ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் 16 அணிகள் சுற்றின் இரு இரண்டாம் கட்டப் போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (11) நடைபெற்றன. இதில் RB லிப்சிக் மற்றும் அடலாண்டா அணிகள் வெற்றியீட்டி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,
RB லிப்சிக் எதிர் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர்
கடந்த முறை சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் அணிக்கு எதிரான போட்டியில் மார்செல் சபிட்ஸர் ஆரம்பத்தில் பெற்ற இரட்டை கோல்கள் மூலம் ஜெர்மனி கழகமான லிப்சிக் 3-0 என இலகு வெற்றியீட்டியது.
பார்சிலோனாவை வீழ்த்தியது ரியல் மெட்ரிட்
இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா …..
தனது சொந்த மைதானமான ரெட் புல் அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் இரண்டு கட்டப் போட்டிகளிலும் 4-0 என்ற மொத்த கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெற்ற லிப்சிக் அணி முதல் முறையாக ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது.
இந்தக் கழகம் 10 ஆண்டுகளுக்கு முன்னரே நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
முன்னதாக லண்டனில் நடந்த முதல் கட்டப் போட்டியில் 1-0 என வெற்றியீட்டி வலுவான நிலையிலேயே லிப்சிக் இந்தப் போட்டியில் களமிறங்கியது.
ஆரம்பம் தொட்டே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெர்மனி கழகத்தின் முன் டொட்டன்ஹாம் ஈடுகொடுத்து ஆட போராடியது. மறுபுறம் முன்கள வீரர்களான ஹரி கேன் மற்றும் சொன் ஹியுன் மின் உபாதை காரணமாக விளையாடாத நிலையில் டொட்டன்ஹாமின் ஆக்கிரமிப்பு ஆட்டம் பலவீனமாகவே இருந்தது.
இந்நிலையில் டிமோ வெர்னர் வழங்கிய பந்தை சுமார் 20 மீற்றர் தூரத்தில் இருந்து தாழ்வாக உதைத்து சபிட்ஸர் கோல் புகுத்தினார். தொடர்ந்தும் செயற்பட்ட லிப்சிக் அணித்தலைவர் சபிட்ஸர் 21 ஆவது நிமிடத்தில் அங்கெலினொ வழங்கிய பந்தை கொண்டு கோல்கம்பத்திற்கு நெருக்கமான தூரத்தில் இருந்து தலையால் முட்டி கோல் புகுத்தினார்.
போட்டியின் முழு நேரம் முடிவதற்கு 3 நிமிடங்கள் இருக்கும்போது எமில் போர்ஸ்பேர்க் மூன்றாவது கோலையும் பெற்று ஜெர்மனி கழகத்தின் வெற்றியை உறுதி செய்தார்.
2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட RB லிப்சிக் கழகம் ஐந்தாவது பிரிவின் அமச்சூர் போட்டிகளில் இருந்து தனது கால்பந்து பயணத்தை தொடங்கி 2016 ஆம் ஆண்டிலேயே புண்டஸ்லிகா தொடருக்கு தகுதி பெற்றது. சம்பியன்ஸ் லீக் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் ஏழாவது ஜெர்மனி கழகம் லிப்சிக் என்பது குறிப்பிடத்தக்கது.
உபாதைகளால் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருக்கும் டொட்டன்ஹாம் அணியின் ஸ்டீவ் பெர்க்விஜின் மற்றும் பென் டேவிஸ் இல்லாததால் எதிரணியின் வேகத்தை தடுக்க முடியாமல் போனது.
லிப்சிக் கழகத்திற்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற முதல் கட்டப் போட்டியில் தோற்றதன் பின்னர் எந்த ஆட்டத்திலும் வெற்றிபெறாமல் இருக்கும் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் ப்ரீமியர் லீக்கில் முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறி அடுத்த ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் சுற்றுக்கு தகுதி பெற கடுமையாக போராட வேண்டி இருக்கும்.
