ஐக்கிய அமெரிக்காவில் அண்மையில் நிறைவுக்கு வந்த 6ஆவது உலகக் கிண்ண கெரம் போட்டியில் இலங்கை வீரர்கள் குழப் பிரிவில் ஆடவர் மற்றும் மகளிளுக்கான வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
அதேபோல, இம்முறை உலகக் கிண்ண கெரம் போட்டியில் இலங்கை அணி ஒட்டுமொத்தமாக 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியது.
20 நாடுகள் பங்குபற்றலுடன் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற இம்முறை உலகக் கிண்ண கெரம் போட்டியில் கடந்த முறை சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை ஆடவர் அணி, இந்தியாவிற்கு பலத்த போட்டியைக் கொடுத்து 2ஆவது இடத்தைப் பிடித்துக் கொண்டது.
மறுபுறத்தில் தொடர்ச்சியாக 5 தடவைகள் உலகக் கிண்ண கெரம் சம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு பலத்த போட்டியைக் கொடுத்த இலங்கை மகளிர் அணி 2ஆவது இடத்தைப் பிடித்தது.
இந்தப் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணிகள் மாலைதீவு ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கெரம் அணியின் அனுசரணையாளராக இலங்கை கிரிக்கெட் சபை
இம்முறை கெரம் உலகக் கிண்ணத்தில் பங்குகொண்ட இலங்கை ஆடவர் அணியில் சஹீட் ஹில்மி, நிஷான் பெர்னாண்டோ, அனாஸ் அஹமட் மற்றும் கவீன் நிம்னெத் ஆகியோரும், மகளிர் அணியில் ஜோசப் ரொஷிடா, தருஷி ஹிமஹன்சிகா, டஷ்மிலா காவிந்தி மற்றும் ஹிருஷி மல்ஷானி ஆகியோர் இடம்பெற்றனர்.
இதேவேளை, இம்முறை உலகக் கிண்ண கெரம் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிருக்கான இரட்டையர் பிரிவுகளில் இலங்கை அணி வெண்கலப் பதக்கங்களை வென்றன. அத்துடன், மூன்றாவது இடத்துக்கான இறுதிப்போட்டியில் அமெரிக்க ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இலங்கையிடம் தோல்வியைத் தழுவியிருந்தன.
இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இலங்கை அணியின் தலைவர் சஹீட் ஹில்மி மற்றும் அனாஸ் அஹமட் ஜோடியும், மகளிர் இரட்டையர் பிரிவில் தருஷி ஹிமஹன்சிகா மற்றும் ஹிருஷி மல்ஷானி ஜோடியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<