கடந்த 1998ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்ற ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் தொடர்ந்து 10ஆவது தடவையாகவும் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ளது.
இம்முறை இத்தொடர் கடும் போட்டிகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ளதால் பல்வேறான புதிய சாதனைகள் உருவாகக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.
எனவே, பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், கடந்த கால சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இலங்கை சார்பான நிலைநாட்டப்பட்ட சில சாதனைகளை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றோம்.
மெதிவ்ஸ், குணரத்னவின் ஆட்டம் வீண்: பயிற்சிப் போட்டியில் வென்றது அவுஸ்திரேலியா
2006 ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் பர்வீஸ் மஹரூப், 14 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியமையே, சம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடர் ஒன்றில் பந்து வீச்சாளர் ஒருவர் பெற்றுக்கொண்ட சிறந்த பந்து வீச்சாக உள்ளது. இந்த சிறந்த பந்து வீச்சு சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.
அதிகளவான சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய வீரர்களாக குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் உள்ளனர். இவ்விருவரும் மொத்தமாக 22 போட்டிகளில் விளையாடியுள்ளனர். இவர்களுக்கு அடுத்ததாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் அதிரடித் துடுப்பாட்ட வீரருமான சனத் ஜயசூரிய 20 போட்டிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
வீரர்கள் மாத்திரமன்றி, நடுவர்கள் குறித்த சாதனையும் இலங்கை வசமே உள்ளது. இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரரான ரஞ்சன் மடுகல்ல ஆகக்கூடுதலாக 23 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்கு, போட்டி நடுவராக பணியாற்றியுள்ளார்
.
கத்துக்குட்டி அணியாக சம்பியன்ஸ் கிண்ணத்தில் நுழைவது மகிழ்ச்சியே –மெதிவ்ஸ்
சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் அதிகளவான விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் பட்டியலில் நியூசிலாந்து வீரர் கைல் மில்ஸ் முதலிடத்தை பிடித்திருந்தாலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் முரளிதரன் மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் முறையே 24 மாற்று 22 விக்கெட்டுகளுடன் உள்ளனர். அத்துடன், ஏற்கனவே முரளிதரன் ஒய்வு பெற்றுள்ள நிலையிலும், கைல் மில்ஸ் இம்முறை ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இடம்பெறாத நிலையிலும் இந்த சாதனையை முறியடிக்க லசித் மாலிங்கவுக்கு வாய்ப்புள்ளது.
முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன 2000 ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை 22 சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 15 பிடியெடுப்புகளை பதிவு செய்து முதலிடத்தில் உள்ளார். மஹேலவை அடுத்து 7ஆவது மற்றும் 8ஆவது இடங்களில் ஜேபி டுமினி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் 8 பிடியெடுப்புகளுடன் இம்முறை சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் விளையாடவுள்ளனர்.
விக்கெட் காப்பாளராக 22 சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் களமிறங்கிய குமார் சங்கக்கார, மொத்தமாக 33 ஆட்டமிழப்புகளை பதிவு செய்துள்ளார். சங்கக்காரவுக்கு அடுத்ததாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் கில் க்ரிஸ்ட் உள்ளார். இவ்விருவரும் ஒய்வு பெற்றுள்ள நிலையில், இம்முறை சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் களமிறங்கவுள்ள தி பினிஷெர் என்றழைக்கப்படும் மஹேந்திரசிங் டோனி, 11 போட்டிகளில் 15 ஆட்டமிழப்புகளை செய்து குறித்த வரிசையில் 4ஆவது இடத்தில உள்ளார்,
இதுவரை நடைபெற்றுள்ள சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில், ஏனைய அணிகளை விட 58 ஓவர்களுக்கும் மேலான ஓட்டமற்ற ஓவர்களை வீசிய ஒரே அணியாக இலங்கை அணி திகழ்கின்றது.
அதேபோன்று, ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண பட்டத்தை பகிர்ந்து கொண்ட அணிகளாக இந்தியா மற்றும் இலங்கை அணிகள் உள்ளன.
சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் மூன்றாவது விக்கெட்டுக்காக உபுல் தரங்க மற்றும் குமார் சங்கக்கார ஆகியோருக்கிடையில் இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்ட 165 ஓட்டங்கள் இன்று வரை குறித்த தொடர்களில் பதிவு செய்யப்பட்ட ஆகக்கூடிய இணைப்பாட்டமாக உள்ளது.
இறுதியாக 2013ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் 294 என்ற ஓட்ட இலக்கை வெற்றிகரமாக நிறைவு செய்து இலங்கை அணி சாதனை படைத்தது. இதற்கு முன்னதாக 1998ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் தென்னாபிரிக்கா 282 ஓட்ட இலக்கை எட்டியிருந்ததே சாதனையாக இருந்தது. குறித்த போட்டியில் குமார் சங்கக்கார 134 ஓட்டங்களை விளாசியிருந்தமை நினைவுகூறத்தக்கது.
இம்முறைக்கான சம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடரில் முன்னிருந்ததை விட பல்வேறுபட்ட அதிரடித் துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களுடன் கடும் போட்டிக்கு மத்தியில், வலிமை மிக்க பல அணிகள் களமிறங்க உள்ளன. இந்நிலையில் எவ்வாறான சாதனைகள் முறியடிக்கப்படப் போகின்றன அல்லது யார் யார் புதிய சாதனைகளை படைக்க இருக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ள சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளின்போது ThePapare.com உடன் இணைந்திருங்கள்