நேபாளத்தில் நடைபெற்று வரும் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளன (CAVA) மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணத்தில் புதன்கிழமை (24) நடைபெற்ற மாலைத்தீவுகள் அணிக்கு எதிரான தங்களுடைய கடைசி குழுநிலை போட்டியை இலங்கை மகளிர் அணி 3-0 என கைப்பற்றி தொடரில் முதல் வெற்றியை பதிவுசெய்தது.
முதல் இரண்டு போட்டிகளில் சிறந்த போட்டியை கொடுத்து தோல்வியடைந்திருந்த இலங்கை மகளிர் அணி, இன்றைய போட்டியில் மிகச்சிறப்பாக ஆடியிருந்தது.
>>விறுவிறுப்பான போட்டியில் தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி<<
ஆட்டத்தின் முதல் செட்டை 25-18 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிக்கொண்ட இலங்கை மகளிர் அணி, இரண்டாவது செட்டிலும் அபாரமாக ஆடி புள்ளிகளை பெற்றுக்கொண்டது. அதன்படி இரண்டாவது செட்டை 25-13 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவாக இலங்கை அணி வெற்றிக்கொண்டது.
அடுத்து நடைபெற்ற மூன்றாவது செட்டில் மாலைத்தீவுகள் அணி சற்று சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதிவரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த செட்டை இலங்கை அணி 26-24 புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று 3-0 என போட்டியை தமதாக்கியது.
எனவே இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி 2 புள்ளிகளுடன் குழு Bயில் மூன்றாவது இடத்தை பிடித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஏனைய போட்டி முடிவுகள்
கிரிகிஸ்தான் எதிர் பங்களாதேஷ் (குழு A)
பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான தங்களுடைய கடைசி குழு நிலை போட்டியில் விளையாடிய கிரிகிஸ்தான் அணி 3-0 என வெற்றியை பதிவுசெய்தது.
முதலிரண்டு போட்டிகளிலும் இந்தியா மற்றும் நேபாளம் அணிகளிடம் தோல்வியடைந்த கிரிகிஸ்தான் அணி 25-16, 25-11 மற்றும் 25-20 என்ற புள்ளிகள் கணக்கில் இலகு வெற்றியை பெற்றுக்கொண்டது.
கஸகஸ்தான் எதிர் உஸ்பெகிஸ்தான் (குழு B)
குழு Bயில் தங்களுடைய முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றிருந்த கஸகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய மூன்றாவது போட்டியில் கஸகஸ்தான் அணி 3-1 என்ற செட்கள் கணக்கில் வெற்றியீட்டியது.
போட்டியின் முதல் செட்டை உஸ்பெகிஸ்தான் அணி 26-24 என திரில் வெற்றி பெற்றிருந்த போதும், அடுத்த மூன்று செட்களையும் 25-16, 25-11 மற்றும் 25-18 என்ற புள்ளிகள் கணக்கில் கஸகஸ்தான் அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது.
>>WATCH – பாகிஸ்தானின் இலங்கை சுற்றுப்பயணத்தில் முக்கிய மாற்றம்?<<
இந்தியா எதிர் நேபாளம் (குழு A)
இந்தியா மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 3-1 என்ற செட்கள் கணக்கில் இந்திய அணி தங்களுடைய மூன்றாவது வெற்றியை பதிவுசெய்தது.
போட்டியின் முதல் இரண்டு செட்களையும் 25-12 மற்றும் 26-24 என கைப்பற்றிய இந்திய அணி மூன்றாவது செட்டில் 25-21 என தோல்வியை சந்தித்தது. எனினும் அடுத்த செட்டில் 25-21 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்ற இந்திய அணி மூன்றாவது வெற்றியுடன் குழுவில் முதலிடத்தை பிடித்துக்கொண்டது.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<