நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான திசர பெரேரா பல்வேறு சாதனைகளை தன் வசப்படுத்தியுள்ளார்.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாடி கொலின் மன்ரோ (87), ரொஸ் டெய்லர் (90), ஜேம்ஸ் நீஷம் (64) ஆகியோரது அரைசதங்களினால் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ஓட்டங்களை குவித்தது.
மைதானத்தை சிக்ஸர்களால் அலங்கரித்த திசர பெரேரா ; போராட்டம் வீண்
இலங்கை – நியூசிலாந்து அணிகள்…
தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 112 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து வலுவான நிலையிலிருந்து 27ஆவது ஒவரில் 128 ஓட்டங்களுக்கு 7 என்று சரிந்தது. இத்தோடு இலங்கை அணியின் கதை முடிந்தது என்று எண்ணியபோது சிக்ஸர் அடிப்பதற்கே பிறந்தது போல நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை திணறடித்த திசர பெரேரா, தன் வாழ்நாளின் ருத்ரதாண்டவ ஒருநாள் இன்னிங்ஸை ஆடினார். 28ஆவது ஓவரில் ஆரம்பித்த திசரவின் அதிரடி ஆட்டமும் சிக்ஸர் மழையும் 47ஆவது ஓவரில்தான் முடிந்தது.
எப்படிப் போட்டாலும் அடிக்கிறான் என்று நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை மிரளும் அளவுக்கு வெளுத்து வாங்கிய திசர பெரேரா, 57 பந்துகளில் சதம் கடந்து, மொத்தம் 13 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 140 ஓட்டங்களை வெளுத்துக் கட்டினார். கூடவே நியூசிலாந்து களத்தடுப்பாளர்களுக்கு 6 தடவைகள் பிடியெடுப்பு கொடுத்தும் அவர்கள் அவற்றைத் தவறவிட்டனர்.
கடைசி விக்கெட்டாக ஹென்றியின் பந்து வீச்சில் போல்ட்டின் அதியற்புத பிடியெடுப்புக்கு திசர பெரேரா வெளியேற, இலங்கை அணி 46.2 ஓவர்களில் 298 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தொடரை இழந்தது. திசரவின் இந்த ருத்ரதாண்டவம் நியூசிலாந்துக்கு புயலடித்து ஓய்ந்தது போல இருந்திருக்கும் என்றால் மிகையாகாது.
ஆனால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதை இந்த கட்டத்தில் திசர பெரேரா உணர்ந்திருக்கலாம். ஏன், அவரைத் தவிர அணியில் விளையாடிய ஏனைய எந்தவொரு வீரரும் ஒரு சிக்ஸும் அடிக்கவில்லை என்பது மற்றுமொரு சுவாரஷ்யமாகும்.
அதேபோல, கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 5 சிக்ஸர்களை ஒரே ஓவரில் விளாசிய ஜெம்ஸ் நீஷம், 2ஆவது ஒருநாள் போட்டியிலும் 37 பந்துகளில் 5 பௌண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 64 ஓட்டங்களை விளாச, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திசர பெரேராவின் திகைக்கவைக்கும் அதிரடி ஆட்டம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. அவரது அபார சிக்ஸர் மழை மவுண்ட் மங்குனியை நனைத்திருந்தது என்றால் மிகையாகாது.
3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணிக்கு திசர பெரேராவின் அபாரமான அதிரடிக்கு அவருக்கு கிடைத்த ஆட்ட நாயகன் விருதுதான் ஒரே ஒரு ஆறுதலைக் கொடுத்திருந்தது. இதேநேரம், இந்த சதத்தின் மூலம் இலங்கை அணியின் ஒருநாள் துடுப்பாட்ட வீரராக ஒருசில சாதனைகளை திசர பெரேரா நிகழ்த்தியுள்ளார்.
இதுவரை 147 ஒருநாள் போட்டிளில் விளையாடியுள்ள 29 வயதுடைய திசர பெரேரா, 9 அரைச்சதங்களை மாத்திரம் குவித்திருந்த நிலையில், நியூசிலாந்துடனான போட்டியில் ஒருநாள் அரங்கில் 2000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை கடந்தார்.
அத்துடன், நியூசிலாந்துக்கு எதிராக 28 பந்துகளில் அரைச்சதமும், 57 பந்துகளில் அதிவேக சதமும் அடித்து, தனது கன்னி ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்தார். அத்துடன், இலங்கை சார்பாக ஒருநாள் அரங்கில் 3ஆவது அதிவேக சதத்தைப் பதிவுசெய்த திசர பெரேரா, 13 சிக்ஸர்களை அடித்து இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சனத் ஜயசூரியா, 1996ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த 11 சிக்ஸர்கள் என்ற சாதனையை 23 வருடங்களுக்குப் பிறகு முறியடித்து புதிய இலங்கை ஒருநாள் சாதனையும் படைத்தார்.
