10 வீரர்களுடன் பெலிகன்ஸை வீழ்த்திய சென் மேரிஸ்

Champions League 2022

1047

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் ஐந்தாவது வாரத்திற்கான இரண்டாவது நாள் போட்டிகளில் சென் மேரிஸ், ஜாவா லேன், மாத்தறை சிடி மற்றும் கிறிஸ்டல் பெலஸ் அணிகள் வெற்றிகளைப் பெற்றுள்ளன.

சென் மேரிஸ் வி.க எதிர் பெலிகன்ஸ் கா.க

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் 16ஆவது நிமிடத்தில் வெளிநாட்டு வீரர் ஒலவாலே பெற்ற கோலினால் முதல் பாதியில் சென் மேரிஸ் வீரர்கள் முன்னிலை பெற்றனர்.

இந்தப் போட்டியின் 31ஆவது நிமிடமாகும்போது சென் மேரிஸ் அணியின் பின்கள வீரர் ஜேசுராஜ் இரண்டு மஞ்சள் அட்டைகளைப் பெற்றமையினால், சிவப்பு அட்டையுடன் மைதானத்தில் இருந்து வெளியேறியமையினால் சென் மேரிஸ் வீரர்கள் எஞ்சிய முழு நேரத்தையும் 10 வீரர்களுடனேயே விளையாடினர்.

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 10 நிமிடங்களில் பெலிகன்ஸ் அணிக்கான ஆடும் யாழ் வீரரான ரஜிகுமார் சான்தன் பெற்ற கோலினால் போட்டி சமநிலையடைந்தது.

போட்டியின் 70 நிமிடங்கள் கடந்த நிலையில் சென் மேரிஸ் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பெற்ற ஞானரூபன் வீனோத் அதனை கோலாக்க, ஆட்ட நிறைவில் 2-1 என வெற்றி பெற்ற சென் மேரிஸ் வீரர்கள் தொடரில் தமது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தனர்.

சென் மேரிஸ் வீரர்கள் ஏற்கனவே இதே அரங்கில் சுபர் சன் அணியையும் 4-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: சென் மேரிஸ் வி.க 2 -1 பெலிகன்ஸ் கா.க


கிறிஸ்டல் பெலஸ் கா.க எதிர் இலங்கை பொலிஸ் வி.க

சுகததாச அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் 5 நிமிட இடைவெளியில் அப்னாத் இரண்டு கோல்களையும், இரண்டாம் பாதியில் பிரேம் குமார் இரண்டு கோல்களையும் பெற, போட்டி நிறைவில் 4-0 என்ற கோல்கள் கணக்கில் கிறிஸ்டல் பெலஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியினால் கிறிஸ்டல் பெலஸ் அணி சம்பியன்ஸ் லீக் தொடரில் தமது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதேவேளை, பொலிஸ் விளையாட்டுக் கழகம் தாம் விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

முழு நேரம்: கிறிஸ்டல் பெலஸ் கா.க 4 – 0 இலங்கை பொலிஸ் வி.க


சுபர் சன் வி.க எதிர் ஜாவா லேன் வி.க

காலி மாவட்ட விளையாட்டு தொகுதி மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் மாலக பெரேரா மற்றும் வெளிநாட்டு வீரர்களான பிரன்சிஸ், ஒலவாலே ஆகியோர் பெற்ற கோல்களினால் ஜாவா லேன் அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.

எனவே, இந்த தொடரில் ஜாவா லேன் அணி தமது நான்காவது வெற்றியைப் பதிவு செய்து மாத்தறை சிடி அணியுடன் தோல்வி காணாத அணியாக வலம்வருகின்றது. இதுவரை 3 வெற்றிகளைப் பெற்றுள்ள சுபர் சன் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும்.

முழு நேரம்: சுபர் சன் வி.க 0 – 3 ஜாவா லேன் வி.க


சொலிட் வி.க எதிர் மாத்தறை சிடி க

குருனாகல் மாலிகாபிடிய அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் வெளிநாட்டு வீரர்கள் மூலம் இரண்டு கோல்களைப் பெற்ற மாத்தறை சிடி வீரர்கள் இரண்டாம் பாதியில் மேலும் நான்கு கோல்களைப் பெற்றனர்.

இதில், லார்பி பிரின்ஸ் தனது ஹெட்ரிக் கோலையும் பதிவு செய்ய, மாத்தறை சிடி கழகம் 6-0 என இலகுவாக வெற்றி பெற்று, தமது ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்தது. எனவே, அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணியாக புள்ளிப் பட்டியிலில் முதல் இடத்தில் மாத்திறை சிடி கழகம் உள்ளது.

முழு நேரம்: சொலிட் வி.க 0 – 6 மாத்தறை சிடி க

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<