டயலொக் ரக்பி லீக் 6ஆம் வாரத்தில் CH & FC அணியை 45-26 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்று தனது முதல் வெற்றியை பெற்றுக்கொண்டது பொலிஸ் அணி.
பொலிஸ் அணியின் வீரரான முஷீன் பளீல் காயம் காரணமாக போட்டியில் விளையாடவில்லை. மேலும் சந்தேஷ் ஜெயவிக்ரம விளையாடாமையால் அவரின் இடமான ப்ளை ஹாப் நிலையில் ராஜித சன்சோனி விளையாடினார்.
அதேவேளை CH & FC அணியில் விஸ்வ தினெத் போட்டியில் விளையாடவில்லை மற்றும் ரோகித ராஜபக்ஷ ப்ளை ஹாப் நிலையில் விளையாடினார். மேலும் நட்சத்திர வீரர் ஜனித் சந்திமால் போட்டியில் விளையாடவில்லை.
போட்டி ஆரம்பித்ததிலிருந்து ஆதிக்கம் செலுத்திய பொலிஸ் அணிக்கு முதல் புள்ளியைப் பெற 3 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது. உதார கயான் CH & FC அணியின் தடையைத் தாண்டி சென்று முதல் ட்ரை வைத்தார். ராஜித சன்சோனி உதையை தவறவிடவில்லை. (CH & FC 00 – பொலிஸ் 07)
போட்டியை தமது கைகளுக்குள் எடுத்த பொலிஸ் அணியானது தொடர்ந்து இரண்டாவது ட்ரையையும் வைத்து போட்டியில் மேலும் முன்னிலை பெற்றது. CH & FC அணியின் மோசமான உதையின் மூலம் பயனைப் பெற்றுக்கொண்ட மொகமட் அப்சல், CH & FC அணி வீரர்களைக் கடந்து ராஜித சன்சோனிக்கு பந்தைப் பரிமாற, ராஜித சன்சோனி ட்ரை வைத்து வெற்றிகரமாக உதையையும் பூர்த்தி செய்தார். (CH & FC 00 – பொலிஸ் 14)
CH & FC அணிக்கு வாய்ப்பொன்று கிடைத்த பொழுதும் அவ்வாய்ப்பை CH & FC அணியானது தவறவிட்டது. எனவே இதனை பயன்படுத்திக்கொண்ட பொலிஸ் அணியானது விங் நிலை வீரரான இரோஷன் சில்வாவின் மூலம் இன்னொரு ட்ரை வைத்தது. மறுபடியும் CH & FC அணியின் மோசமான உதையின் மூலம் பொலிஸ் அணியானது சில்வாவின் மூலம் மைதானத்தின் ஓரத்தில் 3ஆவது ட்ரையை வைத்தது. ராஜித சன்சோனி உதையை தவறவிட்டார். (CH & FC 00 – பொலிஸ் 19)
முதற் பாதி முடிவடைவதற்கு சிறிது நேரமே இருக்கும் வேளையில் இளம் வீரர் ரீசா ரபாய்தீன் பொலிஸ் அணி சார்பாக 4ஆவது ட்ரை வைத்தார். நிதானமாகவும், தொடர்ச்சியாகவும் CH & FC அணி மீது ஆதிக்கம் கொடுத்த பொலிஸ் அணியானது ரீசா மூலமாக கம்பத்தின் அடியில் ட்ரை வைத்தது. இலகுவான உதையை சன்சோனி தவறவிடவில்லை. (CH & FC 00 – பொலிஸ் 26)
முதற் பாதி – (CH & FC 00 – பொலிஸ் 26)
இரண்டாவது பாதியில் இரண்டு அணிகளும் கூட்டாக 7 ட்ரை வைத்தது.
