சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவிருக்கும் ஒருநாள் மற்றும் T20 தொடர்களுக்கான இங்கிலாந்தின் வீரர்கள் குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகின்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி குறித்த தொடரின் பின்னர் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவுஸ்திரேலிய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில், இந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர்களில் விளையாடும் இங்கிலாந்து அணியின் வீரர்கள் குழாம்களே தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஹெரி கேர்னி, ஜேசன் ரோய் விலகல்<<
அந்தவகையில், இங்கிலாந்தின் வீரர் குழாமை நோக்கும் போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான T20 போட்டிகளில் விளையாடாது நீக்கப்பட்ட விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் ஜோஸ் பட்லர் மற்றும் ஜொப்ரா ஆர்ச்சர் ஆகியோர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடும் வாய்ப்பினை பெற்றிருக்கின்றனர்.
அதேநேரம் இங்கிலாந்தின் டெஸ்ட் அணித்தலைவரான ஜோ ரூட் T20 குழாத்தில் இடம்பெறத்தவறிய போதும் ஒருநாள் அணியில் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். மறுமுனையில், ஜோ ரூட் போன்று பந்துவீச்சு சகலதுறை வீரரான டேவிட் வில்லியும் T20 குழாத்தில் உள்வாங்கப்படாமல் இங்கிலாந்தின் ஒருநாள் அணியில் இணைக்கப்பட்டிருக்கின்றார்.
இதேநேரம் வேகப்பந்துவீச்சாளரான மார்க் வூட் மற்றும் சகலதுறை வீரர் சேம் கர்ரன் ஆகிய இருவரும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருவகைப் போட்டிகளிலும் விளையாடும் சந்தர்ப்பத்தினைப் பெற்றிருக்கின்றனர்.
மார்க் வூட், சேம் கர்ரன் ஆகியோரின் வருகையை அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான T20 குழாத்தில் உள்வாங்கப்பட்டிருந்த வேகப்பந்துவீச்சாளரான சகீப் மஹ்மூட் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருவகைப் போட்டிகளிலும் மேலதிக வீரர்களில் ஒருவராகவே செயற்படவிருக்கின்றார். அதேவேளை லியாம் லிவிங்ஸ்டன் T20 குழாத்திற்கான மேலதிக வீரராகவும், ஜோ டென்லி ஒருநாள் குழாத்திற்கான மேலதிக வீரராகவும் சகீப் மஹ்மூட்டுடன் இணையவிருக்கின்றனர்.
தசை உபாதை ஒன்றுக்கு ஆளான இங்கிலாந்தின் முன்வரிசை துடுப்பாட்ட வீரரான ஜேசன் ரோய் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான T20 போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பினை பெறாது போன போதும் T20 தொடரின் பின்னர் இங்கிலாந்தின் ஒருநாள் அணிக்குழாத்தில் இணைவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், இங்கிலாந்தின் நட்சத்திர சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் சொந்தக் காரணங்கள் கருதி இங்கிலாந்து அணியின் இருவகை குழாம்களிலும் இணையவில்லை.
>>மோர்கன், மலான் அதிரடியுடன் இங்கிலாந்து வெற்றி<<
இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 04 ஆம் திகதி நடைபெறவுள்ள T20 தொடருடன் சௌத்தம்ப்படன் நகரில் ஆரம்பமாக, ஒருநாள் தொடர் செப்டம்பர் 11 ஆம் திகதி தொடக்கம் மன்செஸ்டர் நகரில் இடம்பெறவிருக்கின்றது.
இங்கிலாந்து T20 குழாம் – ஒயின் மோர்கன் (தலைவர்), மொயின் அலி, ஜொப்ரா ஆர்ச்சர், ஜொன்னி பெயார்ஸ்டோவ், டொம் பேன்டன், சேம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சேம் கர்ரன், ஜோ டென்லி, கிறிஸ் ஜோர்டன், டாவிட் மலான், ஆதில் ரஷீட், மார்க் வூட்
மேலதிக வீரர்கள் – லியாம் லிவிங்ஸ்டன், சகீப் மஹ்மூட்
இங்கிலாந்து ஒருநாள் குழாம் – ஒயின் மோர்கன் (தலைவர்), மொயின் அலி, ஜொப்ரா ஆர்ச்சர், ஜொன்னி பெயர்ஸ்டோவ், டொம் பேன்டன், சேம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சேம் கர்ரன், டொம் கர்ரன், ஆதில் ரஷீட், ஜோ ரூட், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்
மேலதிக வீரர்கள் – ஜோ டென்லி, சகீப் மஹ்மூட்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<