இலங்கை மகளிர் அணியின் தலைவி சமரி அதபத்து அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் பிக் பேஷ் லீக்கில் சிட்னி தண்டர் அணிக்காக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சமரி அதபத்து கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பேஷ் லீக்கில் மாற்று வீராங்கனையாக சிட்னி தண்டர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
>> மழையினால் பாதிக்கப்பட்ட பயிற்சி மோதலின் இரண்டாம் நாள் ஆட்டம்
மாற்று வீராங்கனையாக களமிறங்கிய இவர் கடந்த ஆண்டு தொடரில் தொடர் ஆட்ட நாயகியாக பெயரிடப்பட்டிருந்தார். துடுப்பாட்டத்தை பொருத்தவரை தொடரின் இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களை பெற்ற வீராங்கனையாக மாறினார்.
இவர் ஐந்து அரைச்சதங்கள் அடங்கலாக 42.58 என்ற சராசரியில் 511 ஓட்டங்களை விளாசினார். அதுமாத்திரமின்றி பந்துவீச்சில் 6.79 என்ற ஓட்டக்கட்டுப்பாட்டுடன் 9 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
சமரி அதபத்து நான்கு ஆட்ட நாயகி விருதினை வென்றிருந்ததுடன், கடந்த ஆண்டு பிக் பேஷ் லீக்கின் சிறந்த அணியிலும் இடம்பெற்றிருந்தார். அதுமாத்திரமின்றி சிட்னி தண்டர் அணியில் சிறந்து பிரகாசிக்கும் வீராங்கனைக்கான அலெக்ஸ் பிளெக்வெல் விருதினையும் இவர் வென்றிருந்தார்.
மகளிர் பிக் பேஷ் லீக்கின் புதிய விதிமுறையின் படி வீராங்கனைகள் ஒப்பந்தத்தை தவிர்த்து, ஒவ்வொரு அணிகளும் தலா ஒவ்வொரு வீராங்கனையை, ஒன்றுக்கும் மேற்பட்ட வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்ய முடியும். குறிப்பிட்ட இந்த இடத்துக்காக சமரி அதபத்து சிட்னி தண்டர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<