இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது விதிமுறையை மீறிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை ஐசிசி கண்டித்துள்ளதுடன், நன்னடத்தை குறைபாடுக்கான புள்ளியொன்றும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 25ஆம் திகதி ஹைதராபாத்தில் ஆரம்பமாகிய முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுக்கொண்டது.
இந்த நிலையில், குறித்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது 2ஆவது இன்னிங்ஸை ஆடிய போது பும்ரா வீசிய 81ஆவது ஓவரின் ஒரு பந்தை எதிர்கொண்ட ஒல்லி போப் அதை அடித்து விட்டு ஓட்டமொன்றை எடுக்க ஓடினார். அப்போது ஓல்லி போப் ஓடி வரும் வழியில் பும்ரா நின்றார். மறுபுறம் பந்தை பார்த்துக்கொண்டே ஓடிவந்த போப் கடைசி நேரத்தில் பும்ரா இருப்பதை பார்த்து ஒதுங்கி ஓடினார். ஆனாலும், பும்ராவின் தோள்பட்டை அவர் மீது லேசாக உரசி விட்டது. இதுகுறித்து அப்போதே ஒல்லி போப் போட்டி நடுவரிடம் முறையிட்டதால் சர்ச்சையானது. ஆனால் போட்டி முடிந்த பின் இருவரும் கைக்குலுக்கி சமாதானமாக சென்றனர்.
இருப்பினும், அந்த இடத்தில் பும்ரா வேண்டுமென்றே ஓல்லி போப் ஓடிய வழியில் குறுக்கே சென்று மோதியதாக போட்டியின் நடுவர்கள் புகார் செய்தனர். அதை ஏற்றுக் கொண்டு பரிசோதனை செய்த ஐசிசி பும்ராவை கண்டித்துள்ளது. மேலும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள நன்னடத்தைப் புள்ளிகளில் ஒன்றையும் ஐசிசி குறைத்துள்ளது.
குறிப்பாக ஒரு சர்வதேசப் போட்டியின் போது எதிரணி வீரர், நடுவர் அல்லது ஏதேனும் ஒரு நபருடன் உடல் ரீதியாக மோதக்கூடாது என்ற ஐசிசி இன் 2.12 இலக்க அடிப்படை விதிமுறையை பும்ரா மாறியுள்ளதாக ஐசிசி கூறியுள்ளது. எனவே பும்ராவுக்கு ஒரு நன்னடத்தைப் புள்ளி தண்டனையாக கொடுக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. பொதுவாக இந்த விதிமுறையை மீறுபவருக்கு 50 சதவீத அபராதம் மற்றும் 2 நன்னடத்தைப் புள்ளிகள் வழங்கப்படும்.
- டொம் ஹார்ட்லியின் சுழலில் வீழ்ந்தது இந்தியா
- இந்திய டெஸ்ட் குழாத்தில் மாற்றம்
- இந்திய டெஸ்ட் அணியில் இணையும் ரஜாட் படிதார்
ஆனால், கடந்த 24 மாதங்களில் பும்ரா எந்த விதிமுறைகளையும் மீறாமல் நன்னடத்தையுடன் விளையாடியதன் காரணமாக அபராதமின்றி ஒரு குறைமதிப்புப் புள்ளி மட்டும் கொடுக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது. அதை பும்ரா ஏற்றுக் கொண்டதால் மேற்கொண்டு விசாரணை எதுவும் நடத்தப்படாது என்றும் ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் பும்ரா முதல் முறையாக ஐசிசி விதிகளை மீறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேநேரம், அடுத்த 24 மாதங்களில் மேற்கொண்டு இரண்டு நன்னடத்தை புள்ளிகளை பும்ரா இழக்கும் பட்சத்தில் அவருக்கு அபராத தொகை விதிக்கப்படுவதுடன், போட்டியில் விளையாடவும் தடைவிதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<