1996, மார்ச் 13: ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா- இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கவலைக்குரிய ஓர் இரவு – சில ரசிகர்கள் மைதானத்திற்குள் போத்தல்களை வீசியும் இருக்கைகளுக்கு தீ வைத்தும் போட்டிக்கு இடையூறு செய்தனர். அந்த ரசிகர் கூட்டம் அமைதி கொள்ளாத நிலையில் இலங்கை அணிக்கு வெற்றி அளிக்கப்பட்டது. அப்போது இந்திய அணி 35 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. போட்டியில் வெற்றி பெற 15.5 ஓவர்கள் எஞ்சி இருக்க மேலும் 132 ஓட்டங்களை பெறவேண்டி இருந்தது. இறுதியில் இலங்கை அணி உலகக் கிண்ணத்தை வென்றது.
2017, ஆகஸ்ட் 27: பல்லேகல – வெற்றிக்காக இந்திய அணி 8 ஓட்டங்கள் எடுக்க வேண்டி இருந்த நிலையில் புல்வெளிகளில் அமர்ந்திருந்த ரசிகர்கள் பிளாஸ்டிக் போத்தல்களை வீசி போட்டிக்கு 30 நிமிடங்களுக்கு மேல் இடையூறு செய்த நிகழ்வு இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் இருண்ட இரவுகளில் ஒன்றாகும்.
கலகம் அடக்கும் படைகளால் கூட்டம் கலைக்கப்பட்டு போட்டி மத்தியஸ்தர் அன்டி பைக்ரொப்டுக்கு, கூட்டத்தினரால் பிரச்சினை இல்லை என்று பாதுகாப்பு அதிகாரிகளால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பின்னரே போட்டி மீண்டும் அரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய அணி போட்டியை வென்று தொடரையும் வென்றது.
அன்றைய தினத்திலேயே எமது குட்டித் தீவு வெட்கத்தில் தலை குனிந்தது. அது எமது கிரிக்கெட் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததால் அல்ல, ரசிகர்கள் தாராள மனதோடு தோல்வியை ஏற்கவில்லை என்பதனாலாகும்.
பல்லேகலையில் நடந்த அருவருப்பான நிகழ்வுக்கு இலங்கையின் சில புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் தமது ட்விட்டர் பக்கத்தில் அதிருப்தியை வெளிக்காட்டி இருந்தனர்.
இலங்கை அணியின் நம்பிக்கை தரும் எதிர்காலம்
சிட்னியில் நடைபெற்ற 2015 உலகக் கிண்ண காலிறுதிப் போட்டியில் இலங்கை அணியின்…
ரஸல் ஆர்னல்ட்
ஒரு ஆழமான இருண்ட குழிக்குள் விழுந்தது போல் நான் உணர்கிறேன்… மிகக் கவலையானது… சங்கடப்படுகிறேன்!! நான் கூறியதில் தவறிருந்ததாக கருதினால் மன்னிக்கவும்!
பர்வீஸ் மஹ்ரூப்
கூட்டத்தின் நடத்தை சங்கடமாகவும் கவலையாகவும் உள்ளது! அணியினர் எதிர்பார்த்தபடி விளையாடவில்லை என்பது உண்மை தான் ஆனால் இந்த நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது.
பாசில் மரிஜா
ரசிகர்கள் பற்றி ஏமாற்றமாக உள்ளது. விளையாட்டில், அணிகள் சிறந்த மற்றும் மோசமான காலங்களை கொண்டிருக்கும், நாம் எமது அணிக்கு ஆதரவு அளித்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
உலகெங்கும் உள்ள ரசிகர்கள் தமது அணியினர் சிறப்பாக ஆடும்போது கொண்டாடும் அதேவேளை குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் நன்றாக ஆடாத போது முரட்டுத்தனமாக மாறுகின்றனரா? என்று கேட்டால் உறுதியாக இல்லை என்றே குறிப்பிட வேண்டும். விளையாட்டு என்றால் வெற்றியின் போது கொண்டாடுவது போல் வீரர்கள், ரசிகர்கள், முகாமையாளர்கள் உட்பட அனைவரும் நிச்சயம் தோல்வியை ஏற்கவும் வேண்டும்.
