அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர நீக்கப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிரான போட்டியின் போது துஷ்மந்த சமீரவுக்கு உபாதை ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவர் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
உபாதைகளால் தடுமாறும் இலங்கை அணி
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிரான போட்டியில் 3.5 ஓவர்களை வீசிய இவர் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இதன் பின்னர் தன்னுடைய கடைசிப்பந்தை வீசுவதற்கு தயாராகியபோது, துஷ்மந்த சமீர தனது கெண்டைக்கால் பகுதியில் உபாதை ஏற்பட்டதை அறிந்துக்கொண்டு, உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேறினார்.
குறிப்பிட்ட இந்த உபாதையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் துஷ்மந்த சமீரவின் விரைவில் குணமடையாது என்பதால், அவர் உலகக் கிண்ண குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளரான டில்ஷான் மதுசங்க உபாதை காரணமாக ஏற்கனவே வெளியேறியிருந்த நிலையில், தற்போது சமீரவும் வெளியேறியுள்ளார். இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் இருவரும் உபாதைக்குள்ளாகியுள்ள நிலையில், T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சுத்துறையின் பலம் குறைந்துள்ளது.
துஷ்மந்த சமீரவுக்கு உபாதை ஏற்பட்டுள்ள அதேநேரம், தனுஷ்க குணதிலக்க மற்றும் பிரமோத் மதுசான் ஆகியோருக்கும் தொடை தசைப்பிடிப்பு உபாதை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறாயினும், இந்த உபாதைகளின் தீவிரம் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இலங்கை அணி தங்களுடைய முதல் சுற்றில் ஒரு வெற்றியுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நெதர்லாந்துக்கு எதிரான அடுத்தப் போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே இலங்கை அணியால் சுபர் 12 சுற்றுக்கு தகுதிபெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<