சம்பியன்ஸ் லீக் 2022 கால்பந்து தொடரில் இதுவரையில் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று வந்த மாத்தறை சிடி கழகத்திற்கு எதிரான போட்டியை சுபர் சன் அணி சமன் செய்துள்ளது. அதேபோன்று, பெலிகன்ஸ் மற்றும் மொறகஸ்முல்ல விளையாட்டுக் கழகங்கள் வெற்றிகளை சுவைத்துள்ளன.
சம்பயின்ஸ் லீக் கால்பந்து தொடரின் எட்டாம் வாரத்திற்கான மூன்று போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்றன. அவற்றின் சுருக்கத்தை கீழே பார்ப்போம்.
பெலிகன்ஸ் வி.க எதிர் நியூ ஸ்டார் வி.க
சுகததாச அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியின் அதிகமான நேரம் பெலிகன்ஸ் வீரர்களின் கால்களிலேயே பந்து இருந்தது. கோலுக்கான தொடர் முயற்சிகளை மேற்கொண்ட அவ்வணி வீரர்கள் வெளிநாட்டு வீரர் சசா, தேசிய அணியின் முன்னாள் வீரர் எடிசன் பிகுராடோ மற்றும் நப்ஷான் மொஹமட் ஆகியோர் மூலம் முதல் பாதியில் கோல்களைப் பெற்றனர்.
- இலகு வெற்றியை பெற்ற நிகம்பு யூத், செரண்டிப்
- சொலிட் அணியை அபாரமாக வீழ்த்திய செரண்டிப்
- கிறிஸ்டல் பெலஸ் இலகு வெற்றி; இறுதி நேரத்தில் நிகம்பு யூத்தை வீழ்த்திய பெலிகன்ஸ்
- SAFF 17 வயதின்கீழ் கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் இலங்கையில்
- இலங்கை 17 வயதின் கீழ் கால்பந்து அணிக்கான வீரர்கள் தெரிவு இவ்வாரம்
இரண்டாம் பாதி ஆரம்பித்ததில் இருந்தும் பெலிகன்ஸ் வீரர்கள் கோலுக்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்ட போதும், 81ஆவது நிமிடத்தில் சசா கோலுக்கு அண்மையில் இருந்து கொடுத்த பந்தின்மூலம் நப்ஷான் தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தார்.
மறுமுனையில் நியூ ஸ்டார் வீரர்கள் தமக்கு கிடைத்த கோலுக்கான சிறந்த வாய்ப்புக்களை நிறைவு செய்வதில் மேற்கொண்ட தவறுகள் காரணமாக அவர்களால் போட்டியின் இறுதி வரையில் கோல்கள் எதனையும் பெற முடியாமல் போனது.
எனவே, 4-0 என போட்டியை இலகுவாக வென்ற பெலிகன்ஸ் வீரர்கள் தொடரில் தமது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தனர்.
முழு நேரம்: பெலிகன்ஸ் வி.க 4 – 0 நியூ ஸ்டார் வி.க
கோல் பெற்றவர்கள்
- பெலிகன்ஸ் வி.க – T. சசா 25’, எடிசன் பிகுராடோ 33’, நப்ஷான் மொஹமட் 45+1’ & 81’
சுபர் சன் வி.க எதிர் மாத்தறை சிடி க
காலி மாவட்ட விளையாட்டு தொகுதி மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் மாத்தறை சிடி அணித் தலைவர் ஐசாக் அவ்வணிக்கான முதல் கோலைப் பெற்றார்.
எனினும், போட்டியின் 66ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக வந்த சுபர் சன் அணியின் ஹசித்த பிரியன்கர, தான் மைதானத்திற்குள் நுழைந்து 12ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் போட்டு ஆட்டத்தை சமப்படுத்தினார்.
எனினும், போட்டியின் இறுதி நிமிடங்களில் மாத்தறை சிடிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பின்போது முன்னணி வீரர் பிரின்ஸ் உதைந்த பந்து கோல் கம்பத்தில் பட்டு மீண்டும் மைதானத்திற்கு வர சுபர் சன் வீரர்கள் அதனை அங்கிருந்து வெளியேற்றினர்.
எனவே, இறுதி நிமிடத்தில் கிடைத்த வெற்றி கோலுக்கான வாய்ப்பு தவறவிடப்பட, போட்டி தலா ஒரு கோலுடன் சமநிலையடைந்தது.
இதுவரை அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுவந்த மாத்தறை சிடி அணிக்கு இந்தப் போட்டியில் கிடைத்த முடிவு பெரிதும் ஏமாற்றமாகவே இருந்தது.
முழு நேரம்: சுபர் சன் வி.க 1 – 1 மாத்தறை சிடி க
கோல் பெற்றவர்கள்
- சுபர் சன் வி.க – ஹசித்த பிரியன்கர 78’
மாத்தறை சிடி க – ஐசாக் 37’
சொலிட் வி.க எதிர் மொறகஸ்முல்ல வி.க
அநுராதபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் இரு அணி வீரர்களாலும் எந்தவொரு கோலும் பெறப்படவில்லை.
எனினும், போட்டியின் இரண்டாம் பாதியில் 75ஆவது நிமிடத்தில் மொறகல்முல்ல அணியின் மத்திய கள வீரர் மஹேஷ் ஷாமர அவ்வணிக்கான வெற்றி கோலைப் பெற்றுக் கொடுத்தார்.
எனவே, 1-0 என தோல்வியடைந்துள்ள சொலிட் விளையாட்டுக் கழகம், பொலிஸ் விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து இந்த தொடரில் ஒரு வெற்றியையும் பதிவு செய்யாத அணியாக உள்ளது.
முழு நேரம்: சொலிட் வி.க 0 – 1 மொறகஸ்முல்ல வி.க
கோல் பெற்றவர்கள்
- மொறகஸ்முல்ல வி.க – வீரர் மஹேஷ் ஷாமர 75’
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<