இலங்கை அணி இந்த ஆண்டில் பங்களாதேஷிடமும், தரவரிசையில் கடைசி இடத்தில் இருக்கும் ஜிம்பாப்வேயிடமும் இப்போது சொந்த மண்ணில் முன்னணி அணியான இந்தியாவிடமும் தோற்று ஒரு இருண்ட யுகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. இலங்கை அணி எந்த ஒரு போட்டியிலும் திறமையை வெளிக்காட்ட தவறிவரும் நிலையில் இந்த அனைத்து தோல்விகளையும் தனது கண் முன்னே பார்ப்பது இலங்கை ரசிகர்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாக தெரிகிறது. தாம் அதிகம் விரும்பும் ஆட்டத்தில் சந்திக்கும் தோல்விகளால் அவர்கள் மனமுடைந்துள்ளனர்.
சொந்த அணி இன்னும் எந்த ஒரு போட்டியிலும் வெல்லாத நிலையில் தவறாக நடந்துகொண்ட ரசிகர்கள் தம்புள்ளை, பல்லேகலையில் முறையே மைதானத்திற்கு வெளியில் கலகத்தில் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு உள்ளே போத்தல்களை எறிந்தனர். தான் விரும்பும் விளையாட்டில் பெருமைக்குரிய தேசம் கடும் நெருக்கடியான காலத்தை எதிர்கொள்ளும்போது இவ்வாறான துரதிஷ்டவசமான நிகழ்வுகளும், தேசத்தினரின் கோபமும் புரிந்துகொள்ள முடியுமானது.
எனினும் கடினமான நேரங்களில் தமது விளையாட்டு வீரர்களை ஏற்றுக்கொள்வதில் இலங்கை எப்போதும் பெருமை கொள்ளும் தேசமாகும். அவ்வாறான பல நிகழ்வுகளையும் கடந்த காலங்களில் நினைவுகூர முடியும். இலங்கை அணி 2011 உலகக் கிண்ணத்தில் இந்தியாவிடம் தோற்ற பின்னர் ரசிகர்கள் ஒற்றுமையை வெளிக்காட்டியதை மறக்கமாட்டோம். அப்போது ரசிகர்கள் வீதிகளில் வரிசையாக நின்று வீழ்ந்த அணியினருக்கு பின்னால் நின்று, ”தோல்வியை பொருட்படுத்த தேவையில்லை” என்ற சுலோகங்களை காட்டினார்கள்.
சரியாக ஓர் ஆண்டுக்கு முன்னர் தம்புள்ளையில் வைத்து டீ.எம். டில்ஷான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற போது இதே ரசிகர்கள் உற்சாகமூட்டி விடை கொடுத்ததை மறந்துவிடக்கூடாது. அதேபோன்று கடந்த ஆண்டு பல்லேகலையில் குசல் மெண்டிஸின் அபார ஆட்டத்தால் முதல் டெஸ்டில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தியபோதும் கூடி இருந்த ரசிகர்கள் ஆரவாரம் காட்டியது கூட மறக்கமுடியாதது.
இலங்கை ரசிகர்கள் போட்டிகளின் போது தமக்கே உரித்தான பைலா (Baila) இசை மற்றும் பபரே (Papare) வாத்தியங்கள் கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவது மேலும் உற்சாகத்தை தூண்டுவதாக இருக்கும். இலங்கை அணி வெளிநாட்டு மண்ணுக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது சிறிய ஒரு ரசிகர் கூட்டமாக அரங்கில் இருந்தபோதும் தமது உற்சாக கொண்டாட்டங்கள் மற்றும் இடைவிடாத பாடல்கள், நடனங்களால் பெரிய கூட்டமாக தெரிவார்கள்.
எமது அணியினர் மீண்டும் போட்டிகளில் வெற்றி பெறவும், மீண்டும் கிண்ணங்களை சுவீகரிக்கவும், எதிரணியை மீண்டும் பயத்தில் ஆழ்த்தவும் ஒரு தேசமாக நாம் எமது ஆதரவை வழங்க வேண்டும். மிக முக்கியமாக அணியினர் ஒரு கடினமான நேரத்தை சந்தித்திருக்கும் வேளையில் எமது அன்பையும் ஆசிர்வாதத்தையும் அவர்களுக்கு காட்ட வேண்டும். தற்போது வீரர்கள் நம்பிக்கை குறைந்து, எதிர்பார்த்த அளவு தமது திறமையை வெளிக்காட்டாதது ரகசியமான ஒன்றல்ல. ஆனால் இவ்வாறான நிகழ்வுகள் அவர்களை மேலும் பலவீனப்படுத்துவதாகவே இருக்கும்.