திசர பெரேராவை பாராட்டும் இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள்
நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் …
அதேபோல, நியூசிலாந்து அணிக்கெதிராக இலங்கை அணி வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்டங்கள் பட்டியலில் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவுடன் இணைந்து கொண்டார்.
அத்துடன், சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த நான்காவது வீரராகவும் அவர் இடம்பிடித்தார். இதற்குமுன் இந்தியாவின் ரோஹித் சர்மா, தென்னாபிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெயில் ஆகியோர் தலா 16 சிக்ஸர்கள் அடித்து முதல் இடத்தில் இருந்தனர்.
ரோஹித் சர்மா (இந்தியா) – 16 சிக்ஸர்கள், (2013 அவுஸ்திரேலியாவுக்கு எதிராக)
ஏபி டி வில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா) – 16 சிக்ஸர்கள், (2015 மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக)
கிறிஸ் கெயில் (மேற்கிந்திய தீவுகள்) – 16 சிக்ஸர்கள், (2015 ஜிம்பாப்வேக்கு எதிராக)
ஷேன் வொட்சன் (அவுஸ்திரேலியா) – 15 சிக்ஸர்கள், (2011 பங்களாதேஷுக்கு எதிராக)
கோரி அண்டர்சன் (நியூசிலாந்து) – 14 சிக்ஸர்கள், (2014 மேற்கிந்தியாவுக்கு எதிராக)
திசர பெரேரா (இலங்கை) – 13 சிக்ஸர்கள், ( 2019 நியூசிலாந்துக்கு எதிராக)
இதேவேளை, ஒருநாள் போட்டிகளில் 7ஆம் இலக்க வீரராகக் களமிறங்கி அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 3ஆவது இடத்தையும் திசர பெரேரா பெற்றுக் கொண்டார்.
லுக்கி ரொன்கி (நியூசிலாந்து) – 170 ஓட்டங்கள் (2015 இலங்கைக்கு எதிராக)
மார்கஸ் ஸ்டொய்னிஸ் (அவுஸ்திரேலியா) – 146 ஓட்டங்கள் (2017 நியூசிலாந்துக்கு எதிராக)
திசர பெரேரா (இலங்கை) – 140 ஓட்டங்கள் (2019 நியூசிலாந்துக்கு எதிராக)
மஹேந்திர சிங் டோனி (ஆசிய பதினொருவர்) – 139 ஓட்டங்கள் (2007 ஆபிரிக்க பதினொருவர் அணிக்கெதிராக)
ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி சாதனை படைத்த மலிந்த
இலங்கை டெஸ்ட்….
ஒருநாள் போட்டிகளில் ஓவர் ஒன்றுக்கு அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் திசர பெரேரா இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
ஹேர்ஷல் கிப்ஸ் (தென்னாபிரிக்கா) – 36 ஓட்டங்கள்
திசர பெரேரா (இலங்கை) – 35 ஓட்டங்கள்
ஏபி டிவில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா) – 34 ஓட்டங்கள்
ஜேம்ஸ் நீஷம் (நியூசிலாந்து) – 34 ஓட்டங்கள்
சஹீட் அப்ரிடி (பாகிஸ்தான்) – 32 ஓட்டங்கள்
ஜேம்ஸ் பிரேன்க்ளின் (நியூசிலாந்து) – 31 ஓட்டங்கள்
சனத் ஜயசூரிய (இலங்கை) – 30 ஓட்டங்கள்
ஒருநாள் போட்டிகளில் இலங்கை சார்பாக அதிவேகமாக சதமடித்த 3ஆவது வீரராக இடம்பிடித்த திசர பெரேரா, சர்வதேச அரங்கில் 18ஆவது அதிவேக சதம் பெற்ற வீரராகவும் இணைந்துகொண்டார்.
சனத் ஜயசூரிய – 48 பந்துகள்
சனத் ஜயசூரியா – 55 பந்துகள்
திசர பெரேரா – 57 பந்துகள்
சனத் ஜயசூரியா – 64 பந்துகள்
திலகரத்ன டில்ஷான் – 70 பந்துகள்
ஒருநாள் போட்டிகளில் அதிகளவு ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர்கள் பட்டியலில் 9ஆவது இடத்தையும் திசர பெரேரா பெற்றுக்கொண்டார். அவர் நியூசிலாந்து அணியுடனான போட்டியுடன் 12 தடவைகள் ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார்.
சனத் ஜயசூரிய – 48 விருதுகள்
குமார் சங்கக்கார – 31 விருதுகள்
அரவிந்த டி சில்வா – 30 விருதுகள்
திலகரத்ன டில்ஷான் – 25 விருதுகள்
அர்ஜுன ரணதுங்க – 24 விருதுகள்
மஹேல ஜயவர்தன – 22 விருதுகள்
மார்வன் அத்தபத்து – 20 விருதுகள்
முத்தையா முரளிதரன் – 13 விருதுகள்
திசர பெரேரா – 12 விருதுகள்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<