பொலிஸ் அணியின் பலம் மிக்க இரண்டாம் வரிசை வீரர் சார்ள்ஸ் பிரவீன் CH & FC அணியின் தடையை உடைத்துச் சென்று கம்பத்தின் அடியில் ட்ரை வைத்து பொலிஸ் அணியின் முன்னிலையை 33 ஆக்கினார். சன்சோனி இலகுவான உதையை கம்பங்களின் நடுவே உதைத்தார். (CH & FC 00 – பொலிஸ் 33)
நீண்ட நேரத்திற்கு பின்பு CH & FC அணியானது புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள வழியைக் கண்டுபிடித்தது. 8ஆம் இலக்க நிலை வீரர் உதார மதுஷங்க CH & FC அணி சார்பாக முதல் ட்ரை வைத்தார். விஷ்வ தினெத் உதையை வெற்றிகரமாக உதைத்தார். (CH & FC 07 – பொலிஸ் 33)
பொலிஸ் அணியின் அச்சல பெரேரா மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட அதை சாதகமாக பயன்படுத்திய CH & FC அணியானது குறுகிய நேரத்தில் மேலும் ஒரு ட்ரை வைத்தது. ப்ராவோத் லஹிரு பந்தை சிறப்பாக எடுத்துச் சென்று ட்ரை கோட்டின் அருகே லக்ஷன் ஜெயபாலாவிற்கு பந்தை பரிமாறியதன் மூலம் ஜெயபால ட்ரை வைத்தார். தினெத் இவ் உதையையும் உதைத்து அசத்தினார். (CH & FC 14 – பொலிஸ் 33)
பொலிஸ் அணி சிறப்பாக ஆடி வந்த நிலையில் திடீரென அழுத்தம் கொடுத்த CH & FC அணியானது தொடர்ந்து 3 ட்ரை வைத்து பொலிஸ் அணிக்கு சவாலாக அமைந்தது. விராஜ் ஹேவகேவின் 30 மீட்டர் ஓட்டத்தின் பின்னர் பந்தைப் பெற்றுக்கொண்ட கசுன் ஸ்ரீநாத் CH & FC அணி சார்பாக 3ஆவது ட்ரை வைத்தார். தினெத் இவ் உதையையும் தவறவிடவில்லை. (CH & FC 21 – பொலிஸ் 33)
போட்டியின் இரண்டாம் பாதியில் தமது சிறப்பான ஆட்டத்தின் மூலம் விட்ட இடத்தைப் பிடித்த CH & FC அணியானது தொடர்ந்து சிறப்பாக செயற்பட்டு பொலிஸ் அணியை வெல்லும் என எதிர்பார்த்த பொழுதும், மீண்டு தமது அதிரடி விளையாட்டிற்கு திரும்பிய பொலிஸ் அணியானது ரீசா ரபாய்தீன் மற்றும் சுஜன் கொடிதுவக்கு மூலமாக 2 ட்ரை வைத்து CH & FC அணியின் கனவைக் கலைத்தது. (CH & FC 21- பொலிஸ் 45)
போட்டி முடிவடையும் தருணத்தில் CH & FC அணியானது பிரபாத் ஜயலத் மூலமாக ட்ரை வைத்த பொழுதும், அது போட்டியை வெற்றிகொள்ள போதுமானதாக இருக்கவில்லை .
முழு நேரம் – (CH & FC 26 – பொலிஸ் 45)
ThePapare.com போட்டியின் சிறந்த வீரர் – ரதீஷ செனவிரத்ன (பொலிஸ்)
பொலிஸ் அணியின் தலைவர் உதார சூரியபெரும நம்மிடம் கருத்து தெரிவித்த பொழுது “CH & FC அணியுடனான போட்டியின் பின்னர் எமது அணி நன்றாக ஒன்றிணைந்து இருக்கிறது. தவறுகளை குறைத்துக்கொண்டு இப்பருவகாலத்தில் எஞ்சியிருக்கும் போட்டிகளையும் சிறப்பாக விளையாட எதிர்பார்க்கிறோம்” எனக் குறிப்பிட்டார்.
புள்ளிகள் பெற்றோர்
CH & FC அணி
ட்ரை – உதார மதுஷங்க, லக்ஷன் ஜெயபால, கசுன் ஸ்ரீநாத், பிரபாத் ஜயலத்
கொன்வெர்சன் – விஷ்வா தினெத்(3)
பொலிஸ் அணி
ட்ரை – உதார கயான், ரீசா ரபாய்தீன்(2), ராஜித சன்சோனி, சார்ள்ஸ் பிரவீன், சுஜன் கொடிதுவக்கு, இரோஷன் சில்வா
கொன்வெர்சன் – ராஜித சன்சோனி(5)