சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நான்காம் வாரத்திற்கான நான்கு போட்டிகள் சனிக்கிழமை (25) இடம்பெற்றன.
இதில் மாத்தறை சிடி கழகம், நிகம்பு யூத் மற்றும் சோண்டர்ஸ் அணிகள் வெற்றிகளை சுவைக்க, யாழ்ப்பாணம் செம் மேரிஸ் மற்றும் நியூ ஸ்டார் அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
சோண்டர்ஸ் வி.க எதிர் செரண்டிப் கா.க
சம்பியன்ஸ் லீக்கில் இதுவரை தோல்வி காணாத அணியாக வலம்வந்த செரண்டிப் கால்பந்து கழகம் மற்றும் இதுவரை ஒரு வெற்றியையும் பதிவு செய்யாத சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான இந்தப் போட்டி சுகததாச அரங்கத்தில் இடம்பெற்றது.
போட்டியின் முதல் பாதியில் சோண்டர்ஸ் வீரர்கள் எதிரணியின் கோல் எல்லையில் வைத்து மேற்கொண்ட பந்துப் பரிமாற்றங்களின்போது செரண்டிப் பின்கள வீரர்கள் விட்ட தவறினால் நிரேஷ் மற்றும் பெதும் கிம்ஹான ஆகியோரால் சோண்டர்ஸ் 3 கோல்களைப் பெற்றது.
மீண்டும் இரண்டாம் பாதியில் 70 நிமிடங்கள் கடந்த நிலையில் சோண்டர்ஸ் அணிக்கு எதிரணியின் மத்திய களத்தில் கிடைத்த பிரீ கிக்கை நிரேஷ் பெற்றார். இதன்போது கோல் நோக்கி உதைந்த பந்து செரண்டிப் கோல் காப்பாளர் லுத்பியின் கைகளில் பட்டு கம்பங்களுக்குள் சென்றது.
- இலங்கை 20 வயதின்கீழ் தேசிய அணிக்கான வீரர்கள் தெரிவுக்கு அழைப்பு
- வெற்றிநடை போடும் மாத்தறை சிடி, செரண்டிப்; சென் மேரிஸ் முதல் வெற்றி
- பொலிஸை வீழ்த்திய நிகம்பு யூத்; சோண்டர்ஸ் – ஜாவா லேன் மோதல் சமநிலை
அடுத்த 8 நிமிடங்களுக்குள் செரண்டிப் அணிக்கான முதல் கோலை எவான்ஸ் பெற, சோண்டர்ஸ் அணிக்கு மாற்று வீரராக வந்த இளம் வீரர் நாலக ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் அவ்வணிக்கான ஐந்தாவது கோலையும் பெற்றார்.
எனவே, போட்டி நிறைவில் மேலதிக 4 கோல்களால் வெற்றி பெற்ற சோண்டர்ஸ் அணி தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்ய, இந்த தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுவந்த செரண்டிப் அணி முதல் தோல்வியை சந்தித்தது.
முழு நேரம்: சோண்டர்ஸ் வி.க 5 – 1 செரண்டிப் கா.க
நியூ ஸ்டார் வி.க எதிர் சென் மேரிஸ் வி.க
குருனாகல் மாலிகாபிடிய அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் 40ஆவது நிமிடத்தில் சென் மேரிஸ் அணிக்கு கிடைத்த கோணர் வாய்ப்பின்போது உள்வந்த பந்து நியூ ஸ்டார் அணி வீரரின் கையில் பட்டமையினால் நடுவர் சென் மேரிஸ் அணிக்கு பெனால்டிக்கான வாய்ப்பை வழங்கினார்.
எனினும், நியூ ஸ்டார் அணி வீரர்களும், அதிகாரிகளும் பிரதான நடுவரின் குறித்த தீர்ப்பை நிராகரித்ததையடுத்து பிரதான நடுவர், உதவி நடுவருடன் கலந்துரையாடலை மேற்கொண்டார். எனினும், நிதர்சன் பெனால்டி உதையை பெறுவதற்கு தயார்நிலையில் இருக்கும்போது, சென் மேரிஸ் அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பு நடுவரால் மீளப் பெறப்பட்டது. எனவே, முதல் பாதி கோல்கள் எதுவும் இன்றி நிறைவுற்றது.
போட்டியின் இரண்டாவது பாதி ஆரம்பமாகி 10 நிமிடங்கள் கடப்பதற்கு முன் தேசிய அணியின் முன்னாள் வீரர் ஞானரூபன் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தின்போது தற்போதைய தேசிய வீரர் நிதர்சன் ஹெடர் மூலம் சென் மேரிஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.
போட்டியின் 70 நிமிடங்கள் கடந்த நிலையில் நியூ ஸ்டார் அணியின் அனுபவ வீரர் நதீக புஷ்பகுமார பெற்ற கோலினால் ஆட்டம் சமநிலையடைந்தது.
முழு நேரம்: நியூ ஸ்டார் வி.க 1 – 1 சென் மேரிஸ் வி.க
மாத்தறை சிடி க எதிர் மொறகஸ்முல்ல வி.க
மாத்தறை கொடவில அரங்கில் ஆரம்பமான இந்தப் போட்டியின் 8ஆவது நிமிடத்தில் பிரின்ஸ் மற்றும் 11ஆவது நிமிடத்தில் இளம் வீரர் கவிஷ்க மூலம் மாத்தறை சிடி அணி இரண்டு கோல்களைப் பெற, அடுத்த ஏழு நிமிடங்களில் மொறகஸ்முல்ல வீரர் எரந்த பிரசாத் அவ்வணிக்கான முதல் போலைப் பெற்றார்.
அதன் பின்னர் போட்டியின் நிறைவு வரை எந்தவொரு மெலதிக கோலும் பெறப்படாத நிலையில், மாத்தறை சிடி 2-1 என வெற்றி பெற்று, தமது தொடர்ச்சியான நான்காவது வெற்றியையும் பதிவு செய்து, புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.
முழு நேரம்: மாத்தறை சிடி க 2 – 1 மொறகஸ்முல்ல வி.க
நிகம்பு யூத் கா.க எதிர் கிறிஸ்டல் பெலஸ் கா.க
காலி மாவட்ட விளையாட்டு தொகுதி மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் வெளிநாட்டு வீரர் அன்தோனி நிகம்பு யூத் அணிக்கான இரண்டு கொல்களைப் பெற, கிறிஸ்டல் பெலஸ் அணிக்கான முதல் கோலை பாசித் பெற்றார்.
இரண்டாம் பாதி ஆரம்பமாகி 3 நிமிடங்களில் கிறிஸ்டல் பெலஸ் அணியின் வெளிநாட்டு வீரர் இப்ராஹிம் மேலும் ஒரு கோலைப் பெற்று போட்டியை சமப்படுத்தினார்.
எனினும், ஆட்டத்தின் 85ஆவது நிமிடத்தில் நிறிஸ்டீன் பெர்னாண்டோ நிகம்பு யூத் அணிக்கான வெற்றி கோலைப் பெற்றுக் கொடுத்தார்.
முழு நேரம்: நிகம்பு யூத் கா.க 3 – 2 கிறிஸ்டல் பெலஸ் கா.க
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<