுதிச் சுற்றில் முதல் லெக் ஆட்டத்தில் பார்சிலோனா கழகத்தை மே மாதம் 1 ஆம் திகதி லிவர்பூல் கழகம் எதிர்கொள்ளவுள்ளது.

செல்ஸி மற்றும் மென்செஸ்டர் யுனைட்டட் கழகங்களுக்கு அடுத்தபடியாக அடுத்தடுத்த தொடர்களில் அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து கழகமாக லிவர்பூல் பதிவாகியுள்ளது.

இந்தப் போட்டி குறித்து கருத்து வெளியிட்ட லிவர்பூல் கழக முகாமையாளர் ஜெர்கன் க்ளோப், இம்முறை பருவகாலத்தில் தமது கழகம் சிறப்பாக விளையாடியதாக கூறியுள்ளார்.

எனது பயிற்றுவிப்பின் கீழ் முதல் முறையாக பார்சிலோனா கழகத்திற்கு எதிரான போட்டியில் லிவர்பூல் கழகம் களமிறங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதில் வெற்றிபெறுவது குறித்து கவனம் செலுத்தி செயற்படவுள்ளேன் என லிவர்பூல் கழக முகாமையாளர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை லிவர்பூல் கழகம் மிகவும் பலம்வாய்ந்த ஒன்றெனக் கூறியுள்ள போட்டோ கழக முகாமையாளர் சேர்ஜியோ கொன்சிஸ்சோ, சம்பியன்ஸ் லீக் போட்டிகள் மறக்க முடியாதவை எனக் குறிப்பிட்டுள்ளார்.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<