ஐசிசி வெளியிட்டுள்ள மகளிருக்கான புதிய T20I துடுப்பாட்ட தரவரிசையில் இலங்கை அணியின் தலைவி சமரி அதபத்து முன்னேற்றமடைந்துள்ளார்.
தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் மகளிருக்கான T20 உலகக்கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அபார அரைச்சதம் ஒன்றை சமரி அதபத்து பதிவுசெய்திருந்ததுடன், போட்டியில் தென்னாபிரிக்க அணி அதிர்ச்சித்தோல்வியை சந்தித்திருந்தது.
>> தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கான மே.தீவுகள் குழாம் அறிவிப்பு
குறித்த இந்தப்போட்டியில் சமரி அதபத்து 68 ஓட்டங்களை குவித்திருந்த நிலையில், ஐசிசி துடுப்பாட்ட தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 9வது இடத்தை பிடித்துள்ளார்.
அதேநேரம் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையாக ஜொலித்துவரும் ஹர்ஷிதா சமரவிக்ரம 9 இடங்கள் முன்னேறி துடுப்பாட்ட வரிசையில் 43வது இடத்தை பிடித்துள்ளார். ஹர்ஷிதா மாதவி பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதிசெய்திருந்தார்.
மேற்குறித்த இரண்டு வீராங்கனைகளும் துடுப்பாட்ட வரிசையில் முன்னேற்றம் கண்டிருந்ததுடன், பந்துவீச்சில் முன்னாள் அணித்தலைவி இனோகா ரணவீர 11 இடங்கள் முன்னேறி 10வது இடத்தை பிடித்துக்கொண்டுள்ளார். இவர் 2 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
ஐசிசி வெளியிட்டுள்ள புதிய தரவரிசையின்படி துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலியாவின் டஹிலா மெக்ராத் முதலிடத்தையும், பந்துவீச்சில் இங்கிலாந்தின் சோபியா எஸ்கலெஸ்டோன் மற்றும் சகலதுறை தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் அஸ்லிக் கார்ட்னர் முதலிடத்தையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<