இந்தியாவை வீழ்த்தி கரம் உலகக் கிண்ணத்தை முதல் தடவையாக வென்ற இலங்கை

485

தென் கொரியாவின் சென்சியோன் நகரில் இடம்பெற்ற, 5 ஆவது  கரம் உலகக் கிண்ணத்தின் ஆடவர் அணிகளுக்கான சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியிருக்கும் இலங்கை ஆடவர் கரம் அணி கரம் உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக சம்பியன்களாக முடிசூடியுள்ளது.

இதேநேரம் மகளிர் அணிகளுக்கான சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணியிடம் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த இலங்கை மகளிர் கரம் அணி, கரம் உலகக் கிண்ணத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கின்றது.

2016 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கரம் சம்பியன்ஷிப் தொடரின் பின்னர் நடைபெறும் முதலாவது சர்வதேச தொடராக, 2018 ஆம் ஆண்டுக்கான கரம் உலகக் கிண்ணம் அமைந்திருந்தது. அத்தோடு, தென் கொரியாவின் சென்சியோன் நகரில் இடம்பெற்ற  கரம் உலகக் கிண்ணம் உலக லெய்சர் விளையாட்டுப் போட்டிகளின் (World Leisure Games) ஒரு அங்கமாகவும் இருந்தது.

சொந்த மண்ணில் இந்தோனேஷியாவை தோற்கடித்த இலங்கை அணி

5 ஆவது கரம் உலகக் கிண்ணத்திற்காக இலங்கையை பிரதிநிதித்துவம் செய்து ஆண்கள், பெண்கள் உட்பட 8 பேர் தென் கொரியாவுக்கு பயணமாகியிருந்தனர்.

இதில் நால்வர் அடங்கிய இலங்கை ஆடவர் கரம் அணியை இரண்டு தடவைகள் ஸ்விஸ் லீக் தொடர் வென்ற, செய்லான் விளையாட்டுக் கழகத்தின் சமில் கூரே தலைமை தாங்கியிருந்ததோடு ஏனைய அணி அங்கத்தவர்களாக சஹீத் ஹில்மி, நிஷாந்த பெர்னாந்து மற்றும் உதேஷ் சந்திம பெரேரா ஆகியோர் இருந்தனர்.

மறுமுனையில், இலங்கை மகளிர் கரம் அணியை யாசிகா ரகுபத்தா தலைமை தாங்க ஏனைய அணி அங்கத்தவர்களாக ஜோசப் ரோஹித்தா, சலானி லக்மாலி லியனகே மற்றும் மதுக்கா டில்ஷான் ஆகியோர் அமைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற ஆடவருக்கான இறுதிப் போட்டியில், ஷாகிர் பாஸா நடப்புச் சம்பியனான இந்தியாவுக்கு சிறந்த ஆரம்பத்தை தந்த போதிலும், முன்னாள் கரம் உலக சம்பியனான நிஷாந்த பெர்னாந்து மற்றும் சமில் கூரே ஆகியோரின் அபாரத்தினால் இறுதிப் போட்டியில் இலங்கை வென்றது.

இதேவேளை, இலங்கை மகளிர் கரம் அணியை வீழ்த்திய இந்தியா, கரம் உலகக் கிண்ண சம்பியன் பட்டத்தினை ஐந்தாவது தடவையாக வென்ற அணியாக மாறியிருந்தது.

இந்திய மகளிர் கரம் அணியின் வெற்றிக்கு ராஷ்மி குமாரி, S. அபூர்வா மற்றும் காஜல் குமாரி ஆகியோர் பங்களிப்புச் செய்திருந்தனர்.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<