நேபாளத்தில் நடைபெற்று வரும் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளன (CAVA) மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணத்தில் சனிக்கிழமை (27) நடைபெற்ற போட்டியில் இலங்கை மகளிர் அணி 3-0 என கிரிகிஸ்தானை இலகுவாக வெற்றிகொண்டது.
ஐந்தாவது இடத்துக்கான இந்தப் போட்டியில் இலங்கை மகளிர் அணி, கிரிகிஸ்தான் மகளிர் அணியை எதிர்கொண்டு விளையாடியது.
- பங்களாதேஷை இலகுவாக வீழ்த்திய இலங்கை மகளிர் அணி
- மாலைத்தீவுகளை வீழ்த்திய இலங்கைக்கு முதல் வெற்றி
- விறுவிறுப்பான போட்டியில் தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி
இந்தப் போட்டியின் ஆரம்பம் முதல் மிகச்சிறப்பாக ஆடிய இலங்கை மகளிர் அணி இலகுவான வெற்றியை பதிவுசெய்திருந்தது. ஆட்டத்தின் முதல் செட்டில் 25-11 என்ற மோசமான தோல்வியை கிரிகிஸ்தான் அணிக்கு இலங்கை வழங்கியது.
பின்னர் ஆரம்பமான இரண்டாவது செட்டை பொருத்தவரை கிரிகிஸ்தான் அணி சற்று சவாலை கொடுத்திருந்தது. எனினும் இலங்கை அணி 25-20 என இரண்டாவது செட்டை கைப்பற்றியது. தொடர்ந்து ஆரம்பமான மூன்றாவது செட்டை 25-14 என இலங்கை வெற்றிக்கொள்ள 3-0 என போட்டியை கைப்பற்றியது.
இலங்கை அணி இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளன (CAVA) மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணத் தொடரை 5வது இடத்துடன் நிறைவுசெய்துள்ளது.
பங்களாதேஷ் எதிர் மாலைத்தீவுகள் (7-8வது இடத்துக்கான போட்டி)
பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான 7 மற்றும் 8வது இடத்தை தீர்மானிக்கும் போட்டியில் மாலைத்தீவுகள் அணி 3-1 என்ற செட்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
முதல் செட்டை 25-21 என பங்களாதேஷ் அணி கைப்பற்றியிருந்த போதும், அடுத்த மூன்று செட்களையும் 25-14, 25-23 மற்றும் 25-15 என மாலைத்தீவுகள் அணி கைப்பற்றி வெற்றிபெற்றது.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<