இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் கிரிக்கட் வீரரான எட்ரியன் சென் ஜோன் கொள்ளையர்களால் கொடூரமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிரிக்கட் வீரரான எட்ரியன் சென் ஜோன் இங்கிலாந்தின் லண்டண் நகரில் அமைந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்லின் கிரிக்கட் எகடமியில் விளையாடி வருகிறார். எதிர்காலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாட திட்டமிட்டிருந்த எட்ரியன் சென் ஜோன், விடுமுறைக்காக மேற்கிந்திய தீவுகளில் உள்ள டிரினிடாட் நகரிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் கடந்த 10ஆம் திகதி இரவு அங்குள்ள சான் ஜூவான் என்ற பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த எட்ரியன் சென் ஜோனை கொள்ளையர்கள் வழி மறித்து அவரின் கையடக்கத் தொலைபேசி மற்றும் பணத்தைப் பறித்து விட்டு விரட்டியுள்ளனர்.
அப்போது ஒரு கொள்ளைக்காரன் எட்ரியன் சென் ஜோனின் காரை நோக்கி சுட்டதில் அவரது தலையின் பின் பகுதியில் குண்டு பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக கிறிஸ் கெய்ல் தனது டுவிட்டர் செய்தியில் கூறுகையில், “கேட்கவே வருத்தமாக இருக்கிறது. எட்ரியன் எனது எகடமியின் தலைவர். அவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.