இலங்கை மகளிர் அணியின் தலைவி சமரி அதபத்து, ஐசிசியின் மகளிருக்கான T20I துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.
மலேசியாவில் நடைபெற்றுவந்த பொதுநலவாய போட்டிகளுக்கான தகுதிச்சுற்றில் மிகச்சிறந்த துடுப்பாட்ட பிரதியை பதிவுசெய்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றிருந்த சமரி அதபத்து, 6 இடங்கள் முன்னேறி, T20I துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான வரிசையில் 8வது இடத்தை பிடித்துள்ளார்.
பொதுநலவாய விளையாட்டு விழாவிற்கு தகுதி பெற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி
சமரி அதபத்து பொதுநலவாய போட்டிகளுக்கான தகுதிச்சுற்றில் 55.25 என்ற ஓட்ட சராசரியுடனும், 185.71 என்ற ஓட்டவேகத்துடனும் 221 ஓட்டங்களை குவித்திருந்த நிலையில், தரவரிசையில் முன்னேற்றத்தை கண்டுள்ளார்.
துடுப்பாட்ட தரவரிசையில் மாத்திரமின்றி, பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 48 ஓட்டங்கள் மற்றும் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில், சகலதுறை வீராங்கனைகளுக்கான பட்டியலில் ஒரு இடம் முன்னேறி 7வது இடத்தையும் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
மகளிருக்கான T20I துடுப்பாட்ட வரிசையில் இந்திய அணி வீராங்கனை செபாலி வர்மா ஒரு இடம் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளதுடன், அவுஸ்திரேலியாவின் பெத் மூனி இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார். இந்திய அணியின் மற்றுமொரு வீராங்கனையான ஸ்மிரித்தி மந்தனா ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 4வது இடத்தை பிடித்துள்ளதுடன், அவுஸ்திரேலிய அணி வீராங்கனை மெக் லென்னிங் 3வது இடத்தை பிடித்துள்ளார்.
T20I சகலதுறை வீராங்கனைகளுக்கான பட்டியலில், நியூசிலாந்தின் ஷோபி டிவைன் முதலிடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளதுடன், இந்தியாவின் தீப்தி ஷர்மா ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். பந்துவீச்சு தரவரிசையை பொருத்தவரை, முதலிடத்தை இங்கிலாந்தின் ஷோபி எக்ஸ்லெஸ்டோன் தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<