39 வருடங்களுக்கு பிறகு இந்தியனாக சாதனை படைத்த பும்ரா

796
Image Courtesy - BCCI Twitter

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா ஆசியாவின் முதல் வீரராகவும், 39 வருடங்களுக்கு பிறகு இந்திய வீரர் சார்பாகவும் சாதனை புரிந்துள்ளார்.

சுற்றுலா இந்தியா அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான டெஸ்ட் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகின்றது. இத்தொடரின் மூன்றாவது போட்டி கடந்த 26ஆம் திகதி (புதன்கிழமை) ஆரம்பமானது.

16 வருட சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி

இன்று (28) போட்டியின் மூன்றாம் நாள் நிறைவடைந்துள்ள நிலையில் பல சாதனைகள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றது. அந்த அடிப்படையில் இன்றைய தினமும் இந்திய அணி வீரர் ஒருவரினால் இரண்டு சாதனைகளும், இந்திய அணியினால் மிக மோசமான சாதனையொன்றும் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 443 ஓட்டங்களை பெற்ற வேளையில் தனது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. பதிலுக்கு முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 151 ஓட்டங்களுக்கு சுருண்டு போனது.

இதன் போதே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா 33 ஓட்டங்களக்கு 6 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார். இந்த 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியதனூடாகவே பும்ரா இரண்டு சாதனைகளுக்கு சொந்தக்காரராக மாறியுள்ள அதேவேளை முதல் சாதனையாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

2018 ஜனவரி 5ஆம் திகதி கேப்டவுனில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் டெஸ்ட் அறிமுகம் பெற்ற பும்ரா அறிமுக ஆண்டில், அதாவது இந்த ஆண்டில் (2018) தென்னாபிரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய மண்ணில் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் ஆசிய வீரர் என்ற பெருமையை தன்வசப்படுத்தியுள்ளார்.

அது மாத்திரமல்லாமல் இந்திய அணி சார்பாக 39 ஆண்டுகால சாதனையையும் இன்று (28) இவர் முறியடித்துள்ளார். டெஸ்ட் அறிமுகம் பெற்ற ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் 39 வருடங்களுக்கு பிறகு பும்ரா முன்னிலை பெற்றுள்ளார்.

1979ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் அறிமுகம் பெற்ற திலிப் டோஷி அந்த வருடம் 40 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். அதனையே தற்போது பும்ரா முறியடித்து 45 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

இந்த வருடத்தில் பும்ரா பந்து வீசுவதற்கு இன்னும் ஒரு இன்னிங்ஸ் மாத்திரம் எஞ்சியுள்ள நிலையில் அவர் மொத்தமாக எத்தனை விக்கெட்டுக்களை 2018 இல் வீழ்த்தப் போகின்றார் என்பதை நாளை அல்லது நாளை மறுதினம் அவதானிக்க முடியும்.

சர்வதேச ரீதியில் தற்போது நான்காமிடத்தில் இருக்கு இவருக்கு இன்னும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினால் சர்வதேச ரீதியில் குறித்த சாதனையை நிகழ்த்தக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். அல்லது 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினால் இரண்டாமிடத்தை தக்கவைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.

25 வயதாகும் பும்ரா இதுவரையில் 93 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் மொத்தமாக 171 சர்வதேச விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இந்திய அணி சிக்கலான நிலைமைகளில் காணப்படும் போது அணியின் தேவைக்கேற்ப பந்து வீசக்கூடிய ஒரு வேகப்பந்து வீச்சாளராக பும்ரா காணப்படுகின்றார்.

இவ்வாறு பும்ரா இரண்டு சாதனைகளை நிகழ்த்தியுள்ள நிலையில், இரண்டாவது இன்னிங்சுக்காக தற்போது துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி தடுமாறி வருகின்றது.

292 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி இன்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவின் போது வெறும் 54 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து போராடி வருகின்றது.

தென்னாபிரிக்க அணி சார்பாக அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்திய டேல் ஸ்டெய்ன்

குறித்த 5 விக்கெட்டுக்கள் இழக்கப்பட்டதற்குள் இந்திய அணி மிக மோசமான சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்திய அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அதாவது 3ஆவது வீரரிலிருந்து 6ஆவது வீரர் வரை அதிக குறைந்த ஓட்டங்கள் பெற்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.

வெறும் ஆறு ஓட்டங்களையே குறித்த 4 மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களும் பெற்றிருந்தனர். (புஜாரா – 0, கோஹ்லி – 0, ராஹானே – 1, ரோஹிட் – 5)

இந்திய அணியானது இதற்கு முன்னராக 1946ஆம் ஆண்டு 6 ஓட்டங்களை இங்கிலாந்து அணிக்கெதிராகவும், 9 ஓட்டங்களை முறையே நியூஸிலாந்து (1969), மேற்கிந்திய தீவுகள் (1983) அணிகளுக்கு எதிராகவும் பெற்றிருந்தது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<