உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பினைத் தொடர்ந்து, ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் (UEFA) எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் நடைபெறவிருந்த 2021/22 ஆம் பருவகாலத்திற்கான சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியை பரிஸிற்கு மாற்றம் செய்துள்ளது.
UEFA செயற்குழு வெள்ளிக்கிழமை அவசரக் கூட்டத்தை நடத்தி அதில் இந்த முடிவை எடுத்தது. செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரம், ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினின் சொந்த நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய மற்றும் உக்ரேனிய கழகங்களும் ஐரோப்பிய போட்டிகளில் பங்கேற்கும் அந்நாடுகளின் தேசிய அணிகளும் மறு அறிவிப்பு வரும் வரை தங்கள் சொந்த மைதான போட்டிகளை நடுநிலை மைதானங்களில் விளையாட வேண்டும் என்றும் நிர்வாகக் குழு முடிவு செய்தது.
இந்த முடிவானது ஐரோப்பிய லீக்கில் விளையாடும் ஸ்பார்டக் மொஸ்கோவையும் (Spartak Moscow), எதிர்வரும் ஜூன் மாதம் தொடங்கவிருக்கும் 2022-23 நேஷன்ஸ் லீக்கில் விளையாடும் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு அணிகளையும் பாதிக்கும்.
இது தொடர்பில் UEFA வெளியிட்ட அறிக்கையில்,
“இந்த நெருக்கடியான நேரத்தில் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியை பிரான்சுக்கு மாற்றுவதற்கு ஆதரவு தந்த பிரான்ஸ் தலைவர் இம்மானுவேல் மக்ரோனுக்கு UEFA தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்க விரும்புகிறது. இந்த ஆட்டம் முதலில் திட்டமிட்டபடி மே 28ஆம் திகதி சனிக்கிழமை அன்று நடைபெறும். UEFA, பிரான்ஸ் அரசாங்கத்துடன் சேர்ந்து, உக்ரைனில் உள்ள கால்பந்து வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு கடுமையான மனித துன்பங்கள் மற்றும் இடப்பெயர்வுகளை எதிர்கொள்ளும் பல பங்குதாரர்களின் முயற்சிகளை முழுமையாக ஆதரிக்கும்” என தெரிவித்தது.
AFC ஆசிய கிண்ண இறுதி தகுதிகாண் சுற்றில் இலங்கை C குழுவில்
இந்த நிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை Play off போட்டிகள் குறித்து பிஃபா (FIFA) இன்னும் முடிவு எடுக்கவில்லை. மார்ச் 24ஆம் திகதி நடைபெறும் Play off அரையிறுதியில் ரஷ்யாவில் போலந்து விளையாடுகிறது. அடுத்த அரையிறுதியில் சுவீடன் மற்றும் செக் குடியரசு அணிகள் மோதுகின்றன. அதன் பின்னர் Play off இன் இறுதி போட்டியும் ரஷ்யாவில் நடைபெறவுள்ளது.
போலந்து, சுவீடன் மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளின் கூட்டமைப்புகள் வியாழக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டு, ரஷ்ய எல்லையில் போட்டிகள் நடத்தப்படக்கூடாது என்றும், “மாற்றுத் தீர்வுகள்” காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தின.
பிஃபா தலைவர் கியானி இன்பான்டினோ (Gianni Infantino) வியாழனன்று தனது அமைப்பு (FIFA) இந்த விடயத்தை அவசரத்துடன் கவனிக்கும் என்று கூறினார், அத்தோடு அடுத்த மாதத்திற்குள் நிலைமை தீர்க்கப்படும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.
மார்ச் 24 அன்று நடைபெறும் Play off அரையிறுதியில் உக்ரைன் ஸ்காட்லாந்தை ஹேம்ப்டன் பார்க்கில் எதிர்கொள்ள உள்ளது. ஆனால் படையெடுப்பைத் தொடர்ந்து உக்ரேனிய லீக் இடைநிறுத்தப்பட்டதால் இந்த போட்டியும் சந்தேகத்தில் உள்ளது.
FA கிண்ணம், பிரீமியர் லீக் அல்லது EFL போன்ற கால்பந்து அமைப்புகளின் தண்டனைக்கு பயப்படாமல், யார் மனதையும் புண்படுத்தாமல், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக வீரர்கள், ரசிகர்கள் மற்றும் கால்பந்து கழகங்கள் சுதந்திரமாக எதிர்ப்பு தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது .
ஒரு நாட்டின் கொடியை சட்டையிலோ அல்லது மைதானத்திலோ காட்டுவது குற்றமல்ல. ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பல கழகங்கள் இந்த வார இறுதிப் போட்டிகளின் போது, ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் உக்ரைன் கொடியை ஏற்றுக்கொள்வதை பரிசீலித்து வருகின்றன என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதாவது செயல் புண்படுத்தும் வகையில் இருந்தால் மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.
விளாடிமிர் புடின் உக்ரைன் மீது படையெடுப்பிற்கு உத்தரவிட்டதை அடுத்து, ரஷ்ய அரசு எரிசக்தி நிறுவனமான Gazprom உடனான உறவுகளை துண்டிக்க UEFA அதிக அழுத்தத்தில் உள்ளது.
சுதந்திர கிண்ண அரையிறுதிப் போட்டிகள் விபரம் வெளியீடு
ரஷ்ய அரசாங்கத்தின் பெரும்பான்மைக்கு சொந்தமான காஸ்ப்ரோம் நிறுவனம், ஐரோப்பிய கால்பந்தின் நிர்வாகக் குழுவின் முக்கிய ஆதரவாளர்களில் (sponsors) ஒன்றாகும்.
UEFA 2012 ஆம் ஆண்டு முதல் Gazprom உடன் ஒரு sponsorship ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளது. மேலும் அந்த நிறுவனம் சம்பியன்ஸ் லீக், ஐரோப்பிய சம்பியன்ஷிப் மற்றும் நேஷன்ஸ் லீக் ஆகியவற்றிற்கு ஆதரவாக ஆண்டுக்கு €40 மில்லியன் செலவழிக்கிறது. அதன் சமீபத்திய மூன்று ஆண்டு ஒப்பந்தத்தை கடந்த மே மாதம் புதுப்பித்தமை என்பதும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கால்பந்து செய்திகளுக்கு<<