நேபாளத்தில் நடைபெற்று வரும் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளன (CAVA) மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற போட்டியில் இலங்கை மகளிர் அணி 3-1 என தோல்வியை சந்தித்துள்ளது.
முதல் போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணியிடம் 3-0 என தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி, இரண்டாவது போட்டியில் கஸகஸ்தான் அணியை (குழு B) எதிர்கொண்டது.
- இலங்கை தேசிய கரப்பந்து அணியில் மலையக வீராங்கனை திலக்ஷனா
- முதல் போட்டியில் இலங்கைக்கு தோல்வி; அபார வெற்றிபெற்ற இந்தியா!
போட்டியின் முதல் செட்டில் கஸகஸ்தான் அணி அபாரமாக விளையாடிய நிலையில், 25-16 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை அணி மோசமான தோல்வியை சந்தித்தது.
இரண்டாவது செட்டை பொருத்தவரை இரண்டு அணிகளும் அற்புதமாக ஆடியதுடன் எதிரணிக்கு இலங்கை அணி கடுமையான சவாலை கொடுத்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியானது செட் புள்ளியின் போது (24-24) சமனிலையடைந்தது. அதன் பின்னரும் விறுவிறுப்பாக ஆட்டம் செல்ல, செட் நிறைவில் 28-26 என்ற புள்ளிகள் கணக்கில் கஸகஸ்தான் அணி திரில் வெற்றியினை பதிவுசெய்தது.
முதல் இரண்டு செட்களிலும் தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி மூன்றாவது செட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆரம்பம் முதல் தங்களுடைய ஆதிக்கத்தை காட்டியதுடன், இந்த தொடரில் தங்களுடைய முதல் செட் வெற்றியை பதிவுசெய்தது. இந்த செட்டை 25-18 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை அணி இலகுவாக வெற்றிக்கொண்டமையினால் போட்டி 2-1 என்ற நிலைக்கு வந்தது.
பின்னர் ஆரம்பித்த மூன்றாவது செட் மேலும் விறுவிறுவிப்பாக நடைபெற்றது. குறிப்பாக, ஆரம்பத்தில் இலங்கை அணி தடுமாறிய போதும், தொடர்ந்து செட்டின் மத்திய பகுதியில் கஸகஸ்தான் அணியின் முன்னிலையை இலங்கை அணி குறைக்க ஆரம்பித்தது.
இலங்கை அணியின் மீள்வருகையுடன் போட்டி சூடுபிடித்திருந்ததுடன், செட் புள்ளிகளை தாண்டி போட்டி விறுவிறுப்பாகியது. எனினும் இறுதிக்கட்டத்தில் 27-29 புள்ளிகள் என்ற கணக்கில் இலங்கை மகளிர் அணி தோல்வியை சந்தித்தது. எனவே 3-1 என போட்டியை இழந்த இலங்கை மகளிர் அணி தங்களுடைய முதலிரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
இலங்கை அணி விளையாடிய இந்தப் போட்டியில் மலையக வீராங்கனை ஜெயராம் திலக்ஷான விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்ததுடன், இலங்கை அணி தங்களுடைய அடுத்த போட்டியில் மாலைத்தீவுகள் அணியை புதன்கிழமை (24) எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய போட்டிகளின் முடிவுகள்
இந்தியா எதிர் கிரிகிஸ்தான் (குழு A)
கிரிகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற தங்களுடைய இரண்டாவது போட்டியில் இந்திய மகளிர் அணி 3-0 என்ற செட் கணக்கில் இலகு வெற்றியை பெற்றுக்கொண்டது. போட்டியின் முதல் செட் சற்று போட்டித்தன்மையாக 25-17 என்ற புள்ளிகள் கணக்கில் நிறைவடைந்தாலும், அடுத்த இரண்டு செட்களையும் முறையே 25-08 மற்றும் 25-08 என இந்திய அணி வெற்றிக்கொண்டது.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<