இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்ட நட்சத்திரமான சாமரி அத்தபத்து அவுஸ்த்திரேலியாவின் உள்ளூர் T-20 தொடரான மகளிர் பிக் பாஷ் லீக் இல் (Women’s Big Bash League – WBBL) மெல்பெர்ன் ரெனெகெட்ஸ் (Melbourne Renegades) அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.
இதற்கு முன்னதாக சாமரி அத்தபத்து இங்கிலாந்தின் உள்ளூர் T-20 தொடரில் (Kia Super League) விளையாட ஒப்பந்தமாகிய முதல் இலங்கை மங்கையாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட அத்தொடரில் யோர்க்ஷைர் டைமன்ட்ஸ் (Yorkshire Diamonds) அணிக்காக விளையாடியிருந்த இவர் லோபோரோஹ் லைட்னிங் (Loughborough Lighting) அணிக்கெதிராக அதிரடியாக ஆடி தான் பெற்ற 66 ஓட்டங்கள் மூலம் தன்னுடைய தரப்பினை 17 ஓட்டங்களால் வெற்றி பெறச் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்ட முதுகெலும்பாக காணப்படும் சாமரி அண்மையில் நடைபெற்று முடிந்த மகளிர் உலக கிண்ணத்தில் அத்தொடரின் நடப்புச் சம்பியன்களான அவுஸ்த்திரேலியாவுக்கு எதிராக 178 ஓட்டங்களை விளாசி அனைவராலும் பேசப்பட்டிருந்திருந்தார். சாமரியின் இந்த சிறப்பாட்டாமே மெல்பெர்ன் நகரினை மையமாகக் கொண்ட ரெனெகெட்ஸ் அணி இவரை ஒப்பந்தம் செய்ய காரணம் எனக்கூறப்படுகின்றது.
மகளிருக்கான சர்வதேச T-20 தொடரொன்றில் ஒப்பந்தமாகிய இலங்கை வீராங்கணையாக சாமரி அத்தபத்து மாத்திரமே காணப்படுகின்றார்.
அவுஸ்த்திரேலியாவின் இந்த மகளிர் பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடர் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த ஒரு தொடராக காணப்படுகின்றது. எட்டு அணிகள் பங்குபெறும் இத்தொடர் ஆண்களுக்கான பிக் பாஷ் லீக் (BBL) தொடரினை ஒத்ததாக நடைபெறுகின்றது.