இங்கிலாந்து சுப்பர் லீக் தொடரில் விளையாடவுள்ள சமரி அதபத்து

234

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அதபத்து, இங்கிலாந்தில் இவ்வருடம் நடைபெறவுள்ள மகளிருக்கான சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் லாஹ்பொராக் லைட்னிங் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

லாஹ்பொராக் லைட்னிங் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நியூசிலாந்து அணியின் சகலதுறை வீராங்கனை ஷோபி டிவைன் உபாதை காரணமாக தொடரிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக சகலதுறை வீராங்கனையான சமரி அதபத்து இணைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் மகளிர் T20 யில் சமரி அதபத்து

இந்தியாவில் மே 6ம் திகதி தொடக்கம் மே ……

ஷோபி டிவைன் கடந்த பருவகாலத்தில் லாஹ்பொராக் லைட்னிங் அணிக்காக விளையாடியதுடன், அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்திருந்தார். அவர், 269 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்ததுடன், 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். எனினும், துரதிஷ்டவசமாக லாஹ்பொராக் லைட்னிங் அணி, அரையிறுதியில் சர்ரே ஸ்டார்ஸ் அணியிடம் தோல்வியடைந்திருந்தது.

இந்தநிலையில், ஷோபி டிவைனின் இழப்பு குறித்து லாஹ்பொராக் அணியின் பயிற்றுவிப்பாளர் ரொப் டெய்லர் குறிப்பிடுகையில், “ஷோபி கடந்த பருவகாலத்தில் எமது அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தார். அவர் அணியில் இல்லாமை ஏமாற்றம் தான். எனினும், எதிர்காலத்தில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் அவரது ஆற்றலை காண்பதற்கு ஆவலாக இருக்கிறோம்” என்றார்.

இதேவேளை, ஷோபிக்கு பதிலாக லாஹ்பொராக் அணியில் இணைந்திருக்கும் சமரி அதபத்து மற்றுமொரு சிறந்த சகலதுறை வீராங்கனையாக பார்க்கப்படுகிறார். 2017ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 178 ஓட்டங்களை விளாசிய சமரி, அதிரடி துடுப்பாட்ட வீராங்கனை என்பதை வெளிக்காட்டியிருந்தார். அதுமாத்திரமின்றி கடந்த 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் சுப்பர் லீக் தொடரில் யோர்க்ஷையர் டயமெண்ட் அணிக்காகவும் விளையாடியிருந்தார். 

அதன்படி அனுபவம், துடுப்பாட்டம் மற்றும் சுழல் பந்துவீச்சு என்பவற்றை கருத்திற்கொண்டு, லாஹ்பொராக் அணி சமரியை தங்களது அணியில் இணைத்துள்ளது. சமரியின் இணைப்பு குறித்தும் ரொப் டெய்லர் குறிப்பிட்டுகையில். “சமரி போன்ற வேகமாக ஓட்டங்களை குவிக்கக்கூடிய வீராங்கனையொருவர் அணிக்கு கிடைத்துள்மை எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.  

எமது ஆரம்ப துடுப்பாட்டத்தை அவர் பலப்படுத்துவார் என எதிர்பார்க்கிறோம். அதுமாத்திரமின்றி கடந்த பருவகாலங்களில் சுப்பர் லீக்கில் விளையாடியுள்ள அவர், எமது அணிக்கு எதிராகவும் சிறப்பாக செயற்பட்டுள்ளார். அவர் எமது அணியில் இணைந்துள்ளமை மகிழ்ச்சியான விடயமாகும்” என்றார். 

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிருக்கான சுப்பர் லீக் T20 தொடர் இவ்வருட இறுதியில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<