இந்தியன் பிரீமியர் லீக் T20 தொடரின் (IPL) ஓர் அங்கமாக நடைபெறுகின்ற மகளிருக்கான T20 சேலஞ் தொடரில் (Women’s T20 Challenge 2022) பங்குபற்றும் வாய்ப்பை இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியும், நட்சத்திர வீராங்கனையுமான சமரி அத்தபத்து தவறவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிக்கெதிராக அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள T20i மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட இருப்பதன் காரணமாகவே அவருக்கு இந்த ஆண்டு மகளிருக்கான T20 சேலஞ் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் ஆடவருக்கான இந்தியன் பிரீமியர் லீக் நடத்தப்படுவது போல பெண்களுக்காக ‘மகளிர் T20 சேலஞ்’ கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, இந்த ஆண்டுக்கான மகளிருக்கான T20 சேலஞ் தொடர் மே 23ஆம் திகதி முதல் மே 28ஆம் திகதி வரை புனேயில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
கடந்த முறை போல இந்த தொடருக்காக சுபர் நோவாஸ், டிரைல்பிளேசர்ஸ் மற்றும் வெலாசிட்டி என 3 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சுபர் நோவாஸ் அணியின் தலைவியாக ஹர்மன்ப்ரீத் கவுர், டிரைல்பிளேசர்ஸ் அணியின் தலைவியாக ஸ்மிரிதி மந்தனா தொடர்கின்றனர். அதேபோல, மிதாலி ராஜுக்குப் பதிலாக வெலாசிட்டி அணியின் புதிய தலைவியாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
- குட்டி மாலிங்கவைப் புகழும் MS டோனி
- IPL தொடரிலிருந்து விலகி நாடு திரும்பும் வில்லியம்ஸன்
- IPL தொடரிலிருந்து விலகினார் ரஹானே
இதனிடையே, இம்முறை மகளிர் T20 சேலஞ் தொடரில் பங்கேற்கும் மூன்று அணிகளுக்கும் 16 பேர் கொண்ட அணி விபரத்தையும் பிசிசிஐ கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டது.
அத்துடன், இந்த ஆண்டு மகளிருக்கான T20 சேலஞ் தொடரில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 12 வெளிநாட்டு வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர். அதன்படி, குறித்த 12 வீராங்கனைகளும் ஒரு அணிக்கு 4 பேர் வீதம் 3 அணிகளிலும் இடம்பெறும் வகையில் பெயரிடப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இம்முறை மகளிர் T20 சேலஞ் தொடரில் இலங்கையைச் சேர்ந்த எந்தவொரு வீராங்கனையும் இடம்பெறவில்லை. கடந்த காலங்களில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான சுபர் நோவாஸ் அணியில் இடம்பிடித்து அதிரடியாக விளையாடி வந்த சமரி அத்தபத்துவுக்கு துரதிஷ்டவசமாக இம்முறை மகளிர் T20 சேலஞ் தொடரில் இடம்பெற முடியவில்லை.
எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தான் மகளிர் அணிக்கெதிரான T20i மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை மகளிர் அணியை சமரி அத்தபத்து வழிநடத்தவுள்ளார். இதன்காரணமாக அவருக்கு இம்முறை மகளிர் T20 சேலஞ் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்பத்தி 89 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடி 1867 ஓட்டங்களைக் குவித்துள்ள சமரி அத்தபத்து, கடந்த சில தினங்களுக்கு முன் துபாயில் நிறைவுக்குவந்த பெயார்ப்ரேக் அழைப்பு T20 கிரிக்கெட் தொடரில் இரண்டாவது இடத்தைப் பிடித்த பெல்கன்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.
குறித்த தொடரில் 7 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர், மொத்தமாக 313 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்களைக் குவித்த வீராங்கனையாக இடம்பிடித்தார். அதேபோல பெயார்ப்ரேக் சுற்றுப் போட்டியில் சதம் குவித்த முதலாவது வீராங்கனை என்ற சாதனையையும் அவர் நிலைநாட்டினார்.
ஒரு சதம், ஒரு அரைச் சதத்துடன் 32.16 என்ற துடுப்பாட்ட சராசரியைக் கொண்டிருந்த சமரி அத்தபத்துவின் ஓட்ட வேகம் 139.11 ஆகும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<