இந்திய ரசிகர்கள் தொலைக்காட்சி பெட்டிகளை உடைத்தும், வீரர்களின் புகைப்படங்களை எரித்தும், வீரர்களை திட்டியும், அபத்தமான குற்றச்சாட்டுகளை சுமத்தியும், அவர்களின் வீடுகளை தீக்கிரையாக்க முயற்சித்தும் வன்முறையில் ஈடுபடுவதை நாம் பார்த்திருக்கிறோம். நாம் அவர்களின் அண்டையவர்கள் என்ற காரணத்திற்காக அவ்வாறான நடத்தைகளை பின்பற்றக்கூடாது. நாம் வெறுப்பை அன்றி எப்போதும் அன்பை பரப்ப வேண்டும். எமது உறுதி அணியைப் பலப்படுத்தும். நாம் அன்பு மற்றும் நம்பிக்கையை வெளிக்காட்டும் சுலோக அட்டைகளை சுமக்க வேண்டும்.
நிலைமையை கேலி செய்யும் எதிர்மறையான மற்றும் மோசமான பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதை நிறுத்த வேண்டும். அணியின் மோசமான ஆட்டம் பற்றி நீங்கள் சமூக ஊடகத்தில் கருத்து வெளியிடும்போதும், பகிரும்போதும், ட்விட் செய்யும்போதும் அந்த பதிவுகள், கருத்துக்கள், ட்விட்டுகள் மற்றும் படங்கள் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்துவதோடு பொறுமை இழந்து (பல்லேகலையில் இடம்பெற்றது போல்) அவமானகரமான செயலில் ஈடுபடத் தூண்டும். இவை அனைத்தும் அணியின் உற்சாகத்தை அதிகரிக்க உதவாது, பதிலாக உலகத்திற்கு முன் எம்மை கேவலப்படுத்தவே வழி செய்யும்.
தென்னாபிரிக்க T-20 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள்
தென்னாபிரிக்காவில் முதற்தடவையாக நடைபெறவுள்ள குளோபல் டி20 லீக்கில்…
துணைக் கண்டத்தின் கிரிக்கெட் தேசமாக இருப்பதையிட்டு நாம் பெருமை அடைகிறோம். இது எமக்கு வெறும் விளையாட்டு மாத்திரமல்ல மதம், வாழ்க்கை முறை. ரசிகர்களாக நாம் எமது மிகப்பெரிய சொத்தான இலங்கை கிரிக்கெட்டை பாதுகாக்க வேண்டும். எந்த ஒரு விடயத்தையும் நெருக்கடியான நேரத்தில் கைவிடுவது நல்ல பண்பாக இருக்காது.
இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார அண்மையில் ThePapare.com இற்கு அளித்த பேட்டியில், இலங்கை ‘குழப்பமடையத் தேவையில்லை’ என்று குறிப்பிட்டது தற்போதைய நிலையை கச்சிதமாக விளக்குவதாக உள்ளது.
இந்திய அணி ஏற்கனவே ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது. என்றாலும் 2019 உலகக் கிண்ண போட்டிக்கு நேரடி தகுதி பெறுவதற்கு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற வேண்டியுள்ளது. எனவே இன்னும் அனைத்தையும் இழந்துவிடவில்லை. திரளாக வந்து எமது சிங்கங்களுக்கு தொடர்ந்து ஆதரவை வழங்க வேண்டும்.
இந்தியாவுடனான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு பின்னர் கருத்து வெளியிட்ட அணித் தலைவராக செயற்படும் சாமர கபுகெதர கூறியதாவது,
“இது கட்டாயம் வெல்ல வேண்டிய நிலை என்பதில் சந்தேகம் இல்லை. எம்மை மேம்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அணியினர் மற்றும் முகாமையாளர்களுடன் ஆலோசித்து, கொழும்பு போட்டியில் நாம் எமது திறமையை வெளிக்காட்டுவோம்” என்றார்.