ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிவரும் போர்த்துக்கல் நாட்டின் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போதைய தலைமுறையின் சிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார்.
ரியல் மாட்ரிட் அணிக்கு பல்வேறு சாதனைகளைப் பெற்றுக்கொடுத்த இவரால், தன்னுடைய சொந்த நாட்டிற்காகக் கால்பந்து தொடரில் எந்தவொரு சாதனையையும் செய்ய முடியாமல் இருந்தார். ஆனால், சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்துத் தொடரில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி முதன்முறையாக “யூரோ” சாம்பியன் பட்டத்தை வென்றது போர்த்துக்கல்.
கடந்த 2004-ல் இருந்து நான்கு தொடரில் கலந்து கொண்ட ரொனால்டோ இந்த தொடரில்தான் சாம்பியன் பட்டம் வாங்கிக் கொடுத்துள்ளார்.
போர்த்துக்கல் அணி வென்ற மிகப்பெரிய சாம்பியன் பட்டம் இதுவாகும்.
இதனால் போர்த்துக்கல் மக்கள் ரொனால்டோவை கொண்டாடுகிறார்கள். மக்கள் மட்டுமல்ல அவரது சொந்த நகரமான பஞ்சாலும் அவருக்குப் புகழ் சேர்க்கவுள்ளது.
போர்த்துக்கலின் தன்னாட்சி பிராந்தியமான மடீராவின் பஞ்சால் நகரில் பிறந்தவர் ரொனால்டோ.
இங்கு மிகப்பெரிய விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திற்கு “கிறிஸ்டியானோ ரொனால்டோ” என்று பெயர் வைக்கப்பட இருக்கிறது.
இதை மடீரா அதிபர் மிக்வேல் ஆல்பகர்கி உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே கடந்த 1ஆம் திகதி பஞ்சாலில் ரொனால்டா பெஸ்டானா என்ற சர்வதேச ஹோட்டல் நிறுவனத்துடன் இணைந்து “பெஸ்டானா சிஆர்4” என்ற ஹோட்டலைத் தொடங்கி உள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது இபிஸாவில் விடுமுறையைக் கழித்து வருகிறார். அதன்பின் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாட இருக்கிறார்.