நேற்று ஆரம்பமான டயலொக் ரக்பி லீக் 2 ஆம் சுற்றில் ஹெவலொக் அணியானது CH & FC அணியை பாரிய புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது.
முதல் சுற்று முடிவின்போது முதலாவது இடத்தில் உள்ள ஹெவலொக் அணியானது இப்போட்டியில் முன்னனி வீரர்கள் பலருக்கு ஓய்வு அளித்திருந்தது. சுதர்ஷன முததந்திரி, நிரோஷன் பெர்னாண்டோ ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நிலையில் ஷாரோ பெர்னாண்டோ இப்போட்டியில் விளையாட தகுதி இன்மையால் அணியில் சேர்க்கப்படாமை குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் CH & FC அணியின் பல வீரர்கள் காயம் காரணமாகவும் சுகயீனம் காரணமாகவும் போட்டியில் விளையாடாமை அவ் அணிக்கு பெரும் பலவீனமாக அமைந்தது
போட்டி ஆரம்பித்து 2ஆவது நிமிடத்திலேயே ஹெவலொக் அணியானது ட்ரை வைத்து அசத்தியது. சாமர தாபரே ட்ரை வைத்த அதே நேரம் துலாஜ் பெரேரா இலகுவான உதையை தவறவிட்டார். (CH & FC 00 – ஹெவலொக் 05)
துலாஜ் பெரேராவின் அருமையான பந்து பரிமாறலின் மூலம் பந்தை பெற்றுக்கொண்ட விங் நிலை வீரர் விமுக்தி ராகுல ஹெவலொக் அணியின் சார்பாக 2ஆவது ட்ரை வைத்தார். இம்முறை துலாஜ் பெரேரா உதையை தவறவிடவில்லை. ( CH & FC 00 – ஹெவலொக் 12)
தொடர்ந்து உதார அஞ்சன மற்றும் விஹங்க பவித்துரு ஹெவலொக் அணி சார்பாக ட்ரை வைக்க, ஹெவலொக் அணி 4 ட்ரைகளுக்கான போனஸ் புள்ளியினை இலகுவாகவும், தாமதமின்றியும் பெற்றுக்கொண்டது.
(CH & FC 00 – ஹெவலொக் 26)
முதற் பாதியில் மேலும் 3 ட்ரை வைத்து ஹெவலொக் அணியானது தனது வெற்றியை உறுதி செய்துகொண்டது. ஸ்க்ரம் ஹாப் நிலை வீரர் ராகுல் டி சில்வா முதல் ட்ரை வைத்தார். தொடர்ந்து கெவின் டிக்சன் மற்றும் துலாஜ் பெரேரா ட்ரை வைத்தனர். துலாஜ் பெரேரா அனைத்து உதையையும் இலகுவாக கம்பங்களின் நடுவே உதைந்தார். (CH & FC 00 – ஹெவலொக் 45)
முதற் பாதி : CH & FC 00 – ஹெவலொக் 45
இரண்டாம் பாதியிலும் CH & FC அணியினால் எந்த ஒரு வித்தியாசத்தையும் காட்டமுடியவில்லை. ஹெவலொக் அணியே இப்பாதியிலும் ஆதிக்கம் செலுத்தி மேலும் 5 ட்ரை வைத்து அசத்தியது.
போட்டியின் ஆட்ட நாயகன் துலாஜ் பெரேரா 2ஆம் பாதியில் முதல் ட்ரையை வைத்தார். சிறப்பாக விளையாடிய பெரேரா எதிரணி வீரர்களை தாண்டி சென்று ட்ரை வைத்து உதையையும் வெற்றிகரமாக உதைத்தார். (CH & FC 00 – ஹெவலொக் 52)
ப்ரொப் நிலை வீரர் துஷ்மந்த பிரியதர்ஷன சிறப்பாக 25 மீட்டர்கள் ஓடிச் சென்று ட்ரை வைத்தார். துலாஜ் பெரேரா உதையை தவறவிடவில்லை. (CH & FC 00 – ஹெவலொக் 59)
CH & FC அணி சார்பாக பெனால்டி உதையின் மூலம் 3 ஆறுதல் புள்ளிகளை விஷ்வ தினெத் பெற்றுக்கொடுத்தார். எனினும் ஜனிக் ஜயசூரிய ஹெவலொக் அணி சார்பாக தொடர்ந்து இரண்டு ட்ரை வைத்தார். (CH & FC 03 – ஹெவலொக் 73)
நிஷோன் பெரேரா போட்டியின் இறுதியும் ஹெவலொக்ஸ் அணியின் 12 ஆவதுமான ட்ரையை வைத்தார். துலாஜ் பெரேரா உதையை வெற்றிகரமாக உதைத்தார். அத்துடன் ஹெவலொக் அணியின் அட்டகாச திறமை நிறைவுகண்டது.
முழு நேரம் : CH & FC 03 – ஹெவலொக் 80
Thepapare.com போட்டியின் சிறந்த வீரர் – துலாஜ் பெரேரா (ஹெவலொக்)
புள்ளிகள் பெற்றோர்
CH & FC அணி
பெனால்டி – விஷ்வ தினெத் 1
ஹெவலொக் அணி
ட்ரை – சாமர தாபரே, ராகுல விமுக்தி , உதார அஞ்சன, விஹங்க பவித்துரு, ராகுல் டி சில்வா, கெவின் டிக்சன், துலாஜ் பெரேரா 2, துஷ்மந்த பிரியதர்ஷன, நிஷோன் பெரேரா, ஜனிக் ஜயசூரிய 2
கொன்வெர்சன் – துலாஜ் பெரேரா 10