வலென்சியா எதிர் அடலாண்டா
ஜோசிப் இலிசிக் அதிரடியாக பெற்ற நான்கு கோல்கள் மூலம் வலென்சியா அணியை 4-3 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்கடித்த அடலாண்டா கழகம் 8-4 என்ற மொத்த கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று சாலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது.
கொரோனா வைரஸினால் அதிகம் பாதிப்புற்றிருக்கும் வடக்கு இத்தாலியில் இருந்து ரசிகர்கள் வரும் ஆபத்து இருக்கும் சூழலில் அந்த வைரஸை கட்டுப்படுத்து நடவடிக்கையாக பார்வையாளர்கள் இன்றி மூடிய அரங்கிலேயே ஸ்பெயினில் இந்தப் போட்டி நடைபெற்றது.
இத்தாலி கழகமான அடலாண்டா 16 அணிகள் சுற்றின் முதல் கட்டப் போட்டியில் 4-1 என முன்னிலை பெற்ற நிலையிலேயே இரண்டாவது கட்டப்போட்டிக்காக ஸ்பெயின் வந்திருந்தது.
நாம்தான் King of Football என்பதை மீண்டும் நிரூபித்த ஸாஹிரா வீரர்கள்
Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் புனித பேதுரு கல்லூரியை 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த கொழும்பு ஸாஹிரா கல்லூரி சம்பியன்…..
மெஸ்டெல்லா அரங்கில் போட்டி ஆரம்பித்த விரைவிலேயே வருகை அணியால் முன்னிலை பெற முடிந்தது. வெலன்சியா பின்கள வீரர் மவுக்டர் டியகபி பெனால்டி பெட்டிக்குள் இழைத்த தவறை அடுத்து கிடைத்த ஸ்பொட் கிக்கை 3ஆவது நிமிடத்தில் இலிசிக் கோலாக மாற்றினார்.
எனினும் எதிரணியின் பின்களத்தில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி கெவின் கெமைரோ ஸ்பெயின் கழகத்திற்காக 21 ஆவது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். 43 ஆவது நிமிடத்தில் பெனால்டி பெட்டிக்குள் டியகபியின் கையில் பந்துபட அடலாண்டா கழகத்திற்கு மீண்டும் ஸ்பொட் கிக் வாய்ப்பு கிடைத்தது. அதனை மீண்டும் கோலாக மாற்றினார் இலிசிக்.
இந்நிலையில் கெமைரோ 51 ஆவது நிமிடத்தில் நெருக்கமான தூரத்தில் இருந்து பெற்ற தனது இரண்டாவது கோல் மூலம் வலென்சியா மீண்டும் போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்தது. தொடர்ந்து பெர்ரன் டொர்ரஸ் பெற்ற கோலின் மூலம் அந்தக் கழகம் போட்டியில் முன்னிலை பெற்றது.
எவ்வாறாயினும் இலிசிக் 20 யார்ட் தொலைவில் இருந்து அபாரமாக பெற்ற கோல் மூலம் அடலண்டா போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்ததோடு சம்பியன்ஸ் லீக்கில் ஹட்ரிக் கோல் பெற்ற முதல் சொல்வேனிய நாட்டு வீரராக இலிசிக் சாதனை படைத்தார்.
தொடர்ந்து செயற்பட்ட இலிசிக் 82 ஆவது நிமிடத்தில் தனது நான்காவது கோலையும் புகுத்தியதன் மூலம் அடலாண்டா கழகம் காலிறுதிச் சுற்றுக்கு இலகுவாக முன்னேற்றம் கண்டது.
இதன்மூலம் 2016-17 பருவத்தில் லெய்செஸ்டர் சிட்டி அணிக்கு பின்னர் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கில் தனது கன்னிப் போட்டித் தொடரிலேயே காலிறுதிக்கு முன்னேறிய முதல் அணியாக அடலாண்டா பதிவானது.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<