இந்தியாவில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான செலஞ்சர் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய ரெட் அணியை வீழ்த்தி இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இலங்கை இளையோர் அணிக்காக அணியின் தலைவர் அயன சிறிவர்தன, ஹரீன் புத்தில ஆகியோர் பந்துவீச்சிலும் சன்தூஷ் குணதிலக்க துடுப்பாட்டத்திலும் சோபிக்க கடைசி ஓவர்கள் வரை நீடித்த பரபரப்பாக போட்டியில் இலங்கை அணியால் 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற முடிந்தது.
இந்தியாவில் கன்னித் தொடரை தோல்வியுடன் ஆரம்பித்த இலங்கை இளம் வீரர்கள்
தமது நாட்டின் கனிஷ்ட வீரர்களுக்காக இந்திய கிரிக்கெட் சபை நடாத்தும் இந்த ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் முறை இலங்கை கனிஷ்ட அணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் இலங்கை கிரிக்கெட் சபையின் இளம் அணி தனது முதல் போட்டியில் இந்திய கிரீன் அணியிடம் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் மும்பையில் இன்று (28) நடைபெற்ற போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி இந்திய ரெட் அணியை எதிர்கொண்டது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இந்திய ரெட் அணிக்கு பிரித்வி ஷோவ் அதிரடியாக ஆடினார். ஆரம்ப வீரராக வந்த அவர் 44 பந்துகளில் 63 ஓட்டங்களை விளாசினார்.
எனினும் இந்திய ரெட் அணியின் மறுமுனை விக்கெட்டுகள் குறைந்த ஓட்டங்களுக்கு சரிந்தன. புனித அலோசியஸ் கல்லூரியின் சுழற்பந்து வீச்சாளர் ஹரீன் புத்தில மற்றும் இசிபதன கல்லூரி சுழற்பந்து வீச்சாளர் அயன சிறிவர்தன இருவரும் இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
இந்திய ரெட் அணிக்காக மத்திய வரிசையில் வந்த ரியான் பரக் (50) மற்றும் நாகர்கோட்டி (51) பெற்ற அரைச்சதங்கள் மூலம் அந்த அணியின் ஓட்டங்கள் 200ஐ தாண்டியது. இதன்படி இந்திய ரெட் அணி முக்கியமான நேரங்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் 43.6 ஓவர்களில் 226 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
ஹரீன் புத்தில தனது 10 ஓவர்களுக்கும் 30 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சகலதுறை வீரரான அயன சிறிவர்தன 8.3 ஓவர்களில் 34 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இலங்கை டெஸ்ட் குழாமில் இணையும் ஜெப்ரி வெண்டர்சே
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு…
இந்நிலையில் 227 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி 5 ஓட்டங்களிலேயே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. விஷ்வ சதுரங்க முகம்கொடுத்த முதல் பந்தில் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.
எனினும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தனஞ்ஜய லக்ஷான் மற்றும் சன்தூஷ் குணதிலக்க 70 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணிக்கு வலுச் சேர்த்தனர். காலி, ரச்மண்ட் கல்லூரியின் தனஞ்சய லக்ஷான் 38 ஓட்டங்களை பெற்ற நிலையில் ரன் அவுட் ஆனார்.
இதனைத் தொடர்ந்து மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக ஆடி ஓட்டங்களை குவிக்க இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பு நெருங்கியது. அபாரமாக துடுப்பெடுத்தாடிய புனித பேதுரு கல்லூரியின் வலது கை துடுப்பாட்ட வீரர் சன்தூஷ் குணதிலக்க 122 பந்துகளுக்கு முகம்கொடுத்து 6 பௌண்டரிகளுடன் 80 ஓட்டங்களை பெற்றார்.
இதன்போது அவர் 3 ஆவது விக்கெட்டுக்கு நிபுன் தனஞ்சயவுடன் இணைந்து 88 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார். நிதானமாக ஓட்டங்கள் சேர்த்த நிபுன் தனஞ்சய 75 பந்துகளில் 43 ஓட்டங்களை பெற்றார். இதில் அவர் 2 பௌண்டரிகளை மாத்திரமே அடித்தார்.
இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி 195 ஓட்டங்களை பெற்றிருந்தபோது அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்ததோடு இன்னும் இரண்டு ஓட்டங்களை பெறுவதற்குள் மேலும் ஒரு விக்கெட்டை இழந்து தடுமாறியது. இதனால் இலங்கை அணி 198 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
களத்தில் இருந்த நுவனிது பெர்னாண்டோ கடைசி நேரத்தில் வேகமாக ஓட்டங்களை பெற்று இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தார். 35 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் ஆட்டமிழக்காது 34 ஒட்டங்களை குவித்தார்.
முதலாவது T-10 தொடர் குறித்த முழுமையான பார்வை
உலகின் அனைத்து துறைகளிலும் நவீன…
இதன்மூலம் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி 48.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. இதனால் இலங்கை அணி 4 புள்ளிகளை பெற்றுக்கொண்டது.
செலஞ்சர் கிண்ண தொடருக்காக இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்திய கிரீன் அணியை இந்திய புளூ அணி 4 விக்கெட்டுகளால் வென்றது.
இந்தியா பிளூ, கரீன், ரெட் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிகள் மோதும் லீக் சுற்றில் இலங்கை அணி தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்திய புளூ ஆடிய இரண்டு போட்டிகளிலும் வென்று 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதோடு இந்திய கிரீன் அணி 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி தனது கடைசி லீக் போட்டியில் நாளை (30) இந்திய புளூ அணியை எதிர்கொள்கிறது. இலங்கை அணி வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்த ஆட்டத்தில் வெல்வது கட்டாயம் என்பதோடு இந்திய ரெட் அணி தனது கடைசி லீக் போட்டியில் இந்திய கிரீன் அணியை வீழ்த்த வேண்டும்.
போட்டியின் சுருக்கம்
இந்திய ரெட் – 226 (46.3) – பிரிதிவி ஷோவ் 63, நாகர்கோடி 51, ரியான் பரக் 50, ஹரீன் புத்தில 4/30, அயன சிறிவர்தன 34/4
இந்திய கிரிக்கெட் சபை பதினொருவர் அணி – 231/6 (48.4) – சன்தூஷ் குணதிலக்க 80, நிபுன் தனஞ்சய 43, தனஞ்சய லக்ஷான் 38, நுவனிது பெர்னாண்டோ 34*, நாகர்கோடி 2/44
முடிவு – இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி