சம்பியன்ஸ் லீக் 2022 தொடரின் முதல் வாரத்திற்கான இறுதி இரண்டு போட்டிகளும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றன. இதில் செரண்டிப் கால்பந்து கழகம் 4-0 என சென் மேரிஸ் அணியை வீழ்த்த, சோண்டர்ஸ் மற்றும் சொலிட் அணிகளுக்கு இடையிலான போட்டி தலா ஒரு கோலுடன் சமநிலையடைந்தது.
சோண்டர்ஸ் வி.க எதிர் சொலிட் வி.க
கொழும்பு சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் எதிரணியின் மத்திய களத்தில் சோண்டர்ஸ் வீரர் நிரேஷ் சொலிட் வீரரிடமிருந்து பரித்த பந்தின் மூலம் சிறந்த பந்துப் பரிமாற்றத்தை மேற்கொண்ட சோன்டர்ஸ் வீரர்கள் சிரேஷ்ட வீரர் கிறிஷான்த அபேசேகர மூலம் போட்டியின் முதல் கோலைப் பெற்றது.
இதனால் முதல் பாதி சோண்டர்ஸ் அணியின் முன்னிலையுடன் நிறைவடைந்தது.
- சம்பியன்ஸ் லீக் 2022 நாளை ஆரம்பம்
- நிதர்சனின் கோலுடன் நேபாளம் அணியை சமப்படுத்திய இலங்கை
- “சம்பியன்ஸ் லீக்கில் ரியல் மட்ரிட் சிறந்த அணியில்லை” – மெஸ்ஸி
பின்னர், இரண்டாம் பாதியின் மத்திய களத்தில் இருந்து சொலிட் வீரர் சமித் மதுரங்க எதிரணியின் கோலுக்கு வேகமாக உதைந்த பந்து கோலின் இடது கம்பத்தில் பட்டு உள்ளே சென்றது.
மேலதிக நேரத்தில் சோண்டர்ஸ் வீரர்கள் முழுமையாக பந்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கோலுக்கான முயற்சிகளை அடுத்தடுத்து மேற்கொண்டாலும் அவற்றினால் சிறந்த நிறைவுகள் எதனையும் அவர்களால் மேற்கொள்ள முடியாமல் போனது.
எனவே, போட்டியின் ஆரம்பம் முதலேயே தொடர்ந்து வாய்ப்புக்களை வீணடித்த சோண்டர்ஸ் வீரர்களால் போட்டியை 1-1 என சமநிலையுடனேயே முடிக்க முடிந்தது.
முழு நேரம்: சோண்டர்ஸ் வி.க 1 – 1 சொலிட் வி.க
கோல் பெற்றவர்கள்
சோண்டர்ஸ் வி.க – கிறிஷான்த அபேசேகர 16′
சொலிட் வி.க – சமித் மதுரங்க 55′
சென்ஸ் மேரி வி.க எதிர் செரண்டிப் கா.க
குருனாகல் மாலிகாபிடிய அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் சென் மேரிஸ் வீரர் அன்டனிப்பிள்ளை கிளின்டஸ் பெற்றுக்கொடுத்த ஓன் கோல் மற்றும் எவான்ஸ் பெற்ற கோல்களுடன் செரண்டிப் வீரர்கள் முன்னிலை பெற்றனர்.
பின்னர் இரண்டாம் பாதியில் எவன்ஸ் மேலும் இரண்டு கோல்களைப் பெற, சம்பியன்ஸ் லீக் 2022 தொடரின் முதலாவது ஹெட்ரிக் கோலை எவன்ஸ் பதிவு செய்தார்.
எனவே, போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்திய செரண்டிப் கால்பந்து கழகம் ஆட்ட நிறைவில் 4-0 என இலகுவாக வெற்றி பெற்றது.
முழு நேரம்: சென் மேரிஸ் வி.க 0 – 4 செரண்டிப் கா.க
கோல் பெற்றவர்கள்
செரண்டிப் கா.க – அன்டனிப்பிள்ளை கிளின்டஸ் 32′, அசண்டெ எவன்ஸ் 45+3′, 64′ & 90+2
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<