அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாத்தில் இடம்பெற்றுள்ள துஷ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோரின் முக்கியத்துவம் தொடர்பில் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன கருத்து வெளியிட்டுள்ளார்.
பிரீமா ஸ்டெல்லாவின் புதிய விளம்பர தூதுவராக இணைந்துக்கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோர் தொடர்பில் குறிப்பிட்டார்.
>> பங்களாதேஷ் T20I அணிக்கு மீண்டும் புதிய தலைவர்
“லஹிரு குமார மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் அணியில் இணைந்திருப்பது, அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் எமக்கு அதிகம் உதவும். எனவே, இந்த விடயம் எமது பந்துவீச்சு பலமாக அமையும்.
ஆசியக்கிண்ணத்தின்போது எமது துடுப்பாட்டம் பலமாக இருந்ததை காட்டியிருந்தோம். அவுஸ்திரேலியாவில் வேகப்பந்துவீச்சாளர்கள் தங்களுடைய பலத்தை நிரூபிக்கவேண்டும்” என சாமிக்க கருாணரத்ன தெரிவித்தார்.
அதேநேரம் T20 உலகக்கிண்ணத்துக்கான சிறந்த மனத்திடத்துடன் வீரர்கள் அனைவரும் உள்ளதுடன், மேலும் சிறப்பாக செயற்பட்டு இலங்கை மக்களுக்காக உலகக்கிண்ணத்தில் வெற்றிகளை பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக இவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை உலகின் தலைசிறந்த உடற்தகுதியுடன் கூடிய வீரராக எதிர்காலத்தில் பிரகாசிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும், உடற்தகுதி அதிகரித்தால் நாட்டுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார்.
“உலகில் உள்ள சிறந்த உடற்தகுதி உள்ள வீரராக மாறவேண்டும் என்பதே என்னுடைய கனவு. எனது வேகம் மற்றும் உடற்தகுதி மட்டத்தை நான் காட்டியிருக்கிறேன். என்னால் என்ன செய்யமுடியும் என்பதை நான் அறிவேன்.
என்னுடைய திறமையில் 60 சதவீதம் வரையில் வெளிவந்துள்ளது. இன்னும் 40 வீதத்தை நான் கொடுக்கவேண்டும். எனவே, நான் நிற்பதற்கு அதிக தூரம் இருக்கிறது. நான் உடற்தகுதியுடன் இருந்தால் மாத்திரமே, என்னுடைய வயதுடன் இந்த விளையாட்டில் நீண்ட தூரம் பயணிக்கமுடியும். என்னுடைய உடலை பார்த்துக்கொண்டால், எனது நாட்டுக்கு நிறைய விடயங்களை செய்யமுடியும் என எதிர்பார்க்கிறேன்” என மேலும் சுட்டிக்காட்டினார்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<