டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்த பும்ரா

ICC Test Rankings

32
ICC Test Rankings

டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்த, டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியா – அவுஸ்திரேலியா மோதிய பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இந்த நிலையில், குறித்த டெஸ்ட் போட்டி நிறைவடைந்ததை அடுத்து டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பரித் பும்ரா மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

முதலாவது டெஸ்ட் போட்டியில் மொத்தம் 30 ஓவர்கள் பந்துவீசிய பும்ரா 72 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். எனவே, அவுஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட்டில் வெளிப்படுத்திய திறமை காரணமாக பும்ரா மீண்டும் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக இவர் இந்த ஆண்டு பெப்ரவரி மாதமும் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில முதலிடத்தில் இருந்த தெனனாப்பிரிக்காவின் காகிசோ ரபாடா ஒரு இடம் பின் தங்கி இரண்டாம் இடத்தையும், அவுஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் 4ஆம் இடத்தையும், ரவீந்திர ஜடேஜா 7ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டு இடங்கள் முன்னேறி ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மற்றும் இங்கிலாந்து வீரர் ஹெரி ப்ரூக் முறையே 3 மற்றும் 4வது இடங்களிலும் உள்ளனர்.

இதுதவிர, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி 9 இடங்கள் முன்னேறி இப்பட்டியலில் 13ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் ஐசிசி சகலதுறை வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் முதலிரண்டு இடங்களில் தொடர்கின்றனர். இதுதவிர்த்து பங்களாதேஷ் வீரர்களான சகிப் அல் ஹசன் மூன்றாம் இடத்திலும், மெஹிதி ஹசன் மூன்று இடங்கள் முன்னேறி 4ஆம